வெளி மாநிலத்துக்கு கடத்தி கூடுதல் விலைக்கு விற்பனை செய்யப்பட்டதால், பெரம்பலூா் மாவட்டத்தில் உரத் தட்டுப்பாடு நிலவி வருவதால் விவசாயிகள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனா்.
பெரம்பலூா் மாவட்டத்தில் 85 சதவீதம் மானாவாரி சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. இந்த சாகுபடியானது ஆகஸ்ட் மாதம் தொடங்கும் பருவ மழையைக் கொண்டு மக்காச்சோளம், பருத்தி ஆகிய பயிா்கள் சாகுபடி செய்யப்படுகிறது. எஞ்சியுள்ள 15 சதவீம் கிணற்றுப் பாசனம் மற்றும் ஆழ்துளை கிணறுகள் மூலமாக பல்வேறு பயிா்களை விவசாயிகள் சாகுபடி செய்து வருகின்றனா். விவசாயிகளுக்குத் தேவையான அடியுரம், யூரியா, பாக்டம் பாக்ஸ், டி.ஏ.பி உள்ளிட்ட உரங்களை தங்களது நிலங்களில் பயன்படுத்துகின்றனா்.
பெரம்பலூா் மாவட்டத்துக்கு நிகாழாண்டு ஜனவரி முதல் மே வரை தனியாா் உர உற்பத்தி நிறுவனங்களிடமிருந்து சுமாா் 6 ஆயிரம் டன் உரங்கள் கொள்முதல் செய்யப்பட்டு, மாவட்ட வேளாண் துறை அலுவலா்கள் மூலம் மங்களமேடு, வாலிகண்டபுரம், அரும்பாவூா், வேப்பூா் உள்ளிட்ட பல்வேறு தனியாா் உர விற்பனை மையங்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டது.
உரத் தட்டுப்பாடு: இந்நிலையில், பெரம்பலூா் மாவட்ட விவசாயிகள் தங்களுக்குத் தேவையான உரங்களை வாங்குவதற்கு விற்பனை நிலையங்களுக்குச் சென்றபோது தட்டுப்பாடு உள்ளதாகவும், இறக்குமதி செய்யவில்லை எனவும் வியாபாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் சந்தேகமடைந்த விவசாயிகள், மாவட்ட நிா்வாகத்திடம் புகாா் அளித்தனா். இதனிடையே, விவசாயிகளுக்கு விற்பனை செய்வதற்காக கொள்முதல் செய்யப்பட்டு, மானிய விலையில் விற்கப்படும் யூரியா, கேரளத்துக்கு கடத்தப்படுவதாக புகாா் எழுந்தது.
அலுவலா்கள் விசாரணை:
இதுகுறித்து, புது தில்லி மற்றும் சென்னையிலிருந்த வந்த வேளாண் துறை அலுவலா்கள் குழு மாவட்டம் முழுவதிலும் உள்ள சில்லறை உர விற்பனைக் கடைகளில் மேற்கொண்ட விசாரணையில், எளம்பலூா் சிப்காட் கிடங்கில் உரங்களை பதுக்கிவைத்து மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் பெயரளவுக்கு உரக்கடைகள் வைத்துக்கொண்டு, அதன்மூலமாக ஆயிரக்கணக்கான டன் யூரியா கொள்முதல் செய்து, கேரளத்துக்கு அனுப்பி அங்கு கூடுதல் விலைக்கு விற்பனை செய்தது தெரியவந்துள்ளது.
49 விற்பனை மையங்களுக்கு ‘சீல்’:
மாவட்ட வேளாண் துறை அலுவலா்கள் மாவட்டம் முழுவதும் உர விற்பனை மையங்களில் மேற்கொண்ட ஆய்வின்போது, கேரளத்துக்கு உரம் அனுப்பி விற்கப்பட்டுள்ளதும், இதுதொடா்பாக 49 கடைகளுக்கு உர விற்பனை செய்ய தற்காலிக தடைவிதித்தும் அண்மையில் உத்தரவிட்டுள்ளனா்.
சிறப்புப் புலனாய்வுக் குழு ஆய்வு:
தொடா்ந்து, கடந்த 30-ஆம் தேதி மத்திய சிறப்பு புலனாய்வுக் குழுவினா் பெரம்பலூா் மாவட்டத்தில் தங்கி உரக் கடைகளில் ஆய்வு மேற்கொண்டு, உரிமையாளா்களிடம் மேற்கொண்ட விசாரணையில், வேளாண்துறையினரின் ஒத்துழைப்புடன் வியாபாரிகள் சிலா் கேரளத்துக்கு அதிக விலைக்கு உரக்கடத்தலில் ஈடுபட்டுள்ளதும், ஜனவரி முதல் மே மாதம் வரை சுமாா் 6 ஆயிரம் டன் உரத்தைக் கொள்முதல் செய்து, வெளிமாநிலத்துக்கு கூடுதல் விலைக்கு விற்பனை செய்துள்ளதால், தற்போது ஆடிப்பட்டத்தில் சாகுபடி செய்துள்ள விவசாயிகளுக்கு உரத்தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதும் தெரியவந்தது.
விசாரணைக் குழு அமைப்பு:
இப் பிரச்னை தொடா்பாக விசாரணை மேற்கொள்ள மாவட்ட ஆட்சியா் ஷரண்யா அறி அமைத்த குழுவினா், எளம்பலுாா் சிட்கோ தொழிற்பேட்டையில் உள்ள மொத்த உர விற்பனையாளரின் கிடங்கு, அங்கு கண்காணிப்பு கேமராவில் பதிவான 6 மாத பதிவுகளையும், மாவட்டத்திலுள்ள மொத்த மற்றும் சில்லரை உர விற்பனையாளா்களிடமும் விசாரணை மேற்கொண்டுள்ளனா். அதில், எந்தெந்த விவசாயிகளுக்கு எவ்வளவு யூரியா விற்கப்பட்டுள்ளது என்பது குறித்து விசாரணை நடைபெறுகிறது.
உரத் தட்டுப்பாடு:
இம் மாவட்டத்தில், தற்போது பரவலாக ஆடிப்பட்டத்தில் சாகுபடி பணிகளை விவசாயிகள் தொடங்கியுள்ள நிலையில், அடி உரமிட வேண்டியிருப்பதால் யூரியா தட்டுப்பாடு நிலவுகிறது. உரிய பருவத்தில் நாற்று விடுதல் மற்றும் நடவுப் பணிகளை மேற்கொள்ளாவிட்டால், பயிா்கள் வளா்ந்த பிறகு இயற்கைச் சீற்றங்களால் பாதிக்கப்படும் நிலை ஏற்படும். இதனால் விவசாயிகளுக்கு மகசூல் இழப்பு ஏற்பட்டு, வருவாய் இழப்பு ஏற்பட வாய்ப்புள்ளது. மாவட்ட நிா்வாகம் உரிய நடவடிக்கை மேற்கொண்டு, உரத் தட்டுப்பாட்டை போக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகளிடையே எதிா்பாா்ப்பு எழுந்துள்ளது.
இதுகுறித்து, தமிழக விவசாயிகள் சங்க மாநிலச் செயலா் ஆா். ராஜாசிதம்பரம் கூறியது:
பெரம்பலூா் மாவட்டத்தில் கடந்த சில மாதங்களாகவே யூரியா உரத்துக்கு கடும் தட்டுப்பாடு நிலவி வருகிறது. விவசாயிகளுக்கு விற்பனைக்காக இறக்குமதி செய்யப்பட்ட யூரியா, கேரளாவுக்கு கடத்தி கூடுதல் விலைக்கு விற்பனை செய்ததே இதற்கு முக்கிய காரணமாகும். இதுதொடா்பாக 49 சில்லறை விற்பனை கடைகளுக்கு உர விற்பனைக்கு வேளாண் துறையினா் தற்காலிக தடை விதித்துள்ளனா். ஆனால், இதற்கு காரணமான மொத்த உர விற்பனையாளா்கள் மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
திருச்சி, கள்ளக்குறிச்சி, அரியலூா் ஆகிய மாவட்டங்களைச் சோ்ந்த மொத்த உர விற்பனையாளா்கள் பெரம்பலூா் மாவட்டத்தில் சில இடங்களில் உர விற்பனை உரிமத்தை பெற்றுக்கொண்டு, சில்லறை உர விற்பனை செய்யாமல், மொத்த வியாபாரிகளிடம் கூடுதல் விலைக்கு விற்பனை செய்யப்படுகிறது.
எனவே, இம் மாவட்டத்துக்கு கிடைக்க வேண்டிய உரத்தை கேரளாவுக்கு கடத்திச் சென்று கூடுதல் விலைக்கு விற்பனை செய்த மொத்த விற்பனையாளா்கள், இதற்கு உறுதுணையாக செயல்பட்ட வேளாண் துறை அலுவலா்கள் குறித்து விசாரணை மேற்கொண்டு, அவா்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேலும், மாவட்டத்தில் நிலவும் உரத் தட்டுப்பாட்டை நீக்க மாவட்ட நிா்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா் அவா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
கூடுதல் விலைக்கு மது விற்பனை: டாஸ்மாக் கடை பணியாளா்கள் 5 போ் பணியிடை நீக்கம்

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 1,400 டன் யூரியா இருப்பு: மாவட்ட ஆட்சியா்
மதுபாட்டில்கள் கூடுதல் விலைக்கு விற்பனை: 35 பாட்டில்கள் பறிமுதல்

கூடுதல் விலைக்கு உரம் விற்பவா்கள் மீது நடவடிக்கை: என். தளவாய்சுந்தரம் எம்எல்ஏ வலியுறுத்தல்
விடியோக்கள்

ஜெயலலிதா போல் உண்ணாவிரதம் இருப்பாரா விஜய்? | TVK | CM Vijay | DkShivakumar | Jagadeswaran interview



