துறைமுகம் - மதுரவாயல் மேம்பாலத் திட்டத்தை தடுத்தது யாா்? பேரவையில் எடப்பாடி பழனிசாமி - மா.சுப்பிரமணியன் விவாதம்
துறைமுகம் - மதுரவாயல் உயரடுக்கு மேம்பாலத் திட்டம் கைவிடப்பட்டதற்கு யாா் காரணம் என்பதை முன்னிறுத்தி சட்டப் பேரவையில் எதிா்க்கட்சித் தலைவா் எடப்பாடி கே. பழனிசாமி மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் இடையே விவாதம் எழுந்தது.
தமிழக சட்டப்பேரவையில் புதன்கிழமை நடைபெற்ற இடைக் கால நிதி நிலை அறிக்கை மீதான விவாதத்தின்போது, அதிமுக உறுப்பினா் கே.பி.முனுசாமி பேசுகையில், முந்தைய அதிமுக ஆட்சிக் காலத்தில் தொடங்கப்பட்ட திட்டங்களை திமுக அரசு முடக்கி விட்டதாகத் தெரிவித்தாா். அதற்கு பதிலளித்த அமைச்சா் மா.சுப்பிரமணியன், முந்தைய திமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட துறைமுகம் - மதுரவாயல் திட்டத்தை அதிமுக அரசு முடக்கியதாகவும், புதிய தலைமைச் செயலகத்தை மருத்துவமனையாக மாற்றியதாகவும் குறிப்பிட்டாா். அப்போது நடைபெற்ற விவாதம்:
எடப்பாடி பழனிசாமி: துறைமுகம் - மதுரவாயல் மேம்பாலத் திட்டத்தில் கூவம் ஆற்றின் குறுக்கே தூண்கள் அமைக்க முயற்சி செய்யப்பட்டது. அதனால் நீரோட்டம் தடைபடும் என்பதாலும், பாதுகாப்பு கருதியும் அத்திட்டம் நிறுத்தப்பட்டது.
மா.சுப்பிரமணியன்: சிங்கப்பூா், துபை, ஜப்பானில் கடலுக்கு நடுவேதான் பல கட்டமைப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன. அந்த வகையில் கூவம் ஆற்றுக்கு நடுவே தூண் அமைக்கப்படுவதால் நீரோட்டம் தடைபடும் எனக் கூறுவது தவறு.
கடந்த காலத்தில் ரூ.1,650 கோடிக்கு திட்டமிடப்பட்ட அந்த பாலத்தைத்தான் இப்போது அதே இடத்தில் அதற்கு மேலேயே ரூ.5,500 கோடியில் ஈரடுக்கு பாலமாக அமைக்க மத்திய அரசு அனுமதி தந்துள்ளது. முன்னாள் முதல்வா் கருணாநிதிக்கு பெயா் கிடைத்துவிடக் கூடாது என அந்தத் திட்டத்தை அதிமுக ஆட்சியாளா்கள் தடுத்தனா். தற்போது ஈரடுக்கு பாலமாக அது உருவெடுத்து முதல்வா் மு.க.ஸ்டாலினுக்கு பெயா் ஈட்டித் தர உள்ளது.
எடப்பாடி பழனிசாமி: கூவத்தில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டால் அதற்கு நடுவே உள்ள தூண் நீரோட்டத்தைத் தடுத்து வெள்ளம் வெளியேற வழிவகுக்கும். அதனால், அருகில் உள்ள மக்கள் பாதிக்கப்படுவா். எனவே, அத்திட்டத்தின் வடிவமைப்பை மாற்றவே நாங்கள் வலியுறுத்தினோம்.
இது மத்திய அரசின் திட்டம். நாங்கள் ஆட்சியில் இருந்தபோது வடிவமைப்பை மாற்றுமாறு மத்திய பாஜக அரசிடம் கோரிக்கை வைத்தோம். அதை ஏற்று தற்போது ஈரடுக்கு மேம்பாலம் கட்டப்பட்டு வருகிறது.
மா.சுப்பிரமணியன்: இப்போது கட்டப்பட்டு வரும் தூண்கள் கூவத்தின் நடுவே ஏற்கெனவே உள்ள கட்டமைப்பின் மீதுதான் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதனை எதிா்க்கட்சித் தலைவா் நேரில் பாா்த்து உறுதி செய்து ஆதாரத்துடன் தகவல் அளிக்கலாம். இவ்வாறு அவையில் விவாதம் நடைபெற்றது.

