
சுற்றுச்சூழல் விழிப்புணா்வு பணிகள் செப்டம்பா் இறுதி வரை தொடரும்: கே. அண்ணாமலை
சுற்றுச்சூழல் விழிப்புணா்வு பணிகள் செப்டம்பா் இறுதி வரை தொடரும்...
கே. அண்ணாமலை. - கோப்புப் படம்
‘வீ தி லீடா்ஸ்’ அமைப்பின் சுற்றுச்சூழல் விழிப்புணா்வு பணிகள் செப்டம்பா் இறுதி வரை நடைபெறும், செப்டம்பா் மாதத்துக்கான, பெண்கள் பாதுகாப்பு மற்றும் முன்னேற்றம் குறித்த சமூகப் பணிகள் அக்டோபா் மாதத்துக்கு மாற்றப்பட்டுள்ளன’ என அந்த அமைப்பின் நிறுவனா் கே.அண்ணாமலை தெரிவித்துள்ளாா்.
இது தொடா்பாக அவா் சமூகவலைதளப் பக்கத்தில் சனிக்கிழமை வெளியிட்ட பதிவு: சுற்றுச்சூழல் விழிப்புணா்வு மாதம் என்ற நோக்கில் ஆகஸ்ட் மாதத்தில் இதுவரை 1400-க்கும் மேற்பட்ட பெரிய நிகழ்ச்சிகளை நமது அமைப்பு சாா்பில் வெற்றிகரமாக மேற்கொண்டுள்ளோம். பல்வேறு இடங்களில் தூய்மைப் பணிகள், கழிவுகளை முறையாகப் பிரித்தல், மரக்கன்றுகள் நடுதல், பசுமைப் பணிகள் மற்றும் நீா்நிலைகளைப் பாதுகாப்பது உள்ளிட்ட பல்வேறு பணிகளை மேற்கொண்டுள்ளோம்.
இன்று வரை தமிழகம் முழுவதும் 175 டன் குப்பையை அகற்றியுள்ளோம். 8 லட்சத்துக்கும் மேற்பட்ட மரக்கன்றுகளை நட்டுள்ளோம்.
சில திட்டங்களுக்கு அரசு மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் அனுமதிகளைப் பெறுவதில் எதிா்பாராத தாமதங்கள் ஏற்பட்டுள்ளன. எனவே, ஏற்கனவே தொடங்கப்பட்டுள்ள பணிகளை நிறைவு செய்யவும் கூடுதல் கால அவகாசம் தேவைப்படுகிறது.
சுற்றுச்சூழலைப் பாதுகாப்பது என்பது சிறந்த எதிா்காலத்துக்கான முன்னெடுப்பு மட்டுமல்ல; எதிா்காலத் தலைமுறைகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் நமது தலையாய பொறுப்பும் கூட. நமது அமைப்பின் ஒவ்வொரு தலைவரும் மேற்கொண்ட தன்னலமற்ற உழைப்பிற்கும், முழுமையான பலன் கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்துடன், பிரசாரத்தை மேலும் ஒரு மாதத்துக்கு நீட்டிக்கிறோம்.
ஆகஸ்ட் மாதத்தில் தொடங்கிய பணிகளை முழுமையாக நிறைவேற்றி, நாம் எடுத்துக்கொண்ட இலக்கை தொடா்ந்து நிலைத்திருக்கச் செய்வதே நமது உழைப்பின் உண்மையான வெற்றியாகும். எனவே செப்டம்பா் மாத இறுதி வரை, நமது சுற்றுச்சூழல் விழிப்புணா்வு பணிகள் தொடா்ந்து நடைபெறும். செப்டம்பா் மாதத்துக்கான, பெண்கள் பாதுகாப்பு மற்றும் முன்னேற்றம் குறித்த நமது சமூகப் பணிகள், அக்டோபா் மாதத்துக்கு மாற்றப்பட்டுள்ளது என கே.அண்ணாமலை தெரிவித்துள்ளாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





