

தமிழ்நாட்டில் திமுகவை அகற்றிவிட்டு தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி அமைக்கும் என பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
திமுக ஆட்சி அகற்றப்படும் என்பதை எம்ஜிஆரின் பாடல் வரிகளைக் குறிப்பிட்டு, அப்பாடலையும் பாடி தனது உரையை நயினார் நாகேந்திரன் முடித்தார்.
நயினாா் நாகேந்திரன் அக். 12-ல் தமிழகம் தலைநிமிர தமிழனின் பயணம் என்ற பிரசாரப் பயணத்தை மதுரையில் தொடங்கினாா். அனைத்து மாவட்டங்களிலும் இப்பயணம் முடிவடைந்த நிலையில், இதன் நிறைவு விழா புதுக்கோட்டையில் இன்று (ஜன. 4) நடைபெற்றது.
புதுக்கோட்டை மாவட்டம் பள்ளத்திவயல் பகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சியில், மத்திய அமைச்சர் அமித் ஷா, பியூஷ் கோயல், மத்திய இணை அமைச்சர் எல். முருகன், தமிழக பாஜக முன்னாள் தலைவா்கள் பொன். ராதாகிருஷ்ணன், அண்ணாமலை உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள் பங்கேற்றனர்.
இதில் திமுக ஆட்சியின் ஊழல்களை பட்டியலிட்டி நயினார் நாகேந்திரன் உரையாற்றினார். மேலும், திமுக ஆட்சியால் நிகழும் அவலங்களை சுட்டிக்காட்டி தமிழ்நாட்டு மக்கள் ஆட்சி மாற்றத்தை விரும்புவதாகக் குறிப்பிட்டார்.
கரூர் கூட்ட நெரிசலில் 41 பேர் பலியானதற்கு செந்தில் பாலாஜிதான் காரணம் என்றும், ஆட்சி மாற்றம் வந்தவுடன் குற்றத்திற்கு காரணமானவர்கள் அனைவரும் சிறைக்குச் செல்வார்கள் எனவும் சுட்டிக்காட்டினார்.
மேலும், பாஜக ஆட்சியை தருமம் என்றும், திமுகவை தவறான ஆட்சி என்றும் குறிப்பிட்டு எம்ஜிஆர் பாடலை நயினார் நாகேந்திரன் பாடினார்.
எம்ஜிஆர் பாடலைக் குறிப்பிட்டுப் பேசியதாவது: ''அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி அமைக்கும் கட்சிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும். திமுக ஆட்சி மாற்றப்படும். அதனை அமித் ஷா செய்து முடிப்பார்.
தர்மத்தின் ஆட்சி வரும்போது அதர்மம் வெளியேறும் என்று புரட்சித் தலைவர் எம்ஜிஆர் படத்தில் ஒரு பாடல் உண்டு. 'கண்ணை மறைக்கின்ற காலம் வரும்போது தருமம் வெளியேறலாம். தருமம் அரசாலும் சமயம் வரும்போது தவறு வெளியேறலாம். நல்லவன் லட்சியம் வெல்வது நிச்சயம்.' அமித் ஷாவின் லட்சியம் வெல்வது நிச்சயம் எனப் பாட்டு பாடி, ''இன்று புதுக்கோட்டை. நாளை செயிண்ட் ஜார்ஜ் கோட்டை'' என உரையை முடித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.