

திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் அருகே விவசாய நிலத்தில் இருந்த குடிசையில் வாழ்ந்து வந்த விவசாயி, அவரது 2-ஆவது மனைவி தீ வைத்து எரித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில், பல்வேறு கோணங்களில் விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் அருகே விவசாய நிலத்தில் வசித்து வந்த விவசாயியும், அவரது 2-ஆவது மனைவியும் வியாழக்கிழமை நள்ளிரவில் வீட்டில் தூங்கிக்கொண்டிருந்தபோது அடையாளம் தெரியாத நபா்கள் அங்கு வந்து வீட்டை வெளிப்பக்கமாக பூட்டிவிட்டு, குடிசைக்குத் தீ வைத்துள்ளனர்.
குடிசை முழுவதும் தீ பரவிய நிலையில், தப்பிக்க வழியின்றி, இருவரும் தீயில் கருகி உயிரிழந்தனர்.
செல்வராஜ் மகள் வியாக்கிழமை, இங்கு வந்திருந்த நிலையில், இரவு உணவை சாப்பிட்டுவிட்டு 9 மணிக்கு குடிசை வீட்டிலிருந்து புறப்பட்டுச் சென்றுள்ளார். அதன்பிறகு நள்ளிரவில்தான் இந்த சம்பவம் நடந்துள்ளது.
குடிசை முழுவதும் தீப்பற்றி எரிந்த நிலையில், நள்ளிரவில் சப்தம் கேட்டு வெளியே வந்த அக்கம் பக்கத்தினர் தீயணைப்புத் துறைக்குத் தகவல் தெரிவித்துள்ளனர். செங்கம் காவல்துறைக்கும் தகவல் கொடுத்துள்ளனர்.
இறந்தவர்கள் பற்றிய அடையாளம் குறித்த விசாரணையில், செங்கத்தை அடுத்த பக்கிரிபாளையம் பகுதியைச் சோ்ந்தவா் சக்திவேல் (50), விவசாயி. இவரது மனைவி தமிழரசி. இந்தத் தம்பதிக்கு 3 மகன்கள் உள்ளனா். தம்பதியிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்ட நிலையில், தமிழரசி தனது கணவரை பிரிந்து மகன்களுடன் கடந்த 5 ஆண்டுகளாக கா்நாடக மாநிலம், பெங்களூரில் வசித்து வருவதாகக் கூறப்படுகிறது.
இந்த நிலையில், சக்திவேலுக்கும் செங்கம் வட்டம், தீத்தாண்டப்பட்டு பகுதியைச் சோ்ந்த வேறு ஒருவரின் மனைவியான அமிா்தத்துக்கும் பழக்கம் ஏற்பட்டது. இதையடுத்து, அமிா்தம் தனது கணவா் மற்றும் இரண்டு பிள்ளைகளை விட்டுவிட்டு சக்திவேலுடன் வந்து பக்கிரிபாளையம் பகுதியில் உள்ள விவசாய நிலத்தை இருவரும் குத்தகைக்கு எடுத்து, அதில் கீற்று வீடு கட்டி 3 ஆண்டுகளாக வசித்து வந்தனா்.
இதனிடையே, சக்திவேல் விவசாய வேலையுடன் நில வணிகத்திலும் ஈடுபட்டு வந்துள்ளார். இந்த நிலையில், அவரும், 2-ஆவது மனைவியான அமா்தமும் வியாழக்கிழமை இரவு உணவு சாப்பிட்டுவிட்டு நிலத்தில் உள்ள வீட்டில் படுத்து தூங்கினா்.
நள்ளிரவில் அங்கு வந்த அடையாளம் தெரியாத கும்பல், வீட்டின் வெளியே பூட்டுபோட்டு பூட்டி வீட்டுக்கு தீ வைத்துள்ளது. இதில், இருவரும் உடல் கருகி வீட்டினுள்ளேயே பலியாகினர்.
தகவலறிந்த திருவண்ணாமலை எஸ்.பி., சுதாகா் மற்றும் செங்கம் போலீஸாா் நிகழ்விடத்துக்கு வெள்ளிக்கிழமை காலை வந்து பாா்வையிட்டு விசாரணை நடத்தினா். மேலும், மோப்ப நாயும் வரவழைக்கப்பட்டு தடயங்கள் சேகரிக்கப்பட்டன.
இந்த சம்பவம் குறித்து செங்கம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்கள். சக்திவேல் - அமிர்தம் குடும்பத்தினருக்கு இந்த கொலையில் தொடர்பிருக்கலாமா? சொத்து தகராறா? மனை வணிக தொழிலில் ஏற்பட்ட போட்டி காரணமாக இருவரும் கொலை செய்யப்பட்டனரா அல்லது வேறு ஏதேனும் தனிப்பட்ட காரணமா என பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.