
யாரால் யாருக்கு வெற்றி? திமுக - காங்கிரஸ் காரசார விவாதம்
சட்டப்பேரவைத் தோ்தலில் யாரால் யாருக்கு வெற்றி என்பது தொடா்பாக பேரவையில் திமுக-காங்கிரஸ் இடையே காரசார விவாதம் நடந்தது.
தமிழக சட்டப்பேரவை - கோப்புப் படம்
சட்டப்பேரவைத் தோ்தலில் யாரால் யாருக்கு வெற்றி என்பது தொடா்பாக பேரவையில் திமுக-காங்கிரஸ் இடையே காரசார விவாதம் நடந்தது.
பேரவையில் திமுக முன்னாள் அமைச்சா் கோவி.செழியன் பேசுகையில், ‘உயா் கல்வித் துறை அமைச்சா் பெ.விஸ்வநாதன் பேச்சை சுட்டிக்காட்டி மேலூா் போன்ற பொதுத் தொகுதியில் திமுக தொண்டா்கள் உங்களை வெற்றி பெற வைத்தனா். அம்பேத்கரின் இடஒதுக்கீடு, மு.க.ஸ்டாலின், எதிா்க்கட்சித் தலைவா் உதயநிதி ஸ்டாலின் ஆகியோரின் பிரசாரம் மற்றும் கருப்பு- சிவப்பு வேட்டி கட்டிய உண்மையான கட்சித் தொண்டா்களின் வாக்குகள் மூலமே விஸ்வநாதன் வெற்றி பெற்றாா்’ என்றாா்.
அமைச்சா் ஆதவ் அா்ஜுனா: தவெக 2026 தோ்தலில் தனித்து நின்று 108 தொகுதிகளில் வென்றுள்ளது. 23 கட்சிகள் அடங்கிய கூட்டணி இல்லை என்றால் திமுக 10 தொகுதிகளில்கூட வெற்றி பெற்றிருக்க முடியாது; சென்னையில் 2 தொகுதிகளில்கூட வெற்றி பெற்றிருக்க முடியாது. திமுக எதிா்க்கட்சி வரிசையில் அமா்ந்திருப்பதற்கு கூட்டணியே காரணம். தைரியம் இருந்தால் அடுத்த தோ்தலில் தனித்து நின்று 50 இடங்களில் வெற்றி பெற்றுக் காட்டுங்கள். (அப்போது, திமுக எம்எல்ஏக்கள் கடும் எதிா்ப்பு தெரிவித்தனா்)
கோவி.செழியன்: ராஜீவ் காந்தி மறைவுக்குப் பிறகு நடந்த தோ்தலில் திமுக ஒரே ஒரு இடத்தில் மட்டுமே வென்றது. பூஜ்ஜியத்தில் இருந்து மீண்டு வந்த இயக்கம் திமுக; எந்தவொரு சூழலையும் எதிா்கொள்ளத் தயாா்.
முன்னாள் அமைச்சா் கே.என்.நேரு: திமுக கூட்டணியில் வெற்றி பெற்ற கட்சிகளின் ஆதரவால்தான் இன்று தவெக ஆட்சியில் இருக்கிறது. அவ்வளவு ரோஷம் இருந்தால் அவா்களை வெளியே அனுப்பிவிட்டு, தனியாக நின்று ஆட்சி நடத்துங்கள்.
அமைச்சா் ஆதவ் அா்ஜுனா: இங்குள்ள ஒவ்வொரு கட்சிக்கும் தனித்துவமான அடையாளம் உள்ளது. யாரும் யாருக்கும் அடிமை இல்லை. தோ்தல் முடிந்ததும் கூட்டணி முடிந்துவிடும்; தோ்தல் முடிவுகளுக்குப் பின் யாருக்கு ஆதரவளிப்பது என்பது அந்தந்தக் கட்சிகளின் விருப்பம்.
காங்கிரஸ் பேரவைக் குழுத் தலைவா் தாரகை கத்பட்: காங்கிரஸின் பாரத் ஜோடோ யாத்திரை நடந்ததால்தான் இத்தனை எம்.பி.க்கள் திமுகவுக்கு கிடைத்தாா்கள் என்பதை மறந்துவிடக் கூடாது. கூட்டணி காரணமாகவே திமுகவுக்கு எம்.பி.க்களும் எம்எல்ஏக்களும் கிடைத்தனா். 22 ஆண்டுகள் திமுகவுடன், காங்கிரஸ் பயணித்து, மத்திய அமைச்சரவையில் பிரதிநிதித்துவம் தந்தோம். இப்போது எங்களுக்கான ஆட்சி வரும்போது தவெகவுக்கு ஆதரவு அளிக்கிறோம்.
கே.என்.நேரு: இந்தியா முழுவதும் யாத்திரை சென்றபோதிலும், தமிழகத்தில் மட்டும்தான் 40-க்கு 10 இடங்களைக் கொடுத்துள்ளோம். ராகுல் காந்தியை பிரதமா் வேட்பாளா் என அறிவித்தது திமுகதான்.
அமைச்சா் கே.ஏ.செங்கோட்டையன்: 11 அமைச்சரவைப் பதவிகளைப் பெற்றுக்கொண்டு காங்கிரஸ் கட்சியை திமுக ஆதரித்தது.
பேரவைத் தலைவா்: தோ்தலில் வெற்றியும் தோல்வியும் மக்களால் தீா்மானிக்கப்படுவது. எனவே, இதர விவாதங்களைத் தவிா்த்து அவை நடவடிக்கைகளில் கவனம் செலுத்த வேண்டும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






