தமிழக காவல்துறை
தமிழக காவல்துறை

தமிழகத்தில் காணொலி மூலம் சாட்சி விசாரணைக்கு வரவேற்பு!

தமிழகத்தில் காணொலி மூலம் சாட்சி விசாரணை மேற்கொள்ளும் நடைமுறை முதல்முறையாக அமல்படுத்தப்பட்டுள்ளது.
Published on

தமிழகத்தில் காணொலி மூலம் சாட்சி விசாரணை மேற்கொள்ளும் நடைமுறை முதல்முறையாக அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த முன்முயற்சியை காவல் துறையினர் வரவேற்றனர்.

தமிழக காவல் துறையிடம் பொதுமக்கள் ஆண்டுக்கு சுமார் 20 லட்சம் புகார்கள் அளிக்கின்றனர். அதன்பேரில் முகாந்திரத்தின் அடிப்படையில் சுமார் 5 லட்சம் வழக்குகள் பதிவு செய்யப்படுகின்றன. சிறு குற்ற வழக்குகள், நீதிமன்றங்களால் உடனடியாகத் தீர்க்கப்படுகின்றன. குடும்பங்களுக்கு இடையிலான தகராறு தொடர்பான வழக்குகள், உணர்ச்சிவசப்பட்டு நிகழும் குற்றங்கள் தொடர்பான வழக்குகள் சில மாதங்களில் சமரசம் காணப்பட்டு திரும்பப் பெறப்படுகின்றன.

இருப்பினும் இதுபோன்ற வழக்குகள், காவல் துறையின் பணிச் சுமை, சாட்சிகளையும், தடயங்களையும் ஆஜர்படுத்துவதில் ஏற்படும் தாமதம், நீதித் துறையில் ஏற்பட்டுள்ள காலிப் பணியிடங்களால் ஏற்படும் தாமதம் போன்றவற்றால் வழக்கு விசாரணையில் தொய்வு ஏற்படுகிறது.

இதன் காரணமாக தமிழகத்தில் உள்ள நீதிமன்றங்களில் மட்டும் சுமார் 7 லட்சம் குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில் குற்ற வழக்குகளின் விசாரணையை விரைவுபடுத்தி, குற்றவாளிகளுக்கு நீதிமன்றம் மூலம் சட்டப்படி தண்டனை பெற்றுக் கொடுப்பதில் தமிழக காவல் துறை அண்மைக்காலமாக தீவிரம் காட்டி வருகிறது.

காணொலி விசாரணை

சாட்சி விசாரணையை காணொலிக் காட்சி மூலம் நடத்தலாம் என தமிழக உள்துறை அண்மையில் உத்தரவிட்டது. காணொலி மூலம் சாட்சிகளை விசாரிக்க பாரதிய நாகரிக் சுரக்ஷா சன்ஹிதா சட்டம் -2023 பிரிவு 265, 266 சட்டபூர்வ அனுமதி வழங்குகிறது. இதனடிப்படையில் தமிழக உள்துறை கூடுதல் தலைமைச் செயலர் தீரஜ்குமார் பிறப்பித்த உத்தரவின்படி, தமிழக காவல் துறையில் மாநிலம் முழுவதும் உள்ள நகர காவல் ஆணையர் அலுவலகம், மாவட்ட கண்காணிப்பாளர் அலுவலகம், அனைத்து அரசு மருத்துவமனைகள், மத்திய சிறைகள், மாவட்ட சிறைகள், கிளைச் சிறைகள், தடயவியல் துறை அலுவலகங்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகங்கள், கோட்டாட்சியர் அலுவலகங்கள், மாநகராட்சி, நகராட்சி ஆணையர் அலுவலகங்கள், தலைமைச் செயலகத்தில் இருக்கும் அரசு செயலர்கள், ஆணையர் அலுவலகங்கள் ஆகியவை காணொலி மூலம் நீதிமன்ற விசாரணைக்கு ஆஜராகும் கட்டமைப்பை உருவாக்கிக் கொள்ள வேண்டும்.

தமிழகத்தில் 2004-ஆம் ஆண்டு முதல் சிறைகளில் இருக்கும் கைதிகளை காணொலி மூலம் நீதிமன்ற விசாரணைக்கு ஆஜர்படுத்தும் முறை அமலில் உள்ளது. இந்த நடவடிக்கையால் காவல் துறையினரின் பணிச் சுமை வெகுவாகக் குறைந்தது. மேலும், நீதிமன்றத்துக்கு அழைத்துச் செல்லப்படும் கைதிகள் தப்பியோடும் சம்பவம், கைதிகள் மீதான தாக்குதல் தூக்குதல் நிகழ்வுகள், சிறைக்குள் சட்ட விரோத பொருள்களைக் கடத்துவது உள்ளிட்ட குற்றங்கள் பெருமளவு குறைந்தன.

இதேபோல 2018-ஆம் ஆண்டு முதல் வழக்கு விசாரணைக்கு ஆஜராகுமாறு சம்பந்தப்பட்டவர்களின் கைப்பேசிகளுக்கு குறுஞ்செய்தி மூலம் அழைப்பாணை அனுப்பப்படும் நடைமுறை பின்பற்றப்பட்டது. இதனால் நீதிமன்ற அழைப்பாணை உத்தரவுடன் சம்பந்தப்பட்டவர்களை காவல் துறையினர் தேடி அலையும் நேரம் குறைந்தது.

நேர விரயம், செலவு தவிர்ப்பு

தமிழகத்தில் பெரும்பாலான அரசு அலுவலகங்கள், காணொலி மூலம் ஆஜராகும் கட்டமைப்புகளை ஏற்கெனவே கொண்டுள்ளன. இருப்பினும், மாநில அளவில் மாநகர காவல் ஆணையர் அலுவலகங்கள், மாவட்ட எஸ்.பி. அலுவலகங்கள் ஆகியவற்றில் இதற்கென பிரத்யேக அறைகள் இல்லை. அவற்றை உருவாக்க உத்தரவிடப்பட்டது. இப்போது காவல் துறையினர் மட்டுமே சில வழக்குகளில் நீதிமன்ற சாட்சி விசாரணைக்கு காணொலி மூலம் ஆஜராகி வருகின்றனர்.

இது படிப்படியாக விரிவுபடுத்தப்பட்டு, மாநிலம் முழுவதும் அனைத்து காவல் நிலையங்களில் இருந்தும் அதிகாரிகள், சாட்சிகள் விசாரணைக்கு ஆஜராவார்கள் என காவல் துறையைச் சேர்ந்த உயர் அதிகாரி தெரி வித்தார். பிற துறைகளிலும் படிப்படியாக சாட்சிகள் விசாரணை காணொலி மூலம் நடத்தப்படும். இதனால் அரசு அதிகாரிகளின் கால விரயம், பண விரயம், மனித உழைப்பு விரயம் தவிர்க்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

விரைவாக தண்டனை

தமிழகத்தில் முதல்முறையாக அமல்படுத்தப்பட்டுள்ள இந்தத் திட்டத்துக்கு காவல் துறையினர் மத்தியில் வரவேற்பு கிடைத்தது.

இதுதொடர்பாக தமிழக காவல் துறையைச் சேர்ந்த உயர் அதிகாரி ஒருவர் கூறியது: குற்ற வழக்குகளின் விசாரணையில் இது பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்.

ஏனெனில் கடந்த காலங்களில் கைதிகளை காணொலி மூலம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியபோதும், குறுஞ்செய்தி மூலம் அழைப்பாணை அனுப்பத் தொடங்கிய போதும் காவல் துறையின் தினசரி பணியில் பெரும் மாற்றம் ஏற்பட்டது. அதைவிடப் பெரிய மாற்றம், சாட்சி விசாரணை காணொலி மூலம் முழுமையாக நடத்தப்படும்போது நிகழும்.

இதன் விளைவாக நீதிமன்றத்தின் முன் விசாரணை அதிகாரிகள், சாட்சிகளாக உள்ள அரசு அதிகாரிகள் உடனடியாக ஆஜராவார்கள். இதனால் வழக்கின் விசாரணையை விரைந்து நடத்தி, குற்றவாளிகளுக்கு தண்டனை வேகமாக கிடைப்பதற்குரிய வாய்ப்பு அதிகம் உள்ளது என்றார்.

சிறைக் கைதிகளிடம் காணொலி விசாரணை

தமிழகத்தில் கைதிகளிடம் கடந்த 5 ஆண்டுகளில் 6.61 லட்சம் முறை காணொலி மூலம் விசாரணை நடத்தப்பட்டது.

2004-ஆம் ஆண்டுமுதல் சிறைக் கைதிகளை காணொலி மூலம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தும் திட்டம் அமலில் உள்ளது. தொடக்கத்தில் ஒரு சில நீதிமன்றங்களிலும், சில சிறைகளிலும் மட்டுமே இந்த வசதி இருந்தது தற்போது பெரும்பாலானவற்றில் இந்த வசதி உள்ளது.

குறிப்பாக, தமிழகத்தில் 9 மத்திய சிறைகள், 14 மாவட்ட சிறைகள், 89 கிளைச் சிறைகள் உள்பட 117 சிறைகள் மூலம் 403 நீதிமன்றங்களுடன் காணொலி மூலம் கலந்துரையாடும் வசதி உள்ளது. மேலும் 5 பெண்கள் சிறைகள், 14 மாவட்ட சிறைகள் ஆகியவற்றில் இந்த வசதியைச் செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

2021-ஆம் ஆண்டுமுதல் 2025-ஆம் ஆண்டு மார்ச் மாதம் வரை 6 லட்சத்து 61,659 முறை கைதிகள் காணொலி மூலம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளனர். இதனால் கைதிகள் பாதுகாப்பு உறுதி செய்யப்படுகிறது.

முன்னோடி மாநிலங்கள்

காணொலி மூலம் நீதிமன்ற சாட்சி விசாரணை நடத்தும் திட்டத்தில் ராஜஸ்தான், உத்தர பிரதேசம் ஆகிய மாநிலங்கள் முன்னோடிகளாக உள்ளன. அந்த மாநிலங்களில் பிஎன்எஸ்எஸ் சட்டம் அறிமுகமானதும், இந்த திட்டம் தொடங்கப்பட்டது. தற்போது, பெரும்பாலான வழக்குகளின் சாட்சி விசாரணை காணொலி மூலம் நடைபெறுகிறது. இந்த மாநிலங்களில் குற்றவாளிகளுக்கு விரைவாக தண்டனை வழங்க இது உதவுவதாக காவல் துறையினர் கூறினர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com