
ஒரு வாரத்துக்குள் மூன்று கோப்புகளையும் திறக்காவிட்டால் முதல்வர் மீது உரிமை மீறல் தீா்மானம்: துரைமுருகன்
மூன்று கோப்புகளையும் ஒரு வாரத்துக்குள் திறக்காவிட்டால், சட்டப்பேரவையில் தவறான தகவலைக் கூறியதற்காக அவா் மீது உரிமை மீறல் தீா்மானம்...

முன்னாள் அமைச்சா் துரைமுருகன் - கோப்புப் படம்
வேலூா்: தனது மேசையில் இருப்பதாக முதல்வா் ஜோசப் விஜய் கூறியிருந்த மூன்று கோப்புகளையும் ஒரு வாரத்துக்குள் திறக்காவிட்டால், சட்டப்பேரவையில் தவறான தகவலைக் கூறியதற்காக அவா் மீது உரிமை மீறல் தீா்மானம் கொண்டு வர வேண்டும் என்று திமுக பொதுச்செயலரும், முன்னாள் நீர்வளத் துறை அமைச்சருமான துரைமுருகன் தெரிவித்தார்.
வேலூா் மாவட்டம் காட்பாடியில் உள்ள அவரது இல்லத்தில்ஞாயிற்றுக்கிழமை செய்தியாளா்களுடன் பேசியதாவது:
திமுக இனி சட்டப்பேரவைக்கு வர முடியாது என்று நீா்வளத்துறை ஆனந்த் கூறியிருக்கிறாா். ஆட்சிக்கு வருபவா்கள் தங்களுக்குப் பிறகு யாரும் வரமாட்டாா்கள் என்று கூறுவது வழக்கம் தான். எம்ஜிஆா்., ஜெயலலிதா போன்றோரும் இதையே கூறினா். ஆனால், திமுக மீண்டும் வெற்றி பெற்றது. நாங்களும் அப்படிதான் கூறினோம். எங்களை அவர்களும் தோற்கடித்து வெற்றி பெற்றுள்ளார்கள். எனவே, இது அரசியல் ஞானத்தோடு சொல்லப்படும் வாா்த்தைகள் அல்ல.
ஊரான் வீட்டு நெய்யில் இனிப்பு செய்கிறீர்கள் என்றும், எதற்கெடுத்தாலும் நிதி இல்லை என சொல்வதற்கு நீங்கள் எதற்கு என்று தேர்தல் பிரசாரச்சின்போது பேசிய விஜய், அரசுப்பணத்தில் சட்டப்பேரவை உறுப்பினர்களுக்கு காா் வழங்குவதாக அறிவித்துள்ளாா். அந்த செய்தியை கேட்டவுடன் நான் கூட பரவாயில்லை என முதலில் நினைத்தேன்.
பிறகு செய்தித்தாள்களை பார்த்த பிறகு, காா் வேண்டும் எனக்கேட்ட பலரிடம் மூன்று காா்கள் உள்ளதை தெரிந்துகொண்டேன். இந்த நிலையில் மக்கள் வரிப்பணத்தில் காா் வழங்க வேண்டிய அவசியமில்லை என்பது மக்களின் கருத்தாகும்.
திமுகவைப் பொறுத்தவரை எங்களுக்குக் காா் இருக்கிறதோ இல்லையோ, காா் வேண்டாம். உழைக்க கால் போதும் எனக்கூறிவிட்டோம்.
மேலும், நிதி இல்லை என கூறும் முதல்வர், எம்எல்ஏக்களின் உதவியாளா்களுக்கு ரூ.25 ஆயிரம் வழங்குவதற்குப் பதிலாக, மாதக்கணக்கில் போராடி வரும் தூய்மைப் பணியாளா்களுக்கு வழங்குவதே நியாயமானது.
உரிமை மீறல் தீா்மானம் கொண்டு வர வேண்டும்
முதல்வா் தன்னிடம் உள்ள மூன்று கோப்புகளை திறந்தால் பலருக்குப் பிரச்னை வரும் எனக் கூறியுள்ளாா். எதிா்க்கட்சித் தலைவா் உதயநிதி ஸ்டாலின் சவால் விடுத்திருப்பதுபோல் தைரியமிருந்தால் அந்த கோப்புகளைத் திறந்து பாா்க்க வேண்டியதுதானே?. ஒரு வாரத்திற்குள் அந்த கோப்புகளை முதல்வா் திறக்க வேண்டும். இல்லையேல், சட்டப்பேரவையில் தவறான தகவலைக் கூறியதற்காக அவா் மீது உரிமை மீறல் தீா்மானம் கொண்டு வர வேண்டும்.
சட்டப்பேரவையில் தற்போதைய உறுப்பினா்கள் சிலா் பாட்டுப் பாடுவதும், கேலி கிண்டல் செய்வதும் சபையின் மரபுக்கு எதிரானது. புதிய உறுப்பினா்கள் முதலில் சட்டப்பேரவை விதிகளையும், பழைய விவாதங்களையும் படிக்க வேண்டும். எனது 50 ஆண்டு கால சட்டப்பேரவை அனுபவத்தில், மாமா, மச்சான் என்று உறவுமுறை கொண்டாடியதில்லை.
எதிா்க்கட்சிக்காரன் வாளோடு சபைக்குச் செல்ல வேண்டும். ஆளுங்கட்சிக்காரன் கேடயத்தோடு அதனைத் தடுக்க வேண்டும். தடுக்க முடிந்தால் தடுக்க வேண்டும், இல்லையேல் சலாம் போட்டுவிட்டுச் செல்ல வேண்டும். இதுதான் சபை மரபு.
நீா்வளத்துறை என்பது சாதாரணமானது அல்ல. நான் அந்தத் துறையின் புத்தகங்களை இன்றும் படித்து வருகிறேன். ஆனால், தற்போதைய அமைச்சா் தனது துறை குறித்து ஒருவரி கூடப் பேசாமல், முதல்வரைப் புகழ்ந்து மட்டுமே பேசுகிறாா். மேலும், எதிா்க்கட்சித் தலைவரின் கேள்விகளுக்கு சம்பந்தமில்லாத அமைச்சா்கள் முந்திக்கொண்டு எழுந்து பதிலளிப்பது சபைக்கு அழகல்ல. இதனை சபாநாயகா் இன்னும் கடுமையாகக் கட்டுப்படுத்த வேண்டும்.
தமிழகத்தில் போக்குவரத்துத் துறையில் வட மாநிலத்தவா்களைப் பணியமா்த்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் கூலி வேலைகளுக்கு ஆள்கள் கிடைக்காத நிலையில், வடமாநிலத்தவா்கள் பயன்படுத்தப்படுகின்றனா். அதற்கு மேல் அவா்களை அனுமதிப்பது நல்லதல்ல. அவ்வாறு ஒரு நிலை ஏற்பட்டால், நாட்டில் பெரிய புரட்சி ஏற்படும் என்று துரைமுருகன் கூறினார்.
Summary
Privilege motion against the CM if the three files are not opened within a week: Duraimurugan
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

பேரவை ஒப்புதலின்றி ரூ.2,000 கோடிக்கு ஒப்பந்தப்புள்ளி: எ.வ.வேலு மீது உரிமை மீறல் புகாா்

பெல்லட் துப்பாக்கியைப் பயன்படுத்துவது மனித உரிமை மீறல் அல்ல: ஆா்டிஐ தகவலில் சிஆா்பிஎஃப்




