சட்டப்பேரவைக்கு வரக்கூடாது என உதயநிதி பேசியிருப்பார்: அமைச்சர் அருண்ராஜ்உதயநிதியை இன்றே விடுவிக்க வேண்டும்! சென்னை உயர் நீதிமன்றம்!எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி கைது நடவடிக்கையில் சந்தேகம்: எடப்பாடி பழனிசாமிஉதயநிதியை அவசரமாக கைது செய்தது ஏன்? அன்புமணி கண்டனம்!உதயநிதி கைது! தமிழ்நாடு முழுவதும் திமுக போராட்டம்!உதயநிதி கைது: தேனியில் சாலை மறியலில் ஈடுபட்ட ஓபிஎஸ் கைது!எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி கைது! தஞ்சை அழைத்துச் செல்லப்படுகிறார்எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி கைது!உதயநிதியை அழைத்துச் செல்லும் வாகனத்தை மறித்து திமுகவினர் போராட்டம்!உதயநிதி விவகாரம்: சென்னை உயர்நீதிமன்றத்தில் அவசர முறையீடு!
/

உதயநிதி கைது! வழக்குரைஞர் என்.ஆர். இளங்கோ மேற்கோள் காட்டிய இம்ரான் பிரதாப்கரி யார்?

உதயநிதி கைது வழக்கில், இம்ரான் பிரதாப்கரி வழக்கை மேற்கோள் காட்டி வழக்குரைஞர் என்.ஆர். இளங்கோ பேசியிருக்கிறார். இம்ரான் பிரதாப்கரி யார் என்பது பற்றி..

News image

எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி - video grab

Updated On :4 ஆகஸ்ட் 2026, 3:48 pm IST

முதல்வர் விஜய் மற்றும் பெண்கள் குறித்து கடுமையாக பேசியதாக சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி கைது வழக்கில், திமுக சார்பில் ஆஜரான வழக்குரைஞர் என்.ஆர். இளங்கோ இம்ரான் பிரதாப்கரி என்பவர் வழக்கில் உச்ச நீதிமன்றம் வெளியிட்ட வரையறை குறித்து குறிப்பிட்டுள்ளார்.

தஞ்சாவூரில் காவிரி விவகாரம் தொடர்பாக திமுக நடத்திய ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு பேசிய பேரவை எதிர்க்கட்சித் தலைவர், தமிழக முதல்வர் விஜய் மற்றும் பெண்கள் குறித்து கடுமையாக விமர்சித்துப் பேசியிருந்தார்.

இதற்கு எதிராக உதயநிதி மீது தஞ்சாவூரில் ஒன்பது பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, தஞ்சை காவல்துறை இன்று அவரை கைது செய்தது.

முன்னதாக, அவரைக் கைது செய்யக் கூடாது என்று உத்தரவிடக் கோரி திமுக சார்பில் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம், உதயநிதியை கைது செய்யக் கூடாது, இன்றே அவரை விடுவிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல இடைக்கால உத்தரவுகளை பிறப்பித்தது.

இந்த வழக்கு விசாரணை குறித்து திமுக சார்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞர் என்.ஆர். இளங்கோ நீதிமன்றத்துக்கு வெளியே செய்தியாளர்களிடம் பேசுகையில், உதயநிதி பேசியதில் உள்நோக்கம் கற்பித்துள்ளார்கள். உயர் நீதின்ற உத்தரவை மீறி உதயநிதி வலுக்கட்டாயமாக கைது செய்யப்பட்டுள்ளார் என்று எங்கள் தரப்பில் வாதத்தை முன் வைத்தோம்.

காவல்துறை தரப்பில், உதயநிதியை ரிமாண்ட் செய்ய வேண்டிய அவசிமியல்லை. காவல்நிலையத்தில் விசாரணை நடத்தி பிறகு, காவல்நிலைய ஜாமீனில் விடுவிக்கப் போகிறோம் என்று கூறப்பட்டது. நாளை முக்கியமான சட்டப்பேரவைக் கூட்டத் தொடர் இருப்பதால் இன்றே விசாரணையை முடித்துக் கொண்டு இன்றே அவரை விடுவிக்க வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டார் என்று என்.ஆர். இளங்கோ கூறினார்.

மேலும், அவர் இம்ரான் பிரதாப்கரி என்பவர் வழக்கு குறித்தும் மேற்கோள் காட்டினார்.

அது பற்றி அவர் கூறுகையில், இம்ரான் பிரதாப்கரி என்பவர் வழக்கில், உச்ச நீதிமன்றம் சட்டப் பிரிவு 196ல் வழக்கு பதிவு செய்வதற்கு முன்பாக, காவல் ஆய்வாளர் என்னவெல்லாம் செய்ய வேண்டும் என்பது குறித்த நீண்ட வரையறை கொடுத்திருக்கிறது.

அந்த வரையறை தெரிந்திருந்தும், அதனை உள்நோக்கத்தோடு பின்பற்றாமல் இந்த வழக்கைப் பதிவு செய்து எதிர்க்கட்சித் தலைவரை கைது செய்து, எப்படியாவது அவர் நாளை பேரவைக்குள் வரவிடாமல் தடுக்க முயற்சி செய்தார்கள்.

ஆனால் வழக்கம் போல நீதிமன்றம் தலையிட்டு, இன்று உதயநிதி கைது நடவடிக்கையை தடுத்து நிறுத்தி, தமிழ்நாட்டில் சர்வாதிகாரம் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது என்று குறிப்பிட்டார்.

என்.ஆர். இளங்கோ குறிப்பிட்ட இம்ரான் பிரதாப்ரி குறித்து அறிந்து கொள்ள.. இப்படியும் ஒரு வழக்கு... கவிஞர் இம்ரான் பிரதாப்கரி! கவிதைதான் குற்றம் -19 என்ற தலைப்பில் தினமணியில் ஆங்கிலப் பேராசிரியர் இராஜ முத்திருளாண்டி எழுதிய கட்டுரையில் கிடைத்திருக்கும் தகவல்கள்.

உச்சநீதிமன்றம் செல்லுவதற்கு முன்பு நாம் கவிஞர் இம்ரான் பிரதாப்கரி குறித்து சிறிது அறிந்து கொண்டு செல்வோமே...

தற்போது இந்திய அரசியலிலும் உருதுக் கவிதைப் பரப்பிலும் பேரலைகளை நிகழ்த்திக்கொண்டிருக்கும் இனிய தோற்றத்து இளம்புயல், உத்தரப்பிரதேசத்தின் பிரதாப்கரில் ஆகஸ்ட் 6, 1987-இல் பிறந்தவர். அவரது தந்தையார் முகமது இலியாஸ் கான் ஒரு யுனானி மருத்துவர்; தாய் இல்லத்தரசி, உள்ளூரில் சமூக சேவைகள் செய்து வந்தவர். இம்ரானுக்குப் பெற்றோர்கள் இட்ட பெயர்: முகமது இம்ரான்கான். தனது சொந்த ஊரான பிரதாப்கருடன் உள்ள வலுவான பிணைப்பை வெளிப்படுத்தும் வகையில் இம்ரான் பிரதாப்கரி (Imran Pratapgarhi) என மாற்றிக்கொண்டார்.

நாடாளுமன்ற வளாகத்தில் ராகுல் காந்தியுடன் இம்ரான் பிரதாப்கரி

நாடாளுமன்ற வளாகத்தில் ராகுல் காந்தியுடன் இம்ரான் பிரதாப்கரி

ராகுல் காந்தி - இம்ரான் இடையே 2018 இல் நிகழ்ந்த ஒரு சாதாரண சந்திப்பு குறிப்பிடத்தக்க அரசியல் பின்புலம் ஏதுமிலாத இம்ரானை 2019 நாடாளுமன்றத் தேர்தலில் உ.பியில், முக்கியமான தொகுதியான முஷாபர்பூர் காங்கிரஸ் வேட்பாளராக நிறுத்தியது. முதல் அரசியல் களத் தேர்தல் இம்ரானுக்கு வெற்றியை வழங்கவில்லை. தேர்தலில் வெற்றி பெறாவிட்டாலும், இம்ரானின் தேர்தல் பரப்புரைகள், மக்களின் ஊடே சென்று அவர்களை இயல்பாக, எளிதாக அவர் அணுகும் முறைகள் பலதரப்புக் கவனத்தையும் ஈர்த்தன.

அரசியல் புதுமுகம், கவிமுகம், இம்ரான் பிரதாப்காரியின் அர்ப்பணிப்பை, விடாமுயற்சியை அங்கீகரிக்கும் அடையாளமாக 3 ஜூன் 2021-இல் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் (ஏ.ஐ.சி.சி) சிறுபான்மை துறையின் தலைவராக இம்ரான் நியமிக்கப்பட்டார். சிறுபான்மை மக்களின் பிரச்சினைகளை வெளிப்படுத்துவதில் உள்ள ஆற்றல், தீர்வுகளுக்காக உழைக்கும் அவரது ஈடுபாடு ஆகியவை சிறுபான்மை மக்களிடையே நல்வரவேற்பைப் பெற்றுவருகிறது.

அரசியல் ஏணியில் தொடர்ந்த ஏறுமுகத்தில் ஜூன் 2022 இல், அவர் மகாராஷ்டிராவிலிருந்து இந்திய தேசிய காங்கிரஸ் வேட்பாளராக மாநிலங்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இது அவரது அரசியல் பயணத்தில் மற்றொரு குறிப்பிடத்தக்க மைல்கல். தேர்ந்தெடுக்கப்பட்டுப் பொறுப்பேற்றுக்கொண்ட நாள் (5-7-2022) முதல் அனைத்துத் தரப்பு மக்களின் கருத்துக்களை, விழைவுகளை, பிரச்சினைகளை மாநிலங்களவையில் 94% வருகைப்பதிவுடன், வலுவாக எடுத்துரைக்கும் குரலாகச் செயல்பட்டு வருகிறார். கவிதைகள் விரவிய அவரது உரைகள் அவையிலும் வெளியிலும் அனைவரின் கவனத்தையும் ஈர்த்து வருகின்றன.

வாங்க... உச்சநீதிமன்றம் சென்று கவனிக்கலாம்.

அகமதாபாத் ஜாம்நகர் காவல் நிலையத்தில் தன்மீது (மற்ற இருவருடன் சேர்த்து) பதிவு செய்யப்பட்டிருக்கும் 3-1-2025 நாளிட்ட எஃப்.ஐ.ஆரை அடியோடு இரத்து செய்ய வேண்டி முன்வைத்த இம்ரானின் கோரிக்கையை, குஜராத் உயர்நீதிமன்றம், நீதிபதி சந்தீப் என் பட் வழங்கிய 17-1-2025 நாளிட்ட இறுதி உத்தரவின் மூலம் தள்ளுபடி செய்துவிட்டதை அறிவோம்.

ஆகவே, இந்திய அரசியலமைப்புச் சட்டம் தன் குடிமக்களுக்கு விஸ்தாரமாக வழங்கியிருக்கும் அடிப்படை உரிமைகளின் ஆதாரத்தில், குறிப்பாக கருத்துக்கூறும் உரிமைகளின் தளம் நின்று, தக்க நிவாரணம் வேண்டி உச்சநீதிமன்றத்தில் இம்ரான் பிரதாப்கரி மேல்முறையீடு செய்ய சிறப்பு அனுமதிகோரிய மனு 21-1-2025 இல் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

மனுதாரர்(கள்) சார்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞர் கபில் சிபில் எடுத்துரைத்த வாதத்தை கேட்டு, மனுவை ஆராய்ந்த மாண்புமிகு நீதிபதி அபய் எஸ்.ஓகா, மாண்புமிகு திரு நீதிபதி உஜ்ஜல் புயான் ஆகியோர் கொண்ட அமர்வு, கீழ்காண்பவை அடங்கிய ஆணையைப் பிறப்பித்தது.

இம்ரான் (மற்ற இருவர்) தாக்கல் செய்துள்ள மேல்முறையீட்டுக்கான சிறப்பு அனுமதி வழங்கப்படுகிறது.

எதிர் மனுதாரர்களுக்கு - குஜராத் அரசு மற்றும் தொர்புடையவர்கள்- 10 பிப்ரவரி, 2025-க்குள் மனுமீது பதிலளிக்க நோட்டீஸ் அனுப்பலாம்.

இதற்கிடையில், குஜராத்தின் ஜாம்நகரில் உள்ள சிட்டி ஏ-டிவிஷன் காவல் நிலையத்தில் 2025 ஜனவரி 3 ஆம் தேதியிட்ட முதல் தகவல் அறிக்கை (எஃப்.ஐ.ஆர்) எண்.11202008250014 / 2025 இன் அடிப்படையில் எந்த வகையிலும் மேல் நடவடிக்கைகள் எடுக்கப்படாது.

(Case: Imran Pratapgarhi v. State of Gujarat, Case Number: SCRA(Q) No. 551/2025)

மாண்புமிகு நீதிபதிகள் அபய் எஸ்.ஓகா, உஜ்ஜல் புயான் ஆகியோர் கொண்ட அமர்வு, 21-1-2025 நாளிட்ட ஆணையில் மூன்றாவதாகக் குறிப்பிட்டுள்ள நிவாரணம் தற்காலிகமானது என்றாலும், முக்கியமானது.

இதன்மூலம், சமூகஊடக வலைத்தளத்தில் இம்ரான் வெளியிட்ட விடியோவில் பின்னணியில் ஒலிக்கும்‘’ஏ கூன் கே பியாஸ் பாத் சுனோ..." உருதுக் கவிதையின் உள்ளடக்கத்தைக் குஜராத் காவல் நிலையத்தில் புகாரளித்தவர், புகார் பதிவு செய்த காவல் துறை புரிந்துகொண்டதன் அடிப்படையில்; புகாரின் முதற்காட்சியிலேயே (prima facie) குற்ற முகாந்திரம் தென்படுகிறது எனக் கண்டறிந்த குஜராத் உயர்நீதிமன்ற ஆணை ஆகியவைகள் மேற்கொள்ள விரும்பிய, மேற்கொள்ள முனையும் அனைத்து நடவடிக்கைகள் மீதும் முதல் ஆணி அடிக்கப்பட்டுவிட்டது என்பதே இந்த நிவாரணத்தின் முக்கியத்துவமாகும்.

இந்த வழக்கு மார்ச்3-இல் உச்சநீதிமன்றத்தின் மாண்புமிகு நீதிபதிகள் அபய் எஸ்.ஓகா, உஜ்ஜல் புயான் ஆகியோர் கொண்ட அமர்வின் முன் மீண்டும் விசாரணைக்கு வந்தது.

இந்தமுறை விசாரணையின்போது மனுதாரரின் மூத்த வழக்கறிஞர் கபில் சிபல், அரசுசார்பு/எதிர் தரப்பு சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா இடையே சட்டம், இலக்கிய விவாதங்களைக் கொண்ட நகைச்சுவையான பரிமாற்றங்களும் நிகழ்ந்தன.

நீதிபதிகள் அபய் எஸ்.ஓகா , உஜ்ஜல் புயான் அமர்வு இந்த வழக்கைக் காவல்துறையினர் எவ்வாறு மேம்போக்காகக் கையாண்டுள்ளனர் என்பது, நம்நாட்டில் பேச்சு, கருத்து சுதந்திரத்திற்குரிய மதிப்பை அடிக்கோடிட்டுக் காட்டவேண்டியதாக ஆக்கியுள்ளதெனக் கருத்துத் தெரிவித்தது.

குஜராத் அரசு சார்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, உண்மையில் மனுதாரர் பிரமாணப் பத்திரத்தில் குறிப்பிட்டுள்ளபடி, இந்த கவிதை ஹபீப் ஜலிப் அல்லது ஃபைஸ் அகமது ஃபைஸ் போன்ற பிரபல உருதுக் கவிஞர்களின் படைப்பாக இருக்க வாய்ப்புள்ள தகுநிலையில் உள்ளதா என்று கேள்வி எழுப்பினார். மேலும், "இதன் நிலை ஒருபோதும் ஃபைஸ் அல்லது ஹபீப் ஜலிப் ஆக இருக்க முடியாது" என்றும் (விடியோவிலுள்ள) கவிதையை ஒரு "சதக் சாப்" (அற்பம்/ சாதாரணமான/ பாதசாரி) கவிதை என்று விமர்சித்தார்.

சிறந்த கவிஞருமான வழக்குரைஞர் கபில் சிபல் நகைச்சுவையாக "என் கவிதைகளும்கூட ’சதக் சாப்’தான்” என்று பதிலளித்தார். நீதிமன்ற விவாத வெப்பத்தைத் தணித்தன, கபில் சிபல் பற்றி துஷார் மேத்தாவின் புகழ்ச்சியும், பம்பாய் உயர்நீதி மன்றத்திலிருந்து கர்நாடகத் தலைமை நீதிபதியாகிக் கடந்த மூன்றாண்டுகளாக உச்சநீதிமன்ற நீதிபதியாகப் பணியாற்றி வரும் மே 24-இல் பணிநிறைவு பெற இருக்கும் நீதிபதி அபய் ஶ்ரீனிவாஸ் ஓகா அவர்களது குறுக்கீடும்.

அரசுத்தரப்பில் நின்று கபில்சிபலுக்கு எதிராக வழக்காடும் துஷார் மேத்தா, கபில் சிபலின் கவிதைகளைப் புகழ்ந்துரைத்தார். நீதிபதி ஓகாவும் நகைச்சுவையான விவாதத்தில் கலந்து கொண்டார்.

மூத்த வழக்குரைஞர் கபில்சிலை நோக்கி, “ உங்கள் கவிதைகளை சதக் சாப் என்று வகைப்படுத்த வேண்டாம். ஏனென்றால் மே மாத இறுதியில் நீங்கள் எனக்காக ஒரு கவிதை எழுத வேண்டியதிருக்கும். அதனால் தயவு செஞ்சு அப்படி சொல்லாதீங்க" என்றார்.

இந்த நகைச்சுவை கடந்து, சீரியஸாகி, பிரதாப்கரி பகிர்ந்த கவிதை குறித்த தனது விமர்சனத்தைத் தொடர்ந்த துஷார் மேத்தா, "இது ஒரு கவிதை என்பதை நான் ஒப்புக் கொள்ளவில்லை. ஏன்? ஷேர் கபி அச்சா யா புரா நஹி ஹோதா; யா ஹோத்தா ஹை யா நஹி ஹோடா" என்றார்.

நீதிபதி ஓகா மகிழ்ச்சியுடன், "இப்போது நீங்கள் அவருடன் போட்டியிட விரும்புகிறீர்களா? கவிதை எழுதுவதில்?" எனவும், இம்முறை கபில் சிபல், துஷார் மேத்தாவைத் தூக்கிப் புகழ்ந்தார். ”மேத்தா முயற்சி செய்யவேண்டியதில்லை; கவிதை அறிவுச் செல்வம் அவரிடம் ஏற்கனவே நிறைந்திருக்கிறது" என்றார்.

நீதிபதி ஒகா “அரசு வழக்குரைஞர் மேத்தாவுக்குக் கவிதை எழுதுவதற்குப் போதிய நேரம் இருக்காது” என்று சிரித்தார்.

மேத்தாவும் வேடிக்கையாகப் பதிலளித்தார். "இல்லை, இல்லை எனக்கு நேரமாகிறது. கவிஞனாக ஆவதற்கு காதலில் விழ வேண்டும் என்று மக்கள் கூறுகிறார்கள். நான் ஒருபோதும் அவ்வாறு விழவில்லையே” என்று கைவிரித்தார்.

நகைச்சுவைக் குளிர்ச்சியினூடே இந்த வழக்கை விசாரிக்கும் நீதிபதி ஓகா ஆணியடித்தாற்போலக் குறிப்பிட்டுள்ளது கவனிக்க வேண்டியதாகிறது. இது இந்த வழக்கின் இறுதித் தீர்ப்பல்ல; தீர்ப்பின் திசையைக் காட்டும் கைகாட்டி.

"இந்த வழக்கின் பின்னணியில் உள்ள காரணம் குறித்து நீதிமன்றம் கேள்வி எழுப்ப வேண்டியுள்ளது. எஃப்.ஐ.ஆர் பதிவு செய்வதற்கு முன்பு காவல்துறையினர் சில உணர்திறனைக் (Sensitivity to Poetry and the Constitution) கொண்டிருக்க வேண்டும். இதுதான் பிரச்சினை. அவர்கள் குறைந்தபட்சம் அரசியலமைப்பின் பிரிவுகளையாவது படித்துப் புரிந்து கொள்ள வேண்டும். அரசியலமைப்பு உருவாக்கப்பட்டு எழுபத்தைந்து ஆண்டுகளுக்குப் பிறகு இப்போதாவது குறைந்தபட்சம் பேச்சு சுதந்திரம், கருத்துக்கூற மக்களுக்குள்ள சுதந்திரம் முதலியவற்றை காவல்துறை புரிந்து கொள்ள வேண்டும்.

இப்போது படைப்பாற்றல் மீது யாருக்கும் மரியாதை இல்லை. நீங்கள் அக்கவிதையைத் தெளிவாகப் படித்தால், ‘நீங்கள் அநீதியை அனுபவித்தாலும், அதை அன்புடன் பொறுத்துக்கொள்ளுங்கள்’ என்று கவிதை கூறுகிறது; ‘மக்கள் இறந்தாலும் அதை நாங்கள் ஏற்றுக்கொள்வோம்’ என்கிறது. இந்தக் கவிதை எந்த மதத்திற்கும் எதிரானது அல்ல. யாராவது வன்முறையில் ஈடுபட்டாலும் நாங்கள் வன்முறையில் ஈடுபட மாட்டோம் என்பதைத்தானே மறைமுகமாக இக்கவிதை சொல்கிறது. இதுதான் கவிதை சொல்லும் செய்தி. பேச்சு மற்றும் கருத்து சுதந்திரம் என்று வரும்போது, வேறொரு நிகழ்ச்சி நிரல் (Agenda) இருக்க முடியாது. அதை நாம் நிலைநிறுத்த வேண்டும். குறைந்தபட்சம் கவிதையின் பொருளையாவது புரிந்து கொள்ள முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்பதே நமது கவலை. அதுதான் எங்கள் கவலை" என்றார்.

எஃப்.ஐ.ஆரை ரத்து செய்வதற்கான பிரதாப்காரியின் மனுவை நிராகரித்த குஜராத் உயர் நீதிமன்றத்தின் முடிவையும் பெஞ்ச் விமர்சித்தது.

அரசு தரப்பு வழக்கறிஞரிடம் நீதிமன்றம் கூறியதாவது, "கவிதையில் உங்கள் மனதைச் செலுத்துங்கள்; இறுதியில், படைப்பாற்றலும் முக்கியமானது என்பதை உணருங்கள்” என்றார் நீதிபதி ஓகா.

Summary

Udhayanidhi arrested! Lawyer cites the Imran Pratapgarhi case! Who is Imran Pratapgarhi?

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.