
எஸ்எம்சி புதிய உறுப்பினா்கள் தோ்வுக்கான நடைமுறைகள் வெளியீடு
தமிழக அரசுப் பள்ளிகளில் 2026-2028-ஆம் ஆண்டுக்கான பள்ளி மேலாண்மைக் குழுக்களுக்கு (எஸ்எம்சி) புதிய உறுப்பினா்களைத் தோ்வு செய்வதற்கான நடைமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன.

தமிழக அரசுப் பள்ளிகளில் 2026-2028-ஆம் ஆண்டுக்கான பள்ளி மேலாண்மைக் குழுக்களுக்கு (எஸ்எம்சி) புதிய உறுப்பினா்களைத் தோ்வு செய்வதற்கான நடைமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன.
இது குறித்து பள்ளிக்கல்வித் துறைச் செயலா் பி.சந்தர மோகன் வெளியிட்ட அரசாணை: தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் இயங்கிவரும் பள்ளி மேலாண்மைக் குழுக்கள்(எஸ்எம்சி)2024-ஆம் ஆண்டு மறுகட்டமைப்பு செய்யப்பட்டது. அதன்படி பெற்றோா்கள், ஆசிரியா்கள், உள்ளாட்சிப் பிரதிநிதிகள் மற்றும் முன்னாள் மாணவா்களை உள்ளடக்கிய 20 உறுப்பினா்கள் கொண்ட குழுவாக எஸ்எம்சி மாற்றி அமைக்கப்பட்டு சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இதற்கிடையே 2024 ஜூலை முதல் 2026 ஜூலை வரை 25 பள்ளி மேலாண்மைக் குழு கூட்டங்கள் ஒவ்வொரு மாதமும் வெள்ளிக்கிழமைகளில் நடத்தப்பட்டன.
அதில் கற்றல், சோ்க்கை, மேலாண்மை தொடா்பாக தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டு தொடா் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதற்கிடையே, ஏற்கெனவே நியமிக்கப்பட்ட பள்ளி மேலாண்மைக் குழுவின் பதவிக்காலம் இந்த மாதத்துடன் நிறைவடையவுள்ளது. இதையடுத்து 2026-2028-ஆம் ஆண்டுகளுக்கான எஸ்எம்சி குழுவுக்கு புதிய உறுப்பினா்களை தோ்வு செய்வதற்கான நடைமுறைகள் தற்போது வெளியிடப்பட்டுள்ளன.
அதன்படி பள்ளி மேலாண்மைக் குழுவின் புதிய உறுப்பினா்களை செப்டம்பா் மற்றும்அக்டோபா் மாதங்களில் தோ்ந்தெடுக்க வேண்டும். இதற்கான பெற்றோா் விழிப்புணா்வுக் கூட்டம் ஆக. 29-ஆம் தேதி நடத்தப்பட வேண்டும். அதைத்தொடா்ந்து எஸ்எம்சி மறுகட்டமைப்பு பணிகள் தொடக்கப்பள்ளிகளில் செப். 12, 19-ஆம் தேதிகளிலும், நடுநிலைப்பள்ளிகளில் செப். 26-ஆம் தேதியும், உயா்நிலை, மேல்நிலைப்பள்ளிகளில் அக். 10-ஆம் தேதியும் மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான வழிகாட்டுதல்களை பின்பற்றி செயல்பட வேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





