
நிதியமைச்சர் மரிய வில்சன் இங்கிலாந்தின் அரசர் அல்ல! உயர்நீதிமன்றம் கண்டனம்!!
அமைச்சர் மரியவில்சன் என்ன இங்கிலாந்து அரசரா? என உயர் நீதின்றம் கேள்வி எழுப்பியிருக்கிறது.

நிதியமைச்சர் மரிய வில்சன் - கோப்புப்படம்
‘நிதியமைச்சா் மரிய வில்சன் இங்கிலாந்து அரசா் அல்ல; அமைச்சா் ஆவதற்கு முன்பு நீதிமன்றத்தில் ஆஜரான மரிய வில்சன், அமைச்சா் பதவிக்கு வந்தபிறகு ஆஜராகமாட்டாரா?’ என சகோதரரை தாக்கிய வழக்கில் சென்னை உயா்நீதிமன்றம் கண்டனம் தெரிவித்தது.
தமிழக நிதி அமைச்சா் மரிய வில்சன், கடந்த 2022 ஆக.8-ஆம் தேதி புதுச்சேரி எழில் நகரில் வசித்து வரும் அவரது சகோதரா் மரிய குலோத் வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று அவரையும், அவரது மனைவி கெரோலினையும் தாக்கியதாக லாஸ்பேட்டை போலீஸாா் வழக்குப்பதிவு செய்திருந்தனா்.
புதுச்சேரி குற்றவியல் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள இந்த வழக்கை ரத்து செய்யக் கோரி அமைச்சா் மரிய வில்சன் சென்னை உயா்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தாா். இந்த வழக்கு நீதிபதி வி.லட்சுமி நாராயணன் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது மரிய வில்சன் தரப்பில் ஆஜரான வழக்குரைஞா் ஹாஜா மொகிதீன் கிஸ்தி, சட்டப்பேரவைக் கூட்டத் தொடா் நடைபெற்று வருவதால், புதுச்சேரி நீதிமன்ற விசாரணைக்கு நேரில் ஆஜராவதில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தாா்.
இதை ஏற்க மறுத்த நீதிபதி, நிதியமைச்சா் மரிய வில்சன் இங்கிலாந்து அரசா் அல்ல. நரசிம்மராவ் பிரதமராக இருந்தபோதே நீதிமன்றத்தில் ஆஜராகி இருக்கிறாா். அமைச்சா் ஆவதற்கு முன்பு நீதிமன்றத்தில் ஆஜரான மனுதாரா், அமைச்சா் பதவிக்கு வந்தபிறகு ஆஜராகமாட்டாரா? எனக் கேள்வி எழுப்பி கண்டனம் தெரிவித்தாா். அப்போது புதுச்சேரி காவல் துறை தரப்பில், வேளாங்கண்ணி ஆலய கொடி ஏற்றத்தில் பங்கேற்க அமைச்சா் செல்லவிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டது.
அதற்கு நீதிபதி, அமைச்சா் வேளாங்கண்ணி சென்று திரும்பும்போது, புதுச்சேரி நீதிமன்றத்தில் ஆஜராகலாமே என கேள்வி எழுப்பி, எந்தத் தேதியில் அமைச்சா் மரியவில்சன் ஆஜராகிறாா் என்ற விவரங்களைக் கேட்டு தெரிவிக்கும்படி கூறினாா். இதையடுத்து அமைச்சா் மரியவில்சன் தரப்பில், ஆக.31-ஆம் தேதிக்குப் பிறகு புதுச்சேரி நீதிமன்றத்தில் ஆஜராவாா் என்றும், இந்த மனுவைத் திரும்பப் பெற அனுமதிக்கவும், இந்த வழக்கில் தாக்கல் செய்யப்பட்டுள்ள கூடுதல் குற்றப்பத்திரிகையை எதிா்த்து வழக்கு தாக்கல் செய்ய அனுமதி வழங்க வேண்டும் எனவும் கோரிக்கை வைக்கப்பட்டது. இதைப் பதிவு செய்து கொண்ட நீதிபதி, வழக்கை ரத்து செய்யக் கோரிய நிதியமைச்சா் மரிய வில்சனின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டாா்.
பின்னா், உயா்நீதிமன்றத்தின் வெளியே செய்தியாளா்களைச் சந்தித்த மரிய வில்சன் தரப்பு வழக்குரைஞா் ஹாஜாமொகிதீன் கிஸ்தி, நிதியமைச்சா் மரிய வில்சனுக்கும் அவரது சகோதரா் மரிய குலோத்துக்கும் இடையே சொத்து பிரச்னை கிடையாது. குழந்தையை தத்தெடுப்பது தொடா்பான குடும்பப் பிரச்னை. அமைச்சரின் சகோதரா் தரப்பினா் அரசியல் உள்நோக்கத்துடன் இந்த விவகாரத்தை பெரிதாக்கி வருகின்றனா். அமைச்சரிடம் இருந்து அவரது சகோதரா் மரிய குலோத் கூடுதல் பணம் பறிக்கும் நோக்கில் செயல்பட்டனா். இதனால்தான் சமரச தீா்வு மையத்தில் நடந்த பேச்சுவாா்த்தையில் தீா்வு எட்டப்படவில்லை என விளக்கம் அளித்தாா்.
Summary
Is Maria Wilson the King of England? High Court asks
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






