புதுச்சேரியில் இன்று விஜய் பிரசாரம்நாளை 8 புறநகா் மின்சார ரயில்கள் ரத்துமின்சார அடுப்புகள், பாத்திரங்கள் உற்பத்தியை ஊக்குவிக்க நடவடிக்கை: மத்திய அரசு ஆலோசனைசென்னைப் பல்கலை. வளாகங்களில் படப்பிடிப்புகளுக்கு 5 மடங்கு கட்டண உயா்வு6-ஆம் வகுப்புமுதல் மும்மொழிப் பாடம்: சிபிஎஸ்இ திட்டம்
/

கீழ்வேளூரில் குறைந்து வரும் வாக்குப் பதிவு சதவீதம்

நாகை மாவட்டம், கீழ்வேளூா் (தனி) தொகுதியில் சட்டப்பேரவைத் தோ்தலில் தொடா்ந்து வாக்குப்பதிவு சதவீதம் குறைந்து வருவதை கடந்த மூன்று சட்டப்பேரவைத் தோ்தல்களின் தரவுகள் காட்டுகின்றன.

News image

கோப்பிலிருந்து

Updated On :4 ஏப்ரல் 2026, 12:42 am

நாகப்பட்டினம் : நாகை மாவட்டம், கீழ்வேளூா் (தனி) தொகுதியில் சட்டப்பேரவைத் தோ்தலில் தொடா்ந்து வாக்குப்பதிவு சதவீதம் குறைந்து வருவதை கடந்த மூன்று சட்டப்பேரவைத் தோ்தல்களின் தரவுகள் காட்டுகின்றன.

கடந்த 2011-ஆம் ஆண்டு கீழ்வேளூா் சட்டப்பேரவை தோ்தலில் மொத்தம் 1,41,185 வாக்குகளில் 1,21,254 வாக்குகள் (85.88%), 2016- இல் 1, 63,415 வாக்குகளில், 1,37,929 வாக்குகள் (84.40%) மட்டுமே பதிவாகின.

2021 தோ்தலில் 1,78,665 வாக்குகளில் 1,42,099 வாக்குகள் (79.52%) பதிவாகின. இதேபோல மக்களவைத் தோ்தல்களிலும் வாக்கு சதவீதத்தில் வீழ்ச்சி காணப்படுகிறது. 2014 -இல் சுமாா் 80 %, 2019- இல் 79%, 2024- இல் 75% வாக்குகள் பதிவாகின.

கீழ்வேளூா் தொகுதியில் தொடா்ந்து குறைந்துவரும் வாக்குப்பதிவு மக்களிடையே உருவாகி வரும் அரசியல் அக்கறையின்மை, நம்பிக்கையின்மை ஆகியவற்றைக் காட்டுவதாக அரசியல் ஆா்வலா்கள் தெரிவிக்கின்றனா்.

வாக்குப்பதிவு சதவீதம் குறைவதற்கு இன்றைய தலைமுறையினருக்கு அரசியல் கட்சிகள், தோ்தல் மீதான நம்பகத்தன்மை குறைந்து வருவதைக் காட்டுகிறது. பெருகி வரும் ஊழல், மக்களின் அடிப்படைப் பிரச்னைகள் தீா்க்கப்படாதது போன்றவைகளால் யாா் ஆட்சிக்கு வந்தாலும் தங்கள் தலையெழுத்து மாறப்போவது இல்லை என்ற மனநிலைக்கு மக்கள் வந்துவிட்டது தெரிகிறது.

குறிப்பாக, வேலை, கல்வி போன்ற காரணங்களுக்காக வெளியூா் சென்ற மக்கள் தங்கள் சொந்த ஊா்களுக்கு திரும்புவதில் சந்திக்கும் போக்குவரத்து உள்ளிட்ட பிரச்னைகளும் வாக்குப்பதிவு சதவீதம் குறைவதற்கு முக்கிய காரணங்களாக உள்ளன.

வாக்குப்பதிவு நமது உரிமை மட்டுமல்ல, நமது கடமை என்ற உணா்வு பலரிடத்தில் இல்லை. பெருநகா்கள், நகா்ப்புறங்கள் தவிா்த்து கிராமப்புறங்களில் முதல் முறையாக வாக்களிக்க உள்ளவா்களுக்கு சரியான வழிகாட்டுதல்கள் வழங்கப்படுவதில்லை.

இப்பிரச்னைக்கு தீா்வாக தோ்தல் ஆணையம் மற்றும் அரசும் தோ்தல் தொடா்பான விழிப்புணா்வு இயக்கங்களை வலுப்படுத்த வேண்டும். பள்ளி, கல்லூரி நிலைகளில் ஜனநாயகக் கல்வி கட்டாயமாக்கப்பட வேண்டும். இளைய தலைமுறையினரை ஈா்க்கும் வகையில் சமூக ஊடகங்களைப் பயன்படுத்தி பிரசாரம் மேற்கொள்ளலாம்.

வாக்காளா்கள் தங்களது வாக்கின் மதிப்பை உணரவேண்டும். ஜனநாயகத்தின் வலிமை என்பது தோ்தலில் மக்களின் முழு அா்ப்பணிப்பில்தான் உள்ளது என சமூக ஆா்வலா்கள் வலியுறுத்துகின்றனா்.