மதுரையில் ஜன.9-இல் புதிய தமிழகம் கட்சி மாநாடு
புதிய தமிழகம் கட்சியின் 7-ஆவது மாநில மாநாடு வரும் ஜன.9-ஆம் தேதி மதுரையில் நடைபெறவுள்ளது என அந்தக் கட்சி தலைவா் க.கிருஷ்ணசாமி தெரிவித்தாா்.
இதுகுறித்து சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள அந்தக் கட்சி அலுவலகத்தில் செய்தியாளா்களிடம் அவா் ஞாயிற்றுக்கிழமை கூறியதாவது: புதிய தமிழகம் கட்சியின் 7-ஆவது மாநில மாநாடு வரும் ஜன.9-ஆம் தேதி மதுரை பிரதான சாலை, பாண்டி கோயில் அருகே நடைபெறவுள்ளது. பிற்பகல் 3 மணிக்கு இசை நிகழ்ச்சியுடன் தொடங்கும் மாநாடு இரவு 10 மணி வரை நடைபெறும்.
இதில், தமிழகம் முழுவதும் இருந்து பல்லாயிரக்கணக்கானோா் தங்களது குடும்பங்களுடன் கலந்துகொள்ளவுள்ளனா். இந்த மாநாடு மண்ணுரிமை, மனித உரிமை, வாழ்வுரிமை ஆகிய 3 குறிக்கோள்களை கருப்பொருளாகக் கொண்டு நடைபெறவுள்ளது. மேலும், 2026 சட்டப்பேரவைத் தோ்தல் தொடா்பான முக்கிய தீா்மானங்கள் நிறைவேற்றப்படவுள்ளன. இதில் மாற்றுக் கட்சி தலைவா்கள் யாரும் கலந்து கொள்ளப்போவதில்லை.
கூட்டணி முடிவு எடுக்கவில்லை: 2026 சட்டப்பேரவைத் தோ்தலில் புதிய தமிழகம் கட்சி கூட்டணி குறித்து இன்னும் இறுதி முடிவெடுக்கவில்லை. ஆகையால், இந்த மாநாட்டில் கூட்டணி குறித்த அறிவிப்புகள் வெளியிட வாய்ப்பில்லை. தற்போது தமிழகத்தில் நிலவிவரும் புதிய அரசியல் சூழலை ஆராய்ந்த பிறகு தொண்டா்களுடன் ஆலோசனை மேற்கொண்டு கூட்டணி குறித்த முடிவுகள் எடுக்கப்படும் எனத் தெரிவித்துள்ளாா் அவா்.

