அதிமுக கூட்டணியில் அன்புமணி தரப்பு பாமகவுக்கு 17 முதல் 20 தொகுதிகள் ஒதுக்கப்படவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, பாமக தலைவர் அன்புமணி இருவரும் இன்று(ஜன. 7) சந்தித்துப் பேசியதையடுத்து இரு கட்சிகளின் கூட்டணி உறுதியாகியுள்ளது.
தமிழகத்தில் வரும் சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் பாமக இணைந்துள்ளதாக எடப்பாடி பழனிசாமி, அன்புமணி இருவரும் கூட்டாக இன்று அறிவித்துள்ளனர்.
மக்கள் விரோத திமுக ஆட்சியை அகற்ற வேண்டும் என்ற லட்சியத்தின் அடிப்படையில் ஒரு வலிமையான தமிழகத்தை உருவாக்க இந்த கூட்டணி உருவாகியுள்ளதாகவும் இந்த கூட்டணி 234 தொகுதிகளில் பெரும்பாலான இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியமைக்கும் என்றும் இபிஎஸ் கூறினார்.
அதேபோல, திமுக மீது மக்கள் மிகுந்த கோபத்தில் இருக்கிறார்கள் என்றும் ஊழல் ஆட்சியை அகற்ற உருவாகியுள்ள எங்கள் கூட்டணி கண்டிப்பாக வெற்றி பெறும் எனவும் அன்புமணி கூறினார்.
பாமகவில் ராமதாஸ், அன்புமணி இடையே மோதல் இருந்து வரும் நிலையில் ராமதாஸ் தரப்பிடமும் அதிமுக பேச்சுவார்த்தையில் ஈடுபட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில் அன்புமணி தரப்பு பாமகவுக்கு அதிமுக தலைமையிலான என்டிஏ கூட்டணியில் 17 முதல் 20 தொகுதிகள் ஒதுக்கப்பட உள்ளதாகவும் ஒரு மாநிலங்களவை சீட் வழங்கப்பட உள்ளதாகவும் உறுதி செய்யப்படாத தகவல்கள் தெரிவிக்கின்றன.
இபிஎஸ், அன்புமணி போட்டியின்போது தொகுதிப்பங்கீடு குறித்த செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த இபிஎஸ், 'தொகுதிகள் ஏற்கெனவே முடிவாகிவிட்டது. அதனை பின்னர் அறிவிப்போம்' என்று கூறியிருந்தார். அதனால் இபிஎஸ்ஸின் அறிவிப்பே இறுதியாக இருக்கும்.
கடந்த பேரவைத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் பாமக 23 தொகுதிகளில் போட்டியிட்டு 5 தொகுதிகளில் வென்றது குறிப்பிடத்தக்கது. தற்போது பாமக இரு பிரிவாக பிரிந்துள்ளதால் அன்புமணி தரப்புக்கு 20 தொகுதிக்கும் குறைவாகவே வழங்கப்படும் என்றும் மீதமுள்ள தொகுதிகள் ராமதாஸ் தரப்புக்கு வழங்கப்படும் என்றும் பேசப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.