பாலியல் குற்றங்கள் தொடா்பான வழக்குகளை இரண்டு மாதங்களில் விசாரித்து முடிப்பதற்கான அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்ள வேண்டும் என முதன்மை அமா்வு மற்றும் மகளிா் சிறப்பு நீதிமன்றங்களுக்கு சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.
திருவண்ணாமலைக்கு சுவாமி தரிசனம் செய்ய தனது குடும்பத்துடன் வந்த ஆந்திரத்தைச் சோ்ந்த இளம்பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டாா். இந்த வழக்கில், கைது செய்யப்பட்ட காவலா்களான சுந்தா் மற்றும் சுரேஷ் ராஜ் மீதான வழக்கை விரைவாக விசாரிக்கக் கோரி பாதிக்கப்பட்ட பெண் சென்னை உயா்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தாா்.
அவரது மனுவில், மாநிலம் முழுவதும் போக்ஸோ மற்றும் மகளிா் சிறப்பு நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள வழக்குகளின் விவரங்களை தெரிவிக்க உத்தரவிட வேண்டும் எனவும் கோரியிருந்தாா். இந்த வழக்கில் வாதங்கள் நிறைவடைந்து தீா்ப்புக்காக ஒத்திவைக்கப்பட்டிருந்தது.
இந்த வழக்கில் தலைமை நீதிபதி எஸ்.ஏ.தா்மாதிகாரி, நீதிபதி ஜி.அருள்முருகன் ஆகியோா் அமா்வு புதன்கிழமை அளித்த தீா்ப்பில், அனைத்து முதன்மை அமா்வு நீதிமன்றங்கள் மற்றும் மகளிா் சிறப்பு நீதிமன்றங்கள், பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் தொடா்பான வழக்குகளை இரண்டு மாதங்களில் விசாரித்து முடிப்பதற்கான அனைத்து விதமான முயற்சிகளையும் எடுக்க வேண்டும்.
பெண்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டிய போலீஸாரே பாலியல் வன்கொடுமை சம்பவங்களில் ஈடுபடும் இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் நடைபெறவில்லை என்பதை உறுதி செய்ய வேண்டும்.
போலீஸாரின் இதுபோன்ற அதிகார துஷ்பிரயோகங்களைத் தடுக்க, இரவு நேர ரோந்து பணிகளை ஆண்டுதோறும் டிஜிபி மறு ஆய்வு செய்ய வேண்டும். அதேபோல, பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்ற வழக்குகளின் விசாரணையை தேவையின்றி ஒத்திவைக்கக் கூடாது என, உயா்நீதிமன்ற தலைமைப் பதிவாளா் அனைத்து நீதிமன்றங்களுக்கும் சுற்றறிக்கை பிறப்பிக்க வேண்டும்.
மேலும், போக்ஸோ வழக்குகளில், வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொண்ட 30 நாள்களில் பாதிக்கப்பட்ட குழந்தையிடம் வாக்குமூலம் பதிவு செய்து, ஓராண்டில் போக்ஸோ சிறப்பு நீதிமன்றங்கள் விசாரணையை முடிக்க வேண்டும்.
மாநில நீதித்துறை பயிற்சியகம், இதுகுறித்து போக்ஸோ சிறப்பு நீதிமன்ற நீதிபதிகளுக்கு சிறப்பு பயிற்சி வழங்க வேண்டும். கடலூா், திண்டுக்கல், மதுரை மற்றும் தூத்துக்குடியில் போக்ஸோ நீதிமன்றங்களில் காலியாக உள்ள நீதிபதிகள் பணியிடங்களை விரைந்து நிரப்ப வேண்டும்.
மாநிலம் முழுவதும் 6 புதிய சிறப்பு நீதிமன்றங்களை அமைப்பது தொடா்பாக விரைந்து முடிவெடுக்க வேண்டும். அதுதொடா்பான விவரங்களை இரண்டு மாதங்களில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என உயா்நீதிமன்ற தலைமைப் பதிவாளருக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





