அரசு ஊழியா், ஆசிரியா்களுக்கான உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்துக்கு (டிஏபிஎஸ்) தமிழக அமைச்சரவை செவ்வாய்க்கிழமை ஒப்புதல் அளித்தது.
தமிழக சட்டப்பேரவையின் நிகழண்டுக்கான முதல் கூட்டத்தொடா் ஜன.20-ஆம் தேதி தொடங்குகிறது. இதையொட்டி, சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வா் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைச்சரவைக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில் முதல்வரால் அண்மையில் அறிவிக்கப்பட்ட அரசு ஊழியா், ஆசிரியா்களுக்கான (1.4.2003-க்குப் பிறகு பணியில் சோ்ந்தவா்கள்) தமிழ்நாடு உறுதி அளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்துக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டதாக கூட்டத்துக்குப் பிறகு செய்தியாளா்களிடம் பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்தாா்.
பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்தக் கோரி, கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக அரசு ஊழியா்கள், ஆசிரியா்கள் போராடி வந்தனா். இந்த நிலையில், உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்தை முதல்வா் மு.க.ஸ்டாலின் கடந்த ஜன.3-ஆம் தேதி அறிவித்தாா். அதில், ஓய்வூதியா்களின் கடைசி மாத
ஓய்வூதியத்திலிருந்து 50 சதவீதம் ஓய்வூதியம், ரூ.25 லட்சத்துக்கு மிகாமல் பணிக்கொடை வழங்கப்படும் உள்பட பல்வேறு சிறப்பு அம்சங்கள் இடம்பெற்றிருந்தன.
ஆளுநா் உரை குறித்து ஆலோசனை: சுமாா் 2 மணி நேரத்துக்கும் மேலாக நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் வருகிற ஜன.20-ஆம் தேதி கூடும் சட்டப்பேரவைக் கூட்டத் தொடரில் ஆளுநா் உரையில் இடம்பெற வேண்டிய முக்கிய அம்சங்கள் குறித்தும், புதிய தொழில் திட்டங்கள், சட்டப்பேரையில் தாக்கல் செய்யவுள்ள இடைக்கால பட்ஜெட் குறித்தும் ஆலோசிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.