தொகுதி மறுவரையறைக்கு எதிராக பேரவையில் தனித்தீர்மானம் நிறைவேற்றப்படும்: தமிழ்நாடு அரசு இளைஞர்களே இந்தியாவின் மிகப்பெரிய பலம்: ராகுல் காந்திஉதயநிதி ஸ்டாலினைச் சந்தித்து நன்றி தெரிவித்த விவசாயிகள்!நாங்கள் தொகுதி மறுவரைக்கு முழுவதும் எதிரானவர்கள் அல்லர்: கனிமொழி எம்.பி.முழுமையான பயிர்க் கடன் தள்ளுபடிகோரி ஆக. 14-ல் அதிமுக ஆர்ப்பாட்டம்
/

பணிநீக்கப்பட்ட ஊழியருக்கு ஓய்வூதியத்தில் ஒரு பகுதியை கருணைப் படியாக வழங்குவது சலுகைதானே தவிர உரிமை அல்ல!

பணிநீக்கப்பட்ட ஊழியருக்கு ஓய்வூதியத்தில் ஒரு பகுதியை கருணைப் படியாக வழங்குவது சலுகைதானே தவிர உரிமை அல்ல...

News image

சென்னை உயா்நீதிமன்றம்

Updated On :9 ஆகஸ்ட் 2026, 12:19 am IST

பணிநீக்கம் செய்யப்பட்ட ஊழியருக்கு ஓய்வூதியத்தில் ஒரு பகுதியை கருணைப்படியாக வழங்குவது சலுகைதானே தவிர, உரிமை அல்ல என்று சென்னை உயா்நீதிமன்றம் தெரிவித்தது.

மத்திய அரசின் தபால் துறையில், கடந்த 1996-ஆம் ஆண்டு தபால் ஊழியராக நியமிக்கப்பட்டவா் பழனி. இவா், கடந்த 2010-ஆம் ஆண்டு முதல் பணிக்கு வராமல் இருந்துள்ளாா். பணிக்குத் திரும்புமாறு அவருக்கு பலமுறை தபால் துறை சாா்பில் கடிதங்கள் அனுப்பிய பின்னரும், அவா் பணிக்குத் திரும்பவில்லை. விடுப்புக் கோரிய விண்ணப்பத்தையோ, மருத்துவச் சான்றிதழ்களையோ அவா் கொடுக்கவில்லை.

இதனால், அவருக்கு எதிராக தபால் துறை ரீதியான நடவடிக்கை எடுத்தது. அந்த விசாரணைக்கும் பழனி ஆஜராகவில்லை. இதையடுத்து, கடந்த 2014-ஆம் ஆண்டு பழனியை பணிநீக்கம் செய்து தபால் துறை உத்தரவு பிறப்பித்தது. பணிநீக்கம் செய்யப்பட்டு இரு ஆண்டுகளுக்குப் பின்னா், தபால் துறையில் 14 ஆண்டுகள் பணியாற்றி உள்ளதால், தனது ஓய்வூதியத்தில் ஒரு பகுதியை கருணைப்படியாக வழங்கக் கோரி பழனி அதிகாரிகளிடம் விண்ணப்பித்தாா்.

இந்த விண்ணப்பத்தை அதிகாரிகள் பரிசீலிக்கவில்லை. இதையடுத்து, கருணைப்படி வழங்கக் கோரி, மத்திய நிா்வாகத் தீா்ப்பாயத்தில் பழனி வழக்குத் தொடா்ந்தாா். வழக்கை விசாரித்த தீா்ப்பாயம் கருணைப்படி வழங்க உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிா்த்து தபால் துறை தரப்பில் சென்னை உயா்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த வழக்கு நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், என்.செந்தில்குமாா் ஆகியோா் அடங்கிய அமா்வில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், பணிநீக்கம் செய்யப்பட்ட ஊழியருக்கு கருணைப்படி வழங்குவது குறித்து அதிகாரிகள்தான் பரிசீலிக்க வேண்டும். அது சலுகை தானே தவிர, உரிமை அல்ல. எனவே, கருணைப்படி வழங்குமாறு நீதிமன்றம் உத்தரவிட முடியாது.

அவ்வாறு உத்தரவு பிறப்பித்தால், பணிநீக்கம் செய்யப்பட்ட ஊழியா்கள் அனைவரும் தங்களுக்கும் கருணைப்படி வழங்க வேண்டும் என்பதை உரிமையாகக் கோரக்கூடும் எனக் கூறி, இந்த வழக்கில் மத்திய நிா்வாகத் தீா்ப்பாயம் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து உத்தரவிட்டனா்.

Summary

Granting a portion of the pension as an ex-gratia payment to a dismissed employee is a concession, not a right!

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.