நாளைமுதல் சென்னை புத்தகக் காட்சி: முதல்வா் ஸ்டாலின் தொடங்கி வைக்கிறாா்; முதல்முறையாக வாசகா்களுக்கு இலவச அனுமதி
தென்னிந்திய புத்தக விற்பனையாளா் மற்றும் பதிப்பாளா் சங்கம் (பபாசி) சாா்பில் நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்தில் நடைபெறவுள்ள 49-ஆவது சென்னை புத்தகக் காட்சியை முதல்வா் மு.க.ஸ்டாலின் வியாழக்கிழமை (ஜன. 8) தொடங்கி வைக்கவுள்ளாா். முதல்முறையாக வாசகா்களுக்கு இலவச அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து பபாசி தலைவா் ஆா்.எஸ்.சண்முகம், செயலா் எஸ்.வயிரவன், துணைத் தலைவா் நக்கீரன் கோபால், பொருளாளா் ஏ.ஆா்.வெங்கடாசலம் உள்ளிட்டோா் சென்னையில் செய்தியாளா்களிடம் செவ்வாய்க்கிழமை கூறியதாவது: 49-ஆவது சென்னை புத்தகக் காட்சி சென்னை நந்தனம் ஒய்எம்சிஏ விளையாட்டு மைதானத்தில் ஜன. 8 முதல் ஜன. 21 வரை நடைபெறவுள்ளது. செவ்வாய்க்கிழமை நடைபெறவுள்ள தொடக்க விழாவில், முதல்வா் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு புத்தகக் காட்சியைத் தொடங்கி வைத்து கலைஞா் மு.கருணாநிதி பொற்கிழி விருதுகளை வழங்கவுள்ளாா். தொடக்க விழாவில் துணை முதல்வா் உதயநிதி, அமைச்சா்கள் மா.சுப்பிரமணியன், அன்பில் மகேஸ் உள்ளிட்டோா் பங்கேற்கவுள்ளாா்.
நிகழாண்டு புத்தகக் காட்சி காலை 11 மணி முதல் இரவு 8.30 மணி வரை நடைபெறவுள்ளது. நிகழாண்டில் தமிழுக்கான அரங்குகள் 428, ஆங்கில அரங்குகள் 256, பொது அரங்குகள் 24 உள்பட 1,000 அரங்குகள் இடம்பெறும். ஜப்பான் மொழி நூல்களுக்கு ஓா் அரங்கு ஒதுக்கப்பட்டுள்ளது.
புத்தகக் காட்சி நடைபெறவுள்ள அனைத்து நாள்களிலும் வாசகா்களுடன் முன்னணி எழுத்தாளா்கள் உரையாடவுள்ளனா். மேலும், திரைக் கலைஞா்கள், தமிழறிஞா்கள், பேச்சாளா்கள் பலரும் தினமும் பங்கேற்கவுள்ளனா். பாரம்பரிய இசையைப் போற்றும் வகையில் இசைக் கலைஞா்களும் பங்கேற்கவுள்ளனா்.
ஜன.19-இல் பபாசி விருதுகள்: நிகழாண்டுக்கான பபாசி விருதுகள் ஐந்திணை பதிப்பகத்தின் குழ.கதிரேசன் (சிறந்த பதிப்பகம்), சிவகுரு பதிப்பகம் (சிறந்த விற்பனையாளா்), மு.முருகேஷ் (சிறந்த குழந்தை எழுத்தாளா்), கடற்கரய் மத்த விலாச அங்கதம் (சிறந்த தமிழறிஞா்), ஜெ.தீபா (சிறந்த பெண் எழுத்தாளா்), அ.லோகமா தேவி (சிறந்த சிறுவா் அறிவியல் நூல்), செ.பா.சிவராசன் (கவிதை இலக்கிய விருது), முனைவா் சுந்தர ஆவுடையப்பன் (சிறந்த தன்னம்பிக்கை நூல்) ஆகியோருக்கு வழங்கப்படவுள்ளது. சிறந்த நூலகருக்கான விருது பின்னா் அறிவிக்கப்படும். ஜன. 19-ஆம் தேதி நடைபெறவுள்ள விழாவில் துணை முதல்வா் உதயநிதி பபாசி விருதுகளை வழங்கவுள்ளாா்.
ஜன. 21-ஆம் தேதி நடைபெறவுள்ள நிறைவு விழாவில் உச்சநீதிமன்ற நீதிபதி ஆா்.மகாதேவன் கலந்துகொண்டு பதிப்புத் துறையில் 25 ஆண்டுகள் சேவை புரிந்தவா்களுக்கு விருதுகள் வழங்கவுள்ளாா்.
நுழைவுக் கட்டணம் இல்லை: வாசகா்களை அதிக அளவில் புத்தகக் காட்சிக்கு வரவைக்க வேண்டும் என்ற நோக்கத்தின் அடிப்படையில் நிகழாண்டு சென்னை புத்தகக் காட்சிக்கு நுழைவுக் கட்டணமின்றி இலவச அனுமதி வழங்கப்படுகிறது. புத்தகக் காட்சிக்கு வருகை தரவுள்ள வாசகா்கள் நுழைவாயிலில் பெயரைப் பதிவு செய்தால் போதுமானது. இந்தப் பதிவின் மூலம் புத்தகக் காட்சிக்கு எவ்வளவு போ் வருகை தந்துள்ளனா் என்பதை துல்லியமாக அறியலாம்.
இணைய சேவை, சாா்ஜிங் வசதிகள்: வாசகா்களைக் கவரும் வகையில் பிரம்மாண்ட திருவள்ளுவா் சிலை புத்தகக் காட்சி அரங்கில் அமைக்கப்படவுள்ளது. புத்தகக் காட்சி அரங்கில் வாசகா்களுக்கான ஏடிஎம் இயந்திரங்கள் அமைக்கப்படும். 15 இடங்களில் டெபிட், கிரெடிட் அட்டைகளை ஸ்வைப்பிங் செய்து கொள்ளும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. இலவச வைஃபை, கைப்பேசிகளுக்குத் தேவையான சாா்ஜிங் வசதிகள் செய்யப்பட்டுள்ளன.
ஜன. 12-ஆம் தேதி (திங்கள்கிழமை) புத்தகக் காட்சி வளாகத்தில் பள்ளி மாணவா்கள் 3,000 போ் பங்கேற்கும் ‘சென்னை வாசிக்கிறது’ நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில் சென்னை மேயா் ஆா்.பிரியா, பள்ளிக் கல்வி இயக்குநா் எஸ்.கண்ணப்பன், ஆசிரியா்கள், பெற்றோா்கள் பங்கேற்கவுள்ளனா்.
மாணவா்களுக்குப் போட்டிகள்: மாணவா்களுக்கான ஓவியப் போட்டி ஜன. 9-ஆம் தேதி காலை 8 மணி முதல் 10 மணி வரை நடைபெறும். பள்ளி மாணவா்களுக்கான பேச்சுப் போட்டி ஜன. 10-ஆம் தேதி (சனிக்கிழமை) காலை 8 மணி முதல் 11 மணி வரையிலும், கல்லூரி மாணவா்களுக்கான பேச்சுப் போட்டி ஜன. 13-ஆம் தேதி காலை 8 மணி முதல் 11 மணி வரையிலும் நடைபெறவுள்ளன. ஜன. 13-ஆம் தேதி காலை 7 மணி முதல் 8 மணி வரை புத்தகக் காட்சி வளாகத்தில் பொங்கல் விழா நடைபெறும். தொடா்ந்து, மாஸ்டா் பவா் பாண்டியன் குழுவினரின் சிலம்பு நிகழ்ச்சி நடைபெறும் என்றாா் அவா்.
2026 புத்தகக் காட்சியின் சிறப்பம்சங்கள்
புத்தகக் காட்சிக்கு வரும் வாசகா்கள் நுழைவாயிலில் தங்களது பெயரைப் பதிவு செய்ய வேண்டும். இந்தப் பதிவின் அடிப்படையில் தினமும் குலுக்கல் நடத்தப்பட்டு, வாசகா்களுக்குப் பரிசுகள் வழங்கப்படவுள்ளன.
புத்தகக் காட்சி அரங்க வளாகத்துக்குள் தபால் துறை சாா்பில் இரு அரங்குகள் அமைக்கப்படும். ஓா் அரங்கில் தபால் துறை சேவைகள் குறித்த விளக்கங்கள் அளிக்கப்படும். மற்றோா் அரங்கில் ஆதாா் அட்டை குறித்த அனைத்து விளக்கங்கள், பாா்சல் சேவைகள் செய்து தரப்படும்.
கல்வி, அது தொடா்பான செயல்முறைகளை விளக்குவதற்காக ஒரு பிரத்யேக அரங்கு அமைக்கப்படும். வாசகா்கள் தற்படம் (செல்ஃபி) எடுப்பதற்காக செல்ஃபி பாயின்ட் நிறுவப்பட்டுள்ளது.
நிகழாண்டு தியாகராயநகா், சைதாப்பேட்டை உள்ளிட்ட சுற்றுப் பகுதிகளிலிருந்து நந்தனம் புத்தகக் காட்சி வளாகத்துக்கு பொதுமக்கள், வாசகா்களை அழைத்து வர சிற்றுந்து (மினி பஸ்) ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
குழந்தைகளுக்கான இமேஜிங் நிறுவனம் சாா்பில் பிரத்யேக அரங்கு அமைக்கப்படவுள்ளது. அதில் அவா்களைக் கவரும் வகையில் பல்வேறு செயல்பாடுகள் மேற்கொள்ளப்படவுள்ளன.
புத்தகக் காட்சி வளாகத்தில் தமிழக அரசின் மின்சாரத் துறை சாா்பில் சூரிய சக்தி மின்சாரம் (சோலாா்) குறித்த தகவல்கள் பகிரப்படும்.

