சென்னையில் கார்ல் மார்க்ஸ் சிலை: முதல்வர் ஸ்டாலின் திறப்பு!

கார்ல் மார்க்ஸ் சிலையை திறந்துவைத்த முதல்வர் ஸ்டாலின்.
கார்ல் மார்க்ஸ் சிலையை திறந்துவைத்த முதல்வர் ஸ்டாலின்.
கார்ல் மார்க்ஸ் சிலையை திறந்துவைத்த முதல்வர் ஸ்டாலின்.
Updated on
2 min read

சென்னை, கன்னிமாரா பொது நூலகம், எழும்பூர் அருங்காட்சியக வளாகத்தில் புதிதாக நிறுவப்பட்டுள்ள மாமேதை கார்ல் மார்க்ஸின் திருவுருவச் சிலையினை முதல்வர் ஸ்டாலின் இன்று(பிப். 6) திறந்துவைத்தார்.

செய்தி மக்கள் தொடர்புத் துறை சார்பில் ரூ. 85 லட்சம் மதிப்பீட்டில் கார்ல் மார்க்ஸ் சிலை நிறுவப்பட்டுள்ளது.

கார்ல் மார்க்ஸ் வரலாறு

கார்ல் மார்க்ஸ் ஜெர்மனி, புருசியாவில் உள்ள ட்ரையர் நகரில், 5.5.1818 அன்று பிறந்தார். இவர் ஒரு ஜெர்மானிய தத்துவஞானி, புரட்சிகர, பொருளாதார நிபுணர் மற்றும் வரலாற்றாசிரியர் ஆவார்.

பெர்லின் பல்கலைக்கழகத்தில் வரலாறு, மெய்யியல் ஆகிய துறைகளில் பயின்ற கார்ல் மார்க்ஸ் 1841 இல் யெனா பல்கலைக்கழகத்தில் மெய்யியலுக்கான முனைவர் பட்டம் பெற்றார்.

1841இல் பட்டம் பெற்ற மாமேதை கார்ல் மார்க்ஸ், சில காலம் இதழியல் துறையில் பணிபுரிந்தார். தீவிர அரசியல் கருத்துகளின் விளைவாக ஜெர்மனியை விட்டு வெளியேறி பாரிசு நகரம் சென்றார். 1847இல் தத்துவத்தின் வறுமை (The Poverty of Philosophy) என்னும் முதல் நூலை வெளியிட்டார்.

மாமேதை கார்ல் மார்க்ஸ், பிரெடரிக் ஏங்கல்சுடன் இணைந்து 1848 ஆம் ஆண்டு “பொதுவுடைமை அறிக்கை (The Communist Manifesto)” எனும் நூலை வெளியிட்டார். ஒரு தொழிலாளி ஏன் தொழிலாளியாக மேலும் மேலும் ஏழையாகிறார், ஒரு முதலாளி மேலும் மேலும் பணம் சேர்த்து ஏன் பணக்காரராகிறார் என்பதை அறிவியல் பூர்வமாக இந்நூலில் விளக்கி எடுத்துரைத்தார்.

உலகத் தொழிலாளர்கள் அனைவரது மனத்திலும் மார்க்ஸுக்கென்று ஓர் நிரந்தர இடத்தை இந்நூல் அவருக்கு உருவாக்கிப் பெருமை சேர்த்தது.

1867ஆம் ஆண்டு கார்ல் மார்க்ஸ் தாஸ் கேபிடல் (மூலதனம்) நூலின் முதல் தொகுதியும், பின்னர் அவரது மனைவி அவர்களால் மூலதன நூலின் இரண்டாம் மற்றும் மூன்றாம் தொகுதிகள் வெளியிடப்பட்டது. இன்றைய பொருளாதார அமைப்பு எப்படி இயங்குகிறது என்பதை இந்நூலில் விவரித்துள்ளார்.

மாமேதை கார்ல் மார்க்ஸின் மார்க்ஸியம் கோட்பாடுகள் இந்த மண்ணுலகில் மனிதர்கள் மனிதர்களால் வாழ்வதற்கு வழிகாட்ட முனையும் ஒரு தத்துவக் கோட்பாடு ஆகும் எனக் கூறியுள்ளார். “என்றும் நினைவில் கொள், ஒரு மனிதனாகப் பிறந்தவன் பயனின்றி அழியக்கூடாது” என்று கூறிய மாமேதை கார்ல் மார்க்ஸின் சித்தாந்தங்கள், இன்று வரை உயிர்ப்புடன் இருக்கின்றன.

உலகளவில் சமூக மற்றும் பொருளாதாரச் சிந்தனைக்குப் பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்திய மாமேதை கார்ல் மார்க்ஸ் 14.3.1883 அன்று மறைந்தார்.

கார்ல் மார்க்ஸ் அவர்களின் பொருளாதாரச் சிந்தனைகளை மக்கள் அனைவரும் அறிந்திடும் வகையிலும், அன்னாரது புகழுக்குப் பெருமை சேர்க்கின்ற வகையிலும் தமிழ்நாடு முதலல்வர் ஸ்டாலின் சட்டப்பேரவையில் விதி 110இன் கீழ் சென்னையில் அவருக்குப் புதிதாகத் திருவுருவச் சிலை நிறுவப்படும் என அறிவித்தார்.

அந்த அறிவிப்பின் பயனாக, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இன்று சென்னை, எழும்பூரில் உள்ள கன்னிமாரா பொது நூலகம், அருங்காட்சியக வளாகத்தில் புதிதாக நிறுவப்பட்டுள்ள மாமேதை கார்ல் மார்க்ஸின் திருவுருவச் சிலையினைத் திறந்து வைத்தார்.

Summary

Chief Minister Stalin unveiled the statue of Karl Marx.

கார்ல் மார்க்ஸ் சிலையை திறந்துவைத்த முதல்வர் ஸ்டாலின்.
ஓடிடியில் நாளை வெளியாகிறது பராசக்தி!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com