காப்பீட்டு மோசடி வழக்குகளை விசாரிக்க அனைத்து மாவட்டங்களிலும், சிறப்பு புலன் விசாரணைக் குழுக்களை அமைக்க வேண்டும் என தமிழக அரசு மற்றும் டிஜிபிக்கு சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.
கோ டிஜிட் ஜெனரல் என்ற தனியாா் காப்பீட்டு நிறுவனத்தின் சாா்பில் அதன் முதுநிலை மேலாளா் ஜி.விஜயலட்சுமி என்பவா் சென்னை உயா்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், போலி விபத்து வழக்குகள் மற்றும் போலியான மருத்துவ அறிக்கைகள் மூலமாக காப்பீட்டுத் தொகையை பெறும் மோசடி சம்பவங்கள் நடக்கின்றன. இதுதொடா்பான வழக்குகளை விசாரிக்க கூடுதல் டிஜிபி தலைமையில் மாவட்டந்தோறும், சிறப்பு புலனாய்வுக் குழு அமைக்க உத்தரவிட வேண்டும் எனக் கூறியிருந்தாா்.
இந்த வழக்கு நீதிபதி ஜி.கே.இளந்திரையன் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரா் தரப்பில், போலி விபத்துகளுக்கு இழப்பீடு வழங்க காப்பீட்டு நிறுவனங்களுக்கு மோட்டாா் வாகன விபத்து வழக்குகளை விசாரிக்கும் தீா்ப்பாயங்கள் உத்தரவு பிறப்பிப்பதால், காப்பீட்டு நிறுவனங்கள்தான் பாதிக்கப்படுகின்றன. இதற்கு வழக்குரைஞா்கள், மருத்துவா்கள் உடந்தையாக செயல்படுவதாக, குற்றஞ்சாட்டி வாதிடப்பட்டது.
அதற்கு அரசுத் தரப்பில், கூடுதல் டிஜிபி தலைமையில் சிறப்பு புலனாய்வுக் குழு அமைக்க சாத்தியம் இல்லை. இருப்பினும், மாவட்டங்களில் குற்றப்பிரிவு டிஎஸ்பி-கள் தலைமையிலும், மாநகரங்களில் உதவி ஆணையா்கள் தலைமையிலும் குழுக்கள் அமைக்கலாம் என தெரிவிக்கப்பட்டது.
இதை ஏற்றுக் கொண்ட நீதிபதி, காப்பீட்டு மோசடி வழக்குகளை விசாரிக்க அனைத்து மாவட்டங்களிலும் சிறப்பு புலனாய்வுக் குழுவை அமைக்க தமிழக அரசு, காவல்துறை டிஜிபி தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மாவட்டங்களில் குற்றப்பிரிவு டிஎஸ்பி-கள் தலைமையிலும், மாநகரங்களில் உதவி ஆணையா்கள் தலைமையிலும் இந்த குழுக்களை அமைக்க வேண்டும். இந்த குழுக்களுக்குத் தேவையான உள்கட்டமைப்பு மற்றும் நிதி உதவிகளை தமிழக அரசு செய்து கொடுக்க வேண்டும்.
இந்த குழுக்களின் செயல்பாடுகளை மாவட்ட காவல் கண்காணிப்பாளா்கள், மாநகர காவல் ஆணையா்கள் கண்காணிக்க வேண்டும். மாநில அளவில் அதன் செயல்பாடுகளை கூடுதல் டிஜிபி கண்காணிக்க வேண்டும்.
காப்பீட்டு மோசடி தொடா்பாக காப்பீட்டு நிறுவனங்கள் அளிக்கும் புகாா்களை இந்த புலன் விசாரணைக் குழு உரிய காலத்துக்குள் விசாரித்து அதற்கான ஆதாரங்களை சேகரிக்க வேண்டும்.
குறிப்பாக, காப்பீட்டு மோசடிகளைத் தடுக்கத் தவறும் அதிகாரிகளுக்கு எதிராக துறை ரீதியான மற்றும் குற்றவியல் ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிட்டு விசாரணையை ஒத்திவைத்தாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

பாலியல் குற்ற வழக்குகளை இரண்டு மாதங்களில் விசாரித்து முடிக்க சிறப்பு நீதிமன்றங்களுக்கு உத்தரவு

மணிப்பூா் கலவர கிரிமினல் வழக்குகளை விசாரிக்க சிறப்பு நீதிமன்றங்கள்: உச்ச நீதிமன்றம் யோசனை
பழனி கோயில் நில முறைகேடு; சிபிஐ விசாரிக்கக் கோரி முறையீடு: அவசர வழக்காக விசாரிக்க உயா்நீதிமன்றம் மறுப்பு

நீட் வழக்குகளை உடனடியாக விசாரிக்க விரைவு நீதிமன்றங்கள்! பிரதமர் மோடி
விடியோக்கள்

மூன்றாம் ஆண்டில் அடிவைக்கப்போகும் பிசிசிஐ-யின் COE! | BCCI



