25 ஆண்டுகள்.. தொடரும் துயரம்! 9/11 குற்றவாளிகளின் வீட்டு மேலாளர் வெளியிட்ட தகவல்! தேசிய விளையாட்டு நாள்: முதல்வர் விஜய் வாழ்த்து!பதக்க வாய்ப்பை இழந்த இந்தியா: ஆசிய விளையாட்டுப் போட்டியில் நீரஜ் சோப்ரா விலகல்!நேபாள வெள்ளம்! காணாமல் போனவர்கள் எண்ணிக்கை 3,000 ஆக அதிகரிப்பு! பாகிஸ்தான் சென்றாரா விஜய்? பொய் செய்தி பரப்புவதில் சாதனை படைக்கும் தவெக! ஆர்.பி. உதயகுமார் குற்றச்சாட்டுசூட்கேஸ், பிரியாணி டபராவில் மனித உடல்! 2வது குற்றவாளியும் கைது! தலை எங்கே? கொலை நடந்தது ஏன்?

காங்கிரஸுடன் கூட்டணி வைத்துக் கொண்டே பாஜகவின் நிழல் ஆட்சியை நடத்தும் விஜய் அரசு! திமுக

காங்கிரஸுடன் கூட்டணி வைத்துக் கொண்டே பாஜகவின் நிழல் ஆட்சியை விஜய் அரசு நடத்துவதாக திமுக முன்னாள் எம்எல்ஏ கூறியிருப்பது பற்றி...

DMK statement: 'Vijay government is running a shadow BJP administration while staying in an alliance with the Congress!

இ. பரந்தாமன்

Published On :10 வினாடிகள் முன்பு

காங்கிரஸுடன் கூட்டணி வைத்துக் கொண்டே பாஜகவின் நிழல் ஆட்சியை விஜய் அரசு நடத்துவதாக திமுக சட்டத் துறை இணைச் செயலரும் முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினருமான இ. பரந்தாமன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கை: தமிழ்நாட்டின் இடஒதுக்கீடு மற்றும் சமூக நீதி வரலாற்றுப் பக்கங்களில் இருந்து பெரியார், அம்பேத்கர், ஜவாஹர்லால் நேரு ஆகியோரின் பெயர்கள் நீக்கப்பட்டிருப்பதை வன்மையாகக் கண்டிக்கிறோம்.

மானிய கோரிக்கைகளின்போது துறையின் அமைச்சர்களால் சட்டப்பேரவையில் வைக்கப்படும் முக்கிய ஆவணம், கொள்கை விளக்க குறிப்புகள். ஒவ்வொரு துறை மானிய கோரிக்கை விவாதம் தொடங்கும் முன்பு துறை அமைச்சர்கள், ’கொள்கை விளக்க குறிப்பை படித்ததாக அவை நடவடிக்கை குறிப்பில் பதிவு செய்து கொள்ளுங்கள்’ என சொல்லுவார்கள். அதன்படி அவை சட்டப்பேரவை நடவடிக்கை குறிப்பிலும் பதிவு செய்யப்படும்.

சட்டப்பேரவையில் அமைச்சர் சம்பத் குமார் படித்த பிற்படுத்தப்பட்டோர் மிகப் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை கொள்கை விளக்கக் குறிப்பில், ’இடஒதுக்கீடு’ என்ற பத்தியில் பெரியார், அம்பேத்கர், ஜவாஹர்லால் நேரு ஆகியோரின் பெயர்களை திட்டமிட்டே நீக்கியிருக்கிறார்கள். முந்தைய திமுக ஆட்சியில் கொள்கை விளக்க குறிப்பில் இடம்பெற்ற இவர்களின் பெயர்களை நீக்குவதற்கு எங்கிருந்து துணிச்சல் வந்தது? மைனாரிட்டி அரசாக இருந்து கொண்டு, கூட்டணி அரசின் தயைவில் ஆட்சியை நடத்திக் கொண்டிருக்கும்போதே இந்த அத்துமீறலை செய்திருக்கிறார்கள்.

திமுக மாடல் ஆட்சியில் கடந்த ஆண்டு பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் சட்டப்பேரவையில் தாக்கல் செய்த கொள்கை விளக்கக் குறிப்பில் இடஒதுக்கீடு பற்றி குறிப்பிடும்போது, ’1951-இட ஒதுக்கீடு தொடர்பாக வெளியிடப்பட்டிருந்த வகுப்புவாரி பிரதிநிதித்துவ அரசாணை உச்ச நீதிமன்றத்தால் ரத்து செய்யப்பட்டது. இதனை எதிர்த்து பெரியார் தமிழ்நாட்டில் வழி நடத்திய எதிர்ப்பு ஊர்வலங்கள் மற்றும் கண்டனக் கூட்டங்களின் விளைவாக அரசமைப்புச் சட்டத்தில் முதல் திருத்தத்தில் பிரிவு 15(4) சேர்க்கப்பட காரணமாக அமைந்தது. பிரதமர் ஜவாஹர்லால் நேரு மற்றும் சட்ட அமைச்சர் அம்பேத்கர் ஆகியோர் முன்னெடுத்து இந்த முதல் அரசமைப்புச் சட்டத் திருத்தத்திற்கு வழி வகுத்தனர்’ என குறிப்பிட்டிருந்தார்.

இந்த முக்கியமான பகுதியை விஜய் அரசு முற்றிலும் நீக்கிவிட்டது. கடந்த ஆண்டு மட்டுமல்ல, அதற்கு முந்தைய ஆண்டுகளிலும் இந்த பகுதியை கொள்கை விளக்க குறிப்பில் திமுக அரசு குறிப்பிட்டு வந்திருக்கிறது. திமுக ஆட்சியின் திட்டப் பெயர்களை நீக்குவது போல, பெரியார், அம்பேத்கர், ஜவாஹர்லால் நேரு ஆகியோரின் பெயர்களையும் நீக்கிவிட்டார்கள்.

மு.க.ஸ்டாலின் ஆட்சியில் கொள்கை விளக்கக் குறிப்பில் இடம் பெற்றிருந்த பெரியார், அம்பேத்கர், ஜவாஹர்லால் நேரு மட்டுமல்ல, இடஒதுக்கீட்டு வரலாற்றையும் சுருக்கிவிட்டது விஜய் அரசு. நீதிக்கட்சி குறித்த குறிப்புகள், வகுப்புவாரிய பிரதிநிதித்துவ அரசாணை, பெரியாரின் போராட்டங்கள், இடஒதுக்கீடு கொள்கை, இடஒதுக்கீடு வரலாறு, மண்டல் கமிஷன், மத்திய அரசுப் பணி மற்றும் கல்வி நிலையங்களில் மாணவர்கள் சேர்க்கையில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 27 விழுக்காடு இடஒதுக்கீடு பற்றியெல்லாம் தற்போதைய கொள்கை விளக்க குறிப்பு ஆவணத்தில் திட்டமிட்டுத் தவிர்க்கப்பட்டிருப்பது அதிர்ச்சியையும் வேதனையையும் ஏற்படுத்தியிருக்கிறது.

தமிழ்நாட்டின் உயிர் நாடியான சமூக நீதி வரலாற்றையே இருட்டடிப்பு செய்திருக்கிறார் முதல்வர் விஜய். சமூக நீதியின் தொட்டிலாகவும், ஒடுக்கப்பட்டோரின் குரலாகவும் விளங்கும் தமிழ்நாட்டில், இடஒதுக்கீட்டுப் போராட்டத்தின் பேராசான்களாக விளங்கிய தலைவர்களின் பெயர்களை அதிகாரபூர்வ அரசு ஆவணங்களில் இருந்து மறைப்பது வரலாற்றுத் துரோகம்.

திமுக ஆட்சியில் இருந்த நீதிக்கட்சி மற்றும் சமூக நீதித் தலைவர்களின் பங்களிப்புகள், தவெக ஆட்சியில் முற்றிலுமாகத் துடைத்தெறியப்பட்டிருப்பது தற்செயல் அல்ல. இது அதிகார வர்க்கத்தின் திட்டமிட்ட சதி வேலை.

நிச்சயமாக இது உள்நோக்கம் கொண்ட செயல்பாடாகவே தெரிகிறது. ஒவ்வொரு ஆண்டும் கொள்கை விளக்க குறிப்பை தயாரிக்கும் போது முந்தைய ஆண்டு கொள்கை விளக்க குறிப்பேட்டில் இருந்துதான் எழுதப்படும். அதில் உள்ள அடிப்படை தகவல்களை மாற்ற மாட்டார்கள். புதிதாக அப்டேட் மட்டுமே சேர்க்கப்படும். இந்த முறையை மாற்றியிருப்பதால்தான் உள்நோக்கம் கொண்டது என கருத வேண்டியிருக்கிறது. சமூக நீதியின் வேர்களையே வெட்டத் துணிந்திருக்கிறார்கள்.

தவெகவின் ஐந்து கொள்கைத் தலைவர்களாக பெரியார், அம்பேத்கர், காமராஜர், வேலுநாச்சியார், அஞ்சலை அம்மாள் ஆகியோர் குறிப்பிடப்படுகிறார்கள். பெரியார், அம்பேத்கர் ஆகியோருக்கு முதல்வர் விஜய் கொடுக்கும் மரியாதை இவ்வளவுதானா? மேடையில் முழங்க பெரியாரும் அம்பேத்கரும் வேண்டும். ஆனால், அவர்களின் இடஒதுக்கீட்டு தியாகம் மட்டும் வேண்டாமா? பெரியாரையும் அம்பேத்கரையும் கட்சிக்கு வெறும் பிராண்ட் அம்பாசிடர்களாக மட்டுமே பயன்படுத்துகிறீர்களா? உங்களின் இரட்டை வேடம், ஆட்சிக்கு வந்த பிறகு கிழிந்து தொங்குகிறது. ’கொள்கைத் தலைவர்களின் கொள்கைதான் எங்கள் மூச்சு. சமத்துவமே எங்கள் பாதை. பிறப்பொக்கும் எல்லோருக்கும்’ என்றெல்லாம் மேடைகளில் முழங்கியது வெற்று முழக்கமா? வாக்கு வங்கிக்கு ஒரு முகம் - கொள்கைக்கு ஒரு முகமா?

சட்டப்பேரவையில் சினிமா பாட்டு பாடத் தெரிந்த அமைச்சர் சம்பத் குமாருக்கு கொள்கை விளக்க குறிப்பில் தலைவர்கள் பெயரை நீக்கப்பட்டதை எல்லாம் பார்க்க நேரமில்லையா? கோலிவுட் உலகத்தை விட்டு அவர் இன்னும் வரவில்லை. தியேட்டரை விட்டு சட்டப்பேரவைக்கு வந்திருக்கிறோம் என்பதுகூட தெரியாமல் இருக்கிறார் அமைச்சர்.

பிரதமர் நேருவின் ஆட்சியில் கொண்டு வரப்பட்ட முதலாவது அரசியலமைப்புச் சட்டத் திருத்தமும், அதற்குப் பின்னால் இருந்த பெரியார், அம்பேத்கரின் சமரசமற்ற சமூக நீதிப் போராட்டங்களும்தான் இன்று தமிழ்நாட்டில் பிற்படுத்தப்பட்டோர் அனுபவிக்கும் 69 % இடஒதுக்கீட்டின் அடித்தளம். அந்த வரலாற்றையே கிழித்தெறிய முற்படுகிறது தவெக அரசு. நேரு பெயரை நீக்கியிருக்கிறார்களே. ’விஜய் போற்றி’ பாடும் பஜனை மடமாகிவிட்ட சத்தியமூர்த்தி பவனை விஜய்பவன் என மாற்றிக் கொள்ளுங்கள். காங்கிரஸுடன் கூட்டணி வைத்துக் கொண்டே பாஜகவின் நிழல் ஆட்சியை நடத்தி கொண்டிருக்கிறது விஜய் அரசு.

பெரியார், அம்பேத்கர், ஜவாஹர்லால் நேரு ஆகியோரின் பெயர்களை மீண்டும் சேர்த்து திருத்தப்பட்ட கொள்கை விளக்கக் குறிப்பேட்டை உடனடியாக வெளியிட வேண்டும் என வலியுறுத்துகிறோம் என்று தெரிவித்துள்ளார்.

Summary

DMK legal wing joint secretary and former MLA E. Paranthaman stated that the Vijay government is running a shadow BJP administration while maintaining an alliance with the Congress.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.