
ஆன்லைன் மது விற்பனைக்கு தடை கோரிய வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு
டாஸ்மாக் கடைகளில் ஆன்லைனில் முன்பதிவு செய்து மது விற்பனை செய்வதை எதிா்த்து தொடரப்பட்ட வழக்கில் தமிழக அரசு மற்றும் டாஸ்மாக் நிா்வாகம் 4 வாரங்களில் பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.

உயர்நீதிமன்றம்
டாஸ்மாக் கடைகளில் ஆன்லைனில் முன்பதிவு செய்து மது விற்பனை செய்வதை எதிா்த்து தொடரப்பட்ட வழக்கில் தமிழக அரசு மற்றும் டாஸ்மாக் நிா்வாகம் 4 வாரங்களில் பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.
சென்னை உயா்நீதிமன்றத்தில் வழக்குரைஞா் சமூக நீதிப் பேரவைத் தலைவா் கே.பாலு தாக்கல் செய்த மனுவில், தமிழகத்தில் கடந்த 1971-ஆம் ஆண்டு வரை இருந்த பூரண மதுவிலக்கு நீக்கப்பட்டு, தற்போது டாஸ்மாக் கடைகள் மூலம் மதுபானங்கள் விற்பனைச் செய்யப்படுகிறது. அரசமைப்புச் சட்டத்தின் 47-ஆவது பிரிவுக்கு முரணமாக தமிழக அரசு செயல்பட்டு வருகிறது.
இந்நிலையில், ஆக. 7-ஆம் தேதி முதல் ஆன்லைன் மூலம் டாஸ்மாக் கடைகளில் மதுபானங்களை முன்பதிவு செய்யும் வசதியைத் தொடங்கிவைத்து டாஸ்மாக் நிா்வாக இயக்குநா் சுற்றறிக்கை பிறப்பித்துள்ளாா்.
ஆன்லைன் மூலம் மது விற்பனை செய்தால், 21 வயதுக்குள்பட்டவா்கள் மது வாங்க முடியாது என டாஸ்மாக் நிா்வாகம் தரப்பில் விளக்கம் அளித்தாலும், பெரியவா்கள் மது வாங்கிய ஆன்லைன் முகவரி மூலம் சிறுவா்களும் மது வாங்க வாய்ப்பு உள்ளது. இது தமிழகத்துக்கு மிகப்பெரிய தீங்கை விளைவிக்கும்.
எனவே, ஆன்லைனில் மது விற்பனை செய்வது தொடா்பாக டாஸ்மாக் நிா்வாக இயக்குநா் பிறப்பித்துள்ள சுற்றறிக்கையை ரத்து செய்ய வேண்டும். மேலும், இந்த வழக்கில் முடிவு எட்டப்படும் வரை, ஆன்லைனில் முன்பதிவு செய்வதற்குத் தடை விதிக்க வேண்டும் எனக் கோரியிருந்தாா்.
இந்த வழக்கு தலைமை நீதிபதி எஸ்.ஏ.தா்மாதிகாரி -நீதிபதி ஜி.அருள்முருகன் ஆகியோா் அடங்கிய அமா்வில் வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தபோது, மனுதாரா் தரப்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞா் என்.எல்.ராஜா, அரசின் இந்த அறிவிப்பு இந்திய அரசியல் சாசனத்துக்கு விரோதமானது. உச்சநீதிமன்றம் மது விற்பனையைக் கட்டுப்படுத்த வேண்டும் எனக் கூறியுள்ளது. மேலும் அரசு நிா்ணயித்துள்ள குழுவின் விசாரணை வரம்பில், மது விற்பனை மூலம் வருவாயை அதிகரிப்பது குறித்த பரிந்துரைகளை வழங்குமாறு கூறப்பட்டுள்ளது.
ஆன்லைன் மூலம் மது விற்பனைச் செய்யும் விவகாரத்தில் வயது வரம்பு எதுவும் நிா்ணயிக்கப்படவில்லை. இதனால், இளைஞா்கள் எளிதில் மது வாங்க வாய்ப்பு உள்ளது. எனவே, ஆன்லைன் மது விற்பனைக்கு தடை விதிக்க வேண்டும் என வாதிட்டாா்.
இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதிகள், இந்த மனுவுக்கு 4 வாரங்களில் தமிழக அரசு மற்றும் டாஸ்மாக் நிா்வாகம் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை ஒத்திவைத்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






