

மாணவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள மடிக்கணினி வெறும் கருவி கிடையாது; அது ஒரு பிரபஞ்சம் என இந்திய விண்வெளி ஆய்வு மையத்தின் முன்னாள் இயக்குநரும் விஞ்ஞானியுமான மயில்சாமி அண்ணாதுரை தெரிவித்துள்ளார்.
மாணவர்களின் திறன் வளர்ச்சி மற்றும் டிஜிட்டல் முன்னேற்றத்திற்காக 10 லட்சம் மடிக்கணினிகள் வழங்கும் உலகம் உங்கள் கையில் திட்டத்தை முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று (ஜன. 5) தொடக்கி வைத்தார்.
சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் முதல்வர் மு.க. ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி, மாநில அமைச்சர்கள், எம்எல்ஏக்கள், எம்.பி.க்கள் பங்கேற்றனர்.
விளையாட்டுத் துறையைச் சேர்ந்த செஸ் சாம்பியன் விஸ்வநாதன் ஆனந்த், பிரக்ஞானந்தா, வைஷாலி உள்ளிட்டோருடன் நடிகர்கள் விஜய் சேதுபதி, கார்த்தி, மணிகண்டன் ஆகியோரும் பங்கேற்றனர்.
நிகழ்ச்சியில் மயில்சாமி அண்ணாதுரை பேசியதாவது:
''எதிர்காலத்தில் செயற்கை அறிவாளி, இயற்கை அறிவாளி என்ற நிலை வரலாம். அடுத்த தலைமுறையை சரியாக படிக்க வைத்து இயற்கையுடன் இணைந்த மனிதனாக இருக்கலாம்.
ஏன்? எதற்கு? எப்படி? என்ற அறிவார்ந்த கேள்விகளால் நம் மூளைக்கு உரம் சேர்க்க வேண்டும். சிறு மடிக்கணினி தனிமனிதனான என்னை வளரச் செய்துள்ளது. என்னுடைய முதல் முயற்சிகள் பலவும் வெற்றி பெற கணினி பெரிதும் உதவின.
பணி நிறைவுக்குப் பிறகு பல அறிவியல் துறை நிகழ்ச்சிகளில் பங்கேற்றுள்ளேன். கருத்தரங்குகளில் பேசுகிறேன். கட்டுரை எழுதுகிறேன். இவை அனைத்துக்கும் எனக்கு உற்ற தோழனாக உள்ளது என்னிடம் உள்ள மடிக்கணினிதான்.
முன்பு பெரிதாக இருந்த கணினி இப்போது சிறிதாகி வருகிறது, ஆனால் அதன் பயன்பாடு அதிகரித்து வருகிறது. செய்யறிவு தொழில்நுட்பத்துடன் கூடிய மடிக்கணினிகள் வெறும் கருவி அல்ல, மாணவர்காளை சாதிக்கச் செய்யும் சக்தி.
சாதி, மதம் என எதுவும் கல்விக்குத் தடையில்லை. ஆனால், மாறிவரும் கல்விச் சூழலில் தினம் தினம் புதுப்பித்துக்கொள்ள வேண்டிய சூழல் உருவாகியுள்ளது. டிஜிட்டல் உலகிற்கு தடை இல்லை.
மடிக்கணினி கையில் வந்தவுடன் மாணவர்கள் சர்வதேச உலகத்தோடு இணைகின்றனர். அரசுக் கல்லூரி மாணவன், தனியார் கல்லூரி மாணவன் என்ற பாகுபாடு மடிக்கணினியால் உடைகிறது.
மடிக்கணினி கற்றலைச் சுகமாக்கும். ஏஐ தொழில்நுட்ப கல்வியை எடுத்துக்கொள்வதின் மூலம் தமிழ்நாடு அடுத்தக்கட்டத்தை நோக்கிச் செல்லும். எதிர்கால பொருளாதாரம் பல்துறை வளர்ச்சியை வேண்டுகிறது. அதற்கு இந்த மடிக்கணினி உதவும்'' எனக் குறிப்பிட்டார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.