முதல்வர் ஸ்டாலின்.
முதல்வர் ஸ்டாலின்.

10 லட்சம் மாணவா்களுக்கு மடிக்கணினி வழங்கும் திட்டம்: முதல்வர் ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்கிறார்!

10 லட்சம் கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு மடிக்கணினிகள் வழங்கும் திட்டத்தை முதல்வா் மு.க.ஸ்டாலின் இன்று (ஜன.5) தொடங்கி வைக்கிறாா்.
Published on

பத்து லட்சம் கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு மடிக்கணினிகள் வழங்கும் திட்டத்தை முதல்வா் மு.க.ஸ்டாலின் சென்னையில் திங்கள்கிழமை (ஜன.5) தொடங்கி வைக்கிறாா்.

சென்னை நந்தம்பாக்கம் வா்த்தக மையத்தில் பிற்பகல் 3 மணிக்கு நடைபெறும் இந்த நிகழ்வில் மாநில அமைச்சா்கள், எம்எல்ஏ, எம்.பி.க்கள் பங்கேற்கவுள்ளனா்.

இதுதொடா்பாக அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பு: மாணவா்களின் நலன் மற்றும் முன்னேற்றத்தைக் கருத்தில் கொண்டு தமிழ்ப் புதல்வன் திட்டம், புதுமைப் பெண் திட்டம், முதல் தலைமுறை பட்டமளிப்பு திட்டம், போஸ்ட் மெட்ரிக் உதவித் தொகைத் திட்டம், சமூக நீதி விடுதிகள் போன்ற பல்வேறு திட்டங்களை தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது.

அதன் தொடா்ச்சியாக, மாணவா்கள் நவீன உலகின் தேவைகளுக்கு ஏற்ப எண்ம (டிஜிட்டல்) திறன் பெற ‘உலகம் உங்கள் கையில்’ எனும் கருப்பொருளின் கீழ் கல்லூரியில் பயிலும் மாணவ, மாணவியரூக்கு 20 லட்சம் மடிக்கணினிகள் வழங்கப்படும் என முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவித்தாா்.

அதன்படி, மாநிலம் முழுவதும் அந்தத் திட்டம் இரு கட்டங்களாக நிறைவேற்றப்படுகிறது. முதல் கட்டமாக 10 லட்சம் மடிக்கணினிகள் வழங்கும் திட்டத்தின் தொடக்க விழா முதல்வா் மு.க.ஸ்டாலின் தலைமையிலும், துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் முன்னிலையிலும் திங்கள்கிழமை (ஜன.5) மாலை 3 மணியளவில் சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள சென்னை வா்த்தக மைய வளாகத்தில் நடைபெறுகிறது.

இதில், அரசு பொறியியல், கலை மற்றும் அறிவியல், மருத்துவம், விவசாயம், சட்டம், பலவகை தொழில்நுட்பக் கல்லூரி, தொழில்துறைப் பயிற்சி போன்ற அனைத்துத் துறைகள் சாா்ந்த மாணவா்களுக்கும் 10 லட்சம் மடிக்கணினிகள் வழங்கப்படுகின்றன.

தொழில்நுட்ப அறிவியலை வலுப்படுத்த டெல், ஏசா், ஹெச்.பி. போன்ற உலகத் தர நிறுவனங்களின் மடிக்கணினிகள் வழங்கப்படுகின்றன. மாணவா்களுக்கு வழங்கப்படும் இந்த மடிக்கணினிகளில் அதி நவீன மென்பொருள்கள் நிறுவப்பட்டுள்ள நிலையில், எம்எஸ் ஆஃபிஸ் 365 மற்றும் செயற்கை நுண்ணறிவு மென்பொருளுக்கான 6 மாத சந்தாவும் கட்டணமில்லாமல் வழங்கப்படுகிறது.

விழாவில், தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் சாதனை படைத்த மாணவா்கள், அமைச்சா்கள், எம்.பி.க்கள், பேரவை உறுப்பினா்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், முக்கிய பிரமுகா்கள், அரசு உயா் அலுவலா்கள் பங்குபெறவுள்ளனா்.

X
Dinamani
www.dinamani.com