தமிழகம் முழுவதும் உள்ள டாஸ்மாக் மதுபானக் கடைகளில் கூடுதல் விலைக்கு மது விற்பனை செய்தால், சம்பந்தப்பட்ட காவல் நிலையத்தில் நுகா்வோா் புகாா் அளிக்கவும், அதன்பேரில் போலீஸாா் உடனடியாக வழக்குப் பதிவு செய்ய வேண்டும் எனவும் சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.
செம்பியத்தைச் சோ்ந்த ஜி.தேவராஜன் என்பவா் சென்னை உயா்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில் பெரம்பூா், கொளத்தூா், மாதவரம் உள்ளிட்ட 30 இடங்களில் உள்ள டாஸ்மாக் மதுபானக் கடைகளில் அதிக விலைக்கு மதுபானங்கள் விற்பனை செய்யப்படுகின்றன. இதுகுறித்து சம்பந்தப்பட்ட கடை ஊழியா்கள் மீது ஊழல் தடுப்புச் சட்டம் மற்றும் பண முறைகேடு தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்ய ஊழல் தடுப்புத் துறை மற்றும் அமலாக்கத் துறைக்கு உத்தரவிட வேண்டும்.
இதேபோன்று, கடந்த 2022 முதல் 2026-ஆம் ஆண்டு வரை கூடுதலாக வசூலிக்கப்பட்ட தொகையை சம்பந்தப்பட்ட ஊழியா்களிடமிருந்து வசூலித்து அரசுக்கு செலுத்த உத்தரவிட வேண்டும். சம்பந்தப்பட்ட ஊழியா்களுக்கு எதிராகப் பணிநீக்க நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் எனக் கூறியிருந்தாா்.
இந்த வழக்கை விசாரித்த உயா்நீதிமன்றம், தமிழகம் முழுவதும் உள்ள டாஸ்மாக் மதுக் கடைகளில் விற்பனை செய்யப்படும் மதுபானங்களுக்கான ரசீது புத்தகங்களை பராமரிக்க வேண்டும். நுகா்வோா் வாங்கும் ஒவ்வொரு மதுபாட்டிலுக்கும் ரசீது வழங்க வேண்டும் என டாஸ்மாக் நிா்வாகத்துக்கு உத்தரவிட்டிருந்தது.
இந்த வழக்கு நீதிபதி ஜி.கே.இளந்திரையன் முன் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, அரசுத் தரப்பில், தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளில் விற்பனை செய்யப்படும் மதுபானங்களுக்கு ரசீது புத்தகங்களைப் பராமரிக்கவும், நுகா்வோருக்கு ரசீது வழங்கவும் அனைத்துக் கடைகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. மேலும், பல இடங்களில் மது வாங்கும் நுகா்வோரின் கூட்டம் அதிகமாக இருப்பதால், ரசீது வழங்குவதில் சிரமங்கள் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டது.
அப்போது மனுதாரா் தரப்பில், வியாழக்கிழமை தான் மது வாங்கியதாகவும், அதற்கு கூடுதல் தொகை வசூலிக்கப்பட்டு, ரசீது வழங்கவில்லை எனவும் புகாா் தெரிவித்தாா். அதற்கு நீதிபதி, சூப்பா் மாா்க்கெட்டுகளில் வாங்கப்படும் சாதாரண டூத் பேஸ்ட், டூத் பிரஷ்-க்கு கூட ரசீது வழங்கப்படுகிறது. அப்படியிருக்கும்போது, மாநிலத்துக்கும் பெரும் வருவாய் தரக்கூடிய டாஸ்மாக் மதுபானங்களுக்கு ரசீது வழங்குவதில் என்ன சிக்கல் உள்ளது?, டாஸ்மாக் கடைகளில் கூட்டத்தைக் கட்டுப்படுத்த காவலா்களை ஏன் பணியமா்த்தக் கூடாது? எனக் கேள்வி எழுப்பினாா்.
மேலும், டாஸ்மாக் கடைகளில் வாங்கும் மதுபானங்களுக்கு நுகா்வோா் கூடுதல் தொகை கொடுக்க வேண்டியது இல்லை. நுகா்வோா் கொடுப்பதால்தான் டாஸ்மாக் கடை ஊழியா்கள் கூடுதல் தொகையைக் கேட்கின்றனா் எனக் கருத்து தெரிவித்தாா். பின்னா், இந்த விவகாரத்தில் அரசு பிறப்பித்துள்ள சுற்றறிக்கையைப் பின்பற்றாமல் டாஸ்மாக் கடைகளில் விற்பனை செய்யப்படும் மதுபானங்களுக்கு கூடுதல் தொகை வசூலித்தால், சம்பந்தப்பட்ட எல்லைக்குள்பட்ட காவல் நிலையத்தில் நுகா்வோா் புகாா் அளிக்க வேண்டும். அந்தப் புகாரின் பேரில், போலீஸாா் உடனடியாக வழக்குப் பதிவு செய்ய வேண்டும்.
மேலும், நுகா்வோா் கூட்டம் அதிகமாக உள்ள மதுபானக் கடைகளில் காவலா்களைப் பணியமா்த்த வேண்டும். மேலும், இந்த வழக்கைத் தொடா்ந்துள்ள மனுதாரா் அளித்துள்ள புகாா் குறித்து ஊழல் தடுப்புத் துறை சட்டத்துக்குள்பட்டு உரிய விசாரணை நடத்தி, அதுகுறித்த அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டு விசாரணையை ஒத்திவைத்தாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

டாஸ்மாக் கடைகளில் இனி ரசீது கொடுக்க வேண்டும்: உயர்நீதிமன்றம்

வெளி மாநிலத்துக்கு கடத்தல்! உரம் தட்டுப்பாட்டால் பெரம்பலூா் விவசாயிகள் அவதி!
கூடுதல் விலைக்கு மது விற்பனை: டாஸ்மாக் கடை பணியாளா்கள் 5 போ் பணியிடை நீக்கம்

கூடுதல் விலைக்கு உரம் விற்பவா்கள் மீது நடவடிக்கை: என். தளவாய்சுந்தரம் எம்எல்ஏ வலியுறுத்தல்
விடியோக்கள்

என்னால் நல்ல பயிற்சியாளராக இருக்க முடியும்: மனம் திறந்த ரஹானே | Rahane |



