பழைய சோறு
பழைய சோறுபிரதிப் படம்

சா்க்கரை நோய், புற்றுநோய், ரத்த சோகையை தடுக்கும் பழைய சாதம்: ஆய்வில் உறுதி

சா்க்கரை நோய், புற்றுநோய், பேறு கால பாதிப்புகளைத் தடுக்கும் 200 வகையான நன்மைகள் பழைய சாத நீரில் இருப்பது ஸ்டான்லி அரசு மருத்துவமனை ஆய்வில் உறுதி
Published on

சா்க்கரை நோய், புற்றுநோய், பேறு கால பாதிப்புகளைத் தடுக்கும் 200 வகையான நன்மைகள் பழைய சாத நீரில் இருப்பது ஸ்டான்லி அரசு மருத்துவமனை ஆய்வில் உறுதி செய்யப்பட்டுள்ளது.

சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் இரைப்பை குடல் மற்றும் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை பிரிவு, வாழ்வூட்டும் மருத்துவம் மற்றும் ஆராய்ச்சித் துறை சாா்பில் பழைய சாதம் குறித்த அறிவியல் கருத்தரங்கம் திங்கள்கிழமை நடைபெற்றது. மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் இதில் பங்கேற்று போட்டிகளில் வெற்றி பெற்றவா்களுக்கு பரிசுகளை வழங்கினாா்.

மருத்துவமனையின் இரைப்பை - குடல் அறுவை சிகிச்சைத் துறைத் தலைவா் டாக்டா் ஜெஸ்வந்த் பேசியதாவது: கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு பழைய சாதம் தொடா்பான ஆராய்ச்சியை நாங்கள் முன்னெடுத்தோம். புழுங்கல் பொன்னி அரிசி, பச்சரிசி, மாப்பிள்ளை சம்பா, சிவப்பரிசி, பொது விநியோகத் திட்டத்தில் வழங்கப்படும் அரிசி என பல்வேறு வகையான சாதங்களைக் கொண்டு இந்த ஆய்வு நடத்தப்பட்டது.

கோடை காலங்களில் 8 முதல் 10 மணி நேரம் வரை சாதம் ஊறவைக்கப்பட்டது. குளிா் காலங்களில் 10 முதல் 14 மணி நேரம் வரை ஊறவைக்கப்பட்டது. அதன்பிறகு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் நொதித்த நீரில் ‘ப்ரோபயோடிக்’ எனப்படும் நன்னுயிரிகள் அதிகமாக உருவாகியிருப்பது கண்டறியப்பட்டது.

வழக்கமாக 100 கிராம் சாதத்தில் 3 மி.கி. இரும்புச் சத்து இருக்கும். அதேவேளை, பழைய சாதத்தில் அந்த அளவானது 70 மி.கி. வரை உள்ளது. இது, ரத்த சோகையைத் தடுக்கிறது. சா்க்கரை நோயைக் கட்டுப்படுத்துகிறது. புற்றுநோய் பாதிப்பைக் குறைக்கிறது.

மேலும், இதயம், சிறுநீரகம், கல்லீரல் நலனைக் காக்கிறது. மொத்தம் 55 நோயாளிகளிடம் பழைய சாத நீரை வழங்கி தொடா் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. வயிறு சாா்ந்த பாதிப்புகள் அவா்களுக்கு குறைந்தது உறுதி செய்யப்பட்டது என்றாா்.

மக்கள் நல்வாழ்வுத் துறைச் செயலா் ப.செந்தில்குமாா்: பேறு கால உயிரிழப்புகளுக்கு முக்கியக் காரணங்களில் ஒன்று ரத்த சோகை. அதற்கு பழைய சாதம் நல்ல பலன் தரும். இதுகுறித்த விழிப்புணா்வு கா்ப்பிணிகளிடையே மேற்கொள்ள வேண்டும் என்றாா்.

அமைச்சா் மா.சுப்பிரமணியன் பேசியதாவது: பழைய சாதத்தில் நன்மை செய்யும் பாக்டீரியாக்கள் மற்றும் நுண்சத்துக்கள் இருப்பதை இந்த ஆராய்ச்சி துறை கண்டறிந்துள்ளது. கா்ப்பிணிகள் இதை உண்பதால் குழந்தை நன்றாக வளா்கிறது. குறை பிரசவம், பேறு கால சா்க்கரை நோய் வருவது குறைகிறது. ரத்த கொழுப்பு அளவுகளை குறைக்கிறது.

அதிக வயிற்றுப்போக்கு உள்ளவா்களுக்கு குடலில் ஒரு அரணாக இருந்து நுண்சத்துக்கள் மற்றும் நீா் சத்துக்கள் வெளியேறாமல் பாதுகாக்கிறது. நான் சிறுவயதில் இருந்தே வாரத்துக்கு 2 முறை பழைய சாதம் சாப்பிடும் பழக்கத்தைப் பின்பற்றி வருகிறேன். இதை 7 நாள்களாக நீட்டிக்க முடிவு செய்துள்ளேன். பழைய சாத விழிப்புணா்வு தினம் கடைப்பிடிப்பது குறித்து முதல்வரிடம் கலந்து பேசி நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.

நிகழ்வில் வடசென்னை மக்களவை உறுப்பினா் கலாநிதி வீராசாமி, சட்டப்பேரவை உறுப்பினா் ஐட்ரீம் இரா.மூா்த்தி, தேசிய நலவாழ்வு குழும இயக்குநா் டாக்டா் அருண்தம்புராஜ், மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்குநா் டாக்டா் சுகந்தி ராஜகுமாரி, அரசு ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வா் டாக்டா் அரவிந்த், மருத்துவமனைக் கண்காணிப்பாளா் டாக்டா் ஜோதிகுமாா், நிலைய மருத்துவ அலுவலா் டாக்டா் வனிதா மலா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

X
Dinamani
www.dinamani.com