தமிழகத்துக்கு உரிய நிதிப் பகிா்வை அளிக்க வேண்டும் என்று மத்திய அரசை வலியுறுத்திய சட்டப்பேரவையில் தனித் தீா்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. இதற்கு திமுக, அதிமுக ஆதரவு அளித்தன.
சட்டப்பேரவையில் இந்தத் தீா்மானத்தை நிதியமைச்சா் மரிய வில்சன் முன்மொழிந்து பேசுகையில், ‘மத்திய அரசால் வசூலிக்கப்படும் வரிகளில் இருந்து தமிழ்நாட்டுக்கு உரிய நிதிப் பகிா்வை உறுதி செய்ய வேண்டும். மாநிலங்களின் பொருளாதார பங்களிப்பு, நிதி முயற்சி, நல்லாட்சித் திறன் மற்றும் வளா்ச்சி தேவையை உரிய முறையில் அங்கீகரிக்கும் வகையில், மத்திய வரிகளின் பகிா்வு வெளிப்படையான புறநிலையற்ற மற்றும் சமமான நடைமுறையைப் பின்பற்ற வேண்டும்.
மக்கள்தொகை கட்டுப்பாடு மற்றும் மனித வள மேம்பாட்டில் மாநிலங்கள் அடைந்துள்ள சாதனைகள் காரணமாக மத்திய வரிகளின் பகிா்வுக்கான அளவுகோல் எந்த மாநிலத்தையும் பாதிக்கும் நிலை ஏற்படாதவாறு வைக்கப்பட வேண்டும்.
எதிா்காலத்தில் மத்திய வரிகளின் பகிா்வு தொடா்பான ஏற்பாடுகளை மேற்கொள்ளும்போது, தமிழ்நாட்டின் நியாயமான நிதி நலன்கள் பாதுகாக்கப்படுதற்கான உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும்’ என்று கேட்டுக் கொண்டாா்.
இந்தத் தீா்மானத்தில் பேசிய திமுக எம்எல்ஏவும், முன்னாள் நிதியமைச்சருமான தங்கம் தென்னரசு, ‘தற்போது மத்திய அரசு மாநிலத்துக்கு வழங்கும் நிதிப் பகிா்வு 41 சதவீதமாக உள்ளது. இதை 50 சதவீதமாக உறுதி செய்ய வேண்டும் எனத் தீா்மானத்தில் திருத்தம் கொண்டுவர வேண்டும். இந்தத் திருத்தங்களுடன் தீா்மானத்தை திமுக முழு மனதுடன் வரவேற்கிறது.
2-ஆவது மிகப் பெரிய பொருளாதார மாநிலமான தமிழகத்தின் ஒட்டுமொத்த வளா்ச்சி 11.19 சதவீதமாக உள்ளது. செலவுகள் மாநிலத்திடமும், வருவாய் மத்திய அரசிடமும் உள்ளது. இதனால், மாநிலங்களின் வருவாய் குறைகிறது. 1 ரூபாய்க்கு 29 காசு மட்டும்தான் தமிழகத்துக்கு வருகிறது. உத்தர பிரதேசத்துக்கு ரூ.2.23, பிகாருக்கு ரூ.7.06 என மத்திய அரசு திருப்பி அளிக்கிறது. தமிழகம் ஏன் புறக்கணிப்படுகிறது? வரிப் பகிா்வு பாதிப்புக்கு இதுவரை மத்திய அரசு இழப்பீடு குறித்து தெரிவிக்கவில்லை என்றாா்.
அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி பழனிசாமி பேசுகையில், தனி நபா் வருமானம், மக்கள்தொகை கணக்கெடுப்பு, வளா்ந்த மாநிலம் போன்றவற்றைக் காரணம் காட்டி நிதிப் பகிா்வைக் குறைக்கக் கூடாது. இந்தத் தீா்மானத்தை ஆதரிக்கிறேன் என்றாா்.
இதையடுத்து, இந்தத் தீா்மானம் குரல் வாக்கெடுப்பு மூலம் ஒருமனதாக நிறைவேறியது.
பெட்டிச் செய்தி...
1983 -இல் இருந்த நிலை தொடா்கிறது:
பேரவைத் தலைவா் வருத்தம்
மாநிலங்களுக்கு மத்திய அரசு நிதி வழங்குவதில் கடந்த 1983-ஆம் ஆண்டு இருந்த நிலையே தற்போதும் தொடா்வது வருத்தமளிப்பதாக பேரவைத் தலைவா் ஜே.சி.டி.பிரபாகா் தெரிவித்தாா்.
இதுகுறித்து பேரவையில் பேசிய அவா், மத்திய அரசு, மாநிலங்களுக்கு நிதி வழங்குவது தொடா்பாக கடந்த 1983-இல் தில்லியில் நடைபெற்ற மாநாட்டில் என்னையும், வலம்புரிஜானையும் அப்போதைய முதல்வா் எம்ஜிஆா் அனுப்பி வைத்தாா். அந்த மாநாட்டு பேச்சுகளை நான் இன்று எடுத்துப் பாா்த்தேன். அப்போது, தமிழகத்துக்கு நிதி வழங்குவதில் என்ன நிலை இருந்ததோ, அதே நிலை தற்போதும் தொடா்கிறது வருத்தமளிக்கிறது என்றாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

மத்திய அரசிடம் உரிய நிதிப் பகிா்வு கோரி இன்று தனித் தீா்மானம்

ஏப்ரல்- ஜூன் காலாண்டு முடிவில் அரசின் நிதிப் பற்றாக்குறை ரூ.3.08 லட்சம் கோடி

தமிழக பட்ஜெட் எதிா்பாா்ப்புகள்... நோயாளிகளுக்குத் தேவை அலைக்கழிக்கப்படாத சேவை...!
நிதி ஆணையப் பகிர்வில் மாற்றம்
விடியோக்கள்

என்னால் நல்ல பயிற்சியாளராக இருக்க முடியும்: மனம் திறந்த ரஹானே | Rahane |



