

உங்கள் கனவை சொல்லுங்கள் திட்டத்துக்கு அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி எதிர்ப்பு தெரிவித்து பதிவிட்டுள்ளார்.
‘உங்கள் கனவைச் சொல்லுங்கள்’ என்ற புதிய திட்டத்தை முதல்வர் மு.க. ஸ்டாலின் ஜன. 9-ஆம் தேதி தொடக்கி வைக்கவுள்ளார்.
தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு குடும்பத்தினரும் தங்களுக்குள்ள கனவுகளையும், மாநில வளர்ச்சி தொடர்பான கனவுகளையும் வெளிப்படுத்தும் வகையில் ‘உங்கள் கனவைச் சொல்லுங்கள்’ திட்டம் அறிமுகம் செய்யப்படவுள்ளது.
சுமார் 50,000 தன்னார்வலர்கள் இந்தத் திட்டத்தில் இடம்பெறுவார்கள். இவா்கள் ஒவ்வொரு குடும்பத்தினரையும் நேரடியாகச் சந்தித்து, அரசின் திட்டங்களால் அந்தக் குடும்பம் பெறும் பயன்கள் மற்றும் அடுத்ததாக அந்தக் குடும்பத்தின் கனவுகள் என்ன என்பதைக் கேட்டுப் பதிவு செய்வார்கள்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தன்னுடைய எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
அவரின் பதிவில், ”திமுக ஆட்சிக்கு வந்து நான்கரை ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையில், நாள்தோறும் ஒரு திட்டத்தை அறிவித்து மக்களை ஏமாற்றுவதை ஒரு வாடிக்கையாகவே கொண்டுள்ளார்கள்.
நேற்றைய தினம் 'உங்கள் கனவை சொல்லுங்கள்' என்று ஒரு திட்டத்தை அறிவித்திருக்கிறார்கள். நான்கரை ஆண்டுகள் மக்களின் அடிப்படை தேவையை கூட நிறைவேற்றாமல், ஆட்சி முடியும் நேரத்தில், 50,000 தன்னார்வலர்களைக் கொண்டு வீடு வீடாகச் சென்று உங்கள் கனவை சொல்லுங்கள் என்று கேட்கப் போகிறார்களாம்.
ஆட்சியில் இருக்கும்போது, மக்களை பற்றி கவலைப்படாமல் , ஆட்சி முடியும் நேரத்தில் மக்களின் கனவைக் கேட்டு அவர்களின் குறையை தீர்க்கப் போகிறேன் என்பது கடைந்தெடுத்த கபட வேலை!
இந்தத் திட்டம் முதலமைச்சரின் திமுக-வின் தேர்தல் வேலையை பார்க்கும் 'PEN' நிறுவனத்திடம் மறைமுகமாக ஒப்படைக்கப் போவதாக செய்திகள் வருகின்றன.
அரசின் பணத்தில், தன்னார்வலர்கள் என்ற முகமுடி அணிந்து கொண்டு திமுக-விற்கு வேலை பார்ப்போர், வீடு வீடாகச் சென்று திமுக-விற்கு வாக்கு சேகரிக்க நடத்தும் ஒரு மோசடி நாடகம்தான் இது.
இதற்கு மக்களின் பணத்தை விரயம் செய்கிறார்கள். இப்படி நிர்வாகம் செய்வதைவிட, அரசு நிர்வாகத்தையே நேரடியாக 'PEN' நிறுவனத்திடம் ஒப்படைத்துவிடலாம்.
மேலும், மக்களின் ஆதார் எண், தொலைபேசி எண் உள்ளிட்ட தனிப்பட்ட விவரங்களை அரசின் வாயிலாக திமுக-வின் தேர்தல் ஆதாயத்திற்காக சேகரிக்க நினைப்பது டிஜிட்டல் தனிநபர் தரவு பாதுகாப்புச் சட்டத்தை மீறுவது மட்டுமன்றி, தேர்தல் ஆணையத்தின் நெறிமுறைகளை தார்மிக அடிப்படையில் மீறும் செயலாகும்.
அரசின் நிதியை இதுபோன்ற தில்லு முல்லு திட்டங்களுக்காக செலவிட்டு, சுய விளம்பரம் தேடும் திமுக அரசை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன்.
மக்களை ஏமாற்றும் இது போன்ற காதில் பூ சுற்றும் வேலையை இனியாவது திமுக அரசு நிறுத்திக்கொள்ள வேண்டும்” என்று குறிப்பிட்டுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.