FOLLOW US

ON GOOGLE DISCOVER

‘வெற்றித் தமிழ்நாடு முதலீட்டாளா் மாநாடு’: இன்று தொடங்கி வைக்கிறாா் முதல்வா் ஈரான் அச்சுறுத்தல்: துருக்கியிலிருந்து மாற்று விமானத்தில் டிரம்ப் ரகசியப் பயணம்! மேற்காசியப் போரால் சமையல் எண்ணெய் விலை உயா்வு: அரசு விளக்கம்எம்பிபிஎஸ், பிடிஎஸ் கலந்தாய்வு இன்று தொடக்கம்: தரவரிசைப் பட்டியலில் 363 போ் கூடுதலாக இணைந்ததால் குழப்பம் காவிரி விவகாரம்: கா்நாடகத்தில் இன்று முழு அடைப்புக்கு கன்னட அமைப்புகள் அழைப்பு
/

நாடாளுமன்றத்தில் தமிழக எம்.பி.க்களின் குரல்கள்!

நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் தமிழகத்தைச் சேர்ந்த உறுப்பினர்கள் எழுப்பிய கேள்விகள் பற்றி....

News image

கோப்பு படம்

Updated On :13 ஆகஸ்ட் 2026, 5:14 am IST

நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் தமிழகத்தைச் சேர்ந்த உறுப்பினர்கள் எழுப்பிய கேள்விகள், அவற்றுக்கு தொடர்புடைய துறை அமைச்சர்கள் அளித்துள்ள எழுத்துபூர்வ பதில்கள் மற்றும் அவையில் உறுப்பினர்கள் பதிவு செய்த கோரிக்கைகளின் சுருக்கம் தொகுத்து வழங்கப்பட்டுள்ளது.

மக்களவையில்...

நுகர்வோரை ஏமாற்றும் "டார்க் பேட்டர்ன்' மோசடியைத் தடுக்க என்ன நடவடிக்கை?

கனிமொழியின் (திமுக) கேள்விக்கு மத்திய நுகர்வோர் விவகாரங்கள், உணவு மற்றும் பொது விநியோகத் துறை இணையமைச்சர் பி. எல். வர்மா அளித்த பதிலில், "நுகர்வோர் பாதுகாப்பு ஆணையம் மூலம் இணையவழி வர்த்தக நிறுவனங்கள் அவற்றின் தளங்களை சுயமாக தணிக்கை செய்வதற்கான வழிகாட்டுதல்கள் கடந்த ஆண்டு ஜூன் 5-ஆம் தேதி வெளியிடப்பட்டன. இதுவரை 31 முன்னணி இணையவழி வர்த்தக நிறுவனங்கள் "டார்க் பேட்டர்ன்' எனப்படும் மோசடியாக கட்டணம் வசூலிப்பதைத் தடுப்பு விதிகளைப் பின்பற்றுவதாக சுயசான்றளிப்பு கடிதங்களைச் சமர்ப்பித்துள்ளன' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கூடங்குளம் அணுமின் நிலைய பாதுகாப்புக்கு என்ன நடவடிக்கை?

மாணிக்கம் தாகூரின் (காங்கிரஸ்) கேள்விக்கு பிரதமர் அலுவலக இணையமைச்சர் ஜிதேந்திர சிங் அளித்த பதிலில், "அணுசக்தி ஒழுங்குமுறை வாரியம் மற்றும் மத்திய முகமைகள் மூலம் தொடர்ச்சியான பாதுகாப்புத் தணிக்கைகள் நடத்தப்படுகின்றன. கூடங்குளத்தில் கடந்த ஏப்ரல் 15, கல்பாக்கத்தில் ஜூலை 17 ஆகிய நாள்களில் அவசரகால தயார்நிலை பயிற்சிகள் மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து வெற்றிகரமாக நடத்தப்பட்டுள்ளன' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாணவர் கல்வி உதவித் தொகை வழங்கல் முறை எளிமைப்படுத்தப்பட்டுள்ளதா?

அருண் நேருவின் (திமுக) கேள்விக்கு மத்திய சிறுபான்மை விவகாரங்கள் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு அளித்த பதிலில், "தேசிய கல்வி உதவித் தொகை இணையதளம் வாயிலாக ஆதார் அடிப்படையிலான சரிபார்ப்பு நடைமுறைகள் தொடர்ந்து ஆய்வு செய்யப்பட்டு, வெளிப்படைத்தன்மையுடன் விண்ணப்பங்களை எளிதாகச் செயல்படுத்தும் மாற்றங்கள் உடனுக்குடன் செய்யப்பட்டு வருகின்றன' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

"விதி எண் 377'-இன்கீழ் கோரிக்கைகள்:

கலாநிதி வீராசாமி (திமுக): வட சென்னை தொகுதியில் கேந்திரிய வித்யாலயம் அமைப்பதற்கான ரயில்வே நிலத்தை கல்வி அமைச்சகத்துக்கு மாற்றுவதில் உள்ள நிர்வாக தாமதங்களை நீக்கி, உடனடியாகப் பள்ளியைத் தொடங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஜி. செல்வம் (திமுக): காஞ்சிபுரம் பட்டுச்சேலைகளின் போலி விற்பனையைத் தடுக்க "க்யூஆர்' குறியீடு அடிப்படையிலான சான்றளிப்பை கட்டாயமாக்க வேண்டும். புவிசார் குறியீடு சட்டத்தை தீவிரமாக அமல்படுத்தி நெசவாளர்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்க வேண்டும்.

மாநிலங்களவையில்...

இந்தியாவில் குழந்தைகளுக்கு சமூக ஊடகக் கட்டுப்பாடு விதிக்கப்படுமா?

அன்புமணி ராமதாஸின் (பாமக) கேள்விக்கு மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை இணையமைச்சர் சாவித்திரி தாக்குர் அளித்த பதிலில், "குழந்தைகளின் இணைய பாதுகாப்பை உறுதி செய்ய தகவல் தொழில்நுட்பச் சட்டம்}2000, தகவல் தொழில்நுட்ப விதிகள்}2021 மற்றும் எண்ம தனிநபர் தரவு பாதுகாப்புச் சட்டம்}2023 ஆகியவற்றின் கீழ் போதுமான சட்டப் பாதுகாப்பு வழிவகைகள் செய்யப்பட்டுள்ளன. பெற்றோர் ஒப்புதலின்றி குழந்தைகளின் தரவுகளைச் சேகரிக்கவோ அல்லது அவர்களை இலக்கு வைத்து விளம்பரங்கள் செய்யவோ தடை விதிக்கப்பட்டுள்ளது. தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் மூலம் கைப்பேசி பயன்பாட்டினால் குழந்தைகளுக்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்து தேசிய அளவிலான விரிவான ஆய்வு நடத்தப்பட்டு அதன் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேசிய கூட்டுறவு மேம்பாட்டு நிறுவன சட்டத்திருத்த மசோதா, 2026 விவாதத்தில் தமிழக எம்.பி.க்கள் பேசியது:

மு. தம்பிதுரை (அதிமுக): கூட்டுறவுத் துறை என்பது வெறும் நிதி சார்ந்த அமைப்பு மட்டுமல்ல; அது மாநிலங்களின் கூட்டாட்சி தத்துவத்துடன் தொடர்புடையது. தமிழகத்தில் வேளாண்மை மற்றும் பால் உற்பத்தியில் வலுவான கூட்டுறவு பாரம்பரியம் உள்ளது. தேசிய கூட்டுறவு மேம்பாட்டுக் கழகத்தின் (என்சிடிசி விரிவாக்கப்பட்ட நிதி அதிகாரங்களைச் செயல்படுத்தும்போது மாநில அரசுகளின் ஆலோசனையைப் பெற வேண்டும். மசோதாவை ஆதரிக்கும் அதே சமயம், மாநிலங்களின் உரிமைகளைப் புறக்கணிக்கக் கூடாது. இதே மசோதா மீது அதிமுக உறுப்பினர் எம். தனபாலும் பேசினார்.

எல். கே. சுதீஷ் (தேமுதிக): வீட்டுவசதி, மீன்வளம், கைத்தறி மற்றும் பால்வளத் துறைகளுக்கு என்சிடிசி நிதி உதவியை விரிவாக்குவது வரவேற்கத்தக்கது. தமிழகத்தில் 30,000}க்கும் மேற்பட்ட கூட்டுறவுச் சங்கங்கள் உள்ளன. சிறு, குறு விவசாயிகள் மற்றும் பெண்களுக்குப் பிணையில்லா கடன் வசதிகளை எளிதாக்கவும், தமிழகத்துக்கு கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்யவும் மத்திய அரசு முன்வர வேண்டும்.

கே. ஆர். என். ராஜேஷ் குமார் (திமுக): அரசமைப்பில் கூட்டுறவுத் துறை மாநில பட்டியலில் உள்ளது. இந்தச் சட்டத் திருத்தத்தின் மூலம் என்சிடிசி நேரடியாக கூட்டுறவுச் சங்கங்களுக்கு நிதி வழங்க வழிவகை செய்யப்பட்டுள்ளது, மாநில அரசுகளின் அதிகாரத்தைப் பறிப்பதாக உள்ளது. மேலும், சட்டத்தில் கிராமப்புறம் என்ற வார்த்தை நீக்கப்பட்டிருப்பது கிராமப்புற கைவினைத் தொழில்களைப் பாதிக்கும் என்பதால், கூட்டாட்சி தத்துவத்துக்கு எதிரான இந்த மசோதாவை திமுக எதிர்க்கிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.