அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் பாமக இணைந்துள்ளதாக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, பாமக தலைவர் அன்புமணி இருவரும் கூட்டாக அறிவித்துள்ளனர்.
தமிழ்நாட்டில் இன்னும் ஒரு சில மாதங்களில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் கட்சிகளிடையே கூட்டணி பேச்சுவார்த்தை தீவிரமாக நடைபெற்று வருகிறது.
வரும் தேர்தலில் அதிமுக - பாஜக கூட்டணி மீண்டும் உருவாகியுள்ள நிலையில், அதில் மேலும் சில கட்சிகளை இணைக்க அந்த கூட்டணி முயற்சித்து வருகிறது.
அந்த வகையில் பாமக தலைவர் அன்புமணி இன்று(புதன்கிழமை) அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியைச் சந்தித்துப் பேசினார்.
சென்னை பசுமைவழிச் சாலையில் உள்ள எடப்பாடி பழனிசாமியின் வீட்டில் இந்த சந்திப்பானது நடைபெற்றது.
அதிமுகவில் ஜெயக்குமார், சி.வி.சண்முகம், பாமகவில் வழக்கறிஞர் பாலு, திலகபாமா ஆகியோரும் இந்த சந்திப்பில் கலந்துகொண்டனர்.
இதன்பின்னர் எடப்பாடி பழனிசாமி, அன்புமணி இருவரும் கூட்டாக செய்தியாளர்களுடன் பேசினர்.
முதலில் இபிஎஸ் பேசுகையில்,
"பேரவைத் தேர்தலையொட்டி ஏற்கெனவே அதிமுக - பாஜக கூட்டணி அமைக்கப்பட்டுவிட்டது. தற்போது எங்கள் கூட்டணியில் பாமக இணைந்துள்ளது. அதிமுக, பாஜக, பாமக ஆகிய கட்சிகள் தற்போது கூட்டணியில் உள்ளன. மேலும் சில கட்சிகள் விரைவில் எங்கள் கூட்டணியில் சேருவார்கள்.
இது இயற்கையான கூட்டணி. எங்கள் நிர்வாகிகள், தொண்டர்கள் விரும்பியவாறு நாங்கள் இந்த கூட்டணியை அமைத்துள்ளோம். இரு கட்சியில் உள்ள தலைவர்கள், நிர்வாகிகளின் விருப்பப்படி இந்த கூட்டணி அமைந்துள்ளது.
எங்கள் கூட்டணி வெற்றிக் கூட்டணி. வரும் தேர்தலில் மக்கள் விரோத திமுக ஆட்சியை அகற்ற வேண்டும் என்ற லட்சியத்தின் அடிப்படையில் ஒரு வலிமையான தமிழகத்தை உருவாக்க மக்களுக்குத் தேவையான திட்டங்களைக் கொடுக்கின்ற ஒரு அரசாக அமைய எங்களுடைய கூட்டணி உருவாகியுள்ளது. எங்கள் கூட்டணி வரும் தேர்தலில் 234 தொகுதிகளில் பெரும்பாலான இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியமைக்கும். அதற்கு கூட்டணி கட்சிகள் இரவு, பகல் பாராமல் உழைத்து சுறுசுறுப்பாக செயல்பட்டு மிகப்பெரிய வெற்றி பெறுவோம். தொகுதிகள் எல்லாம் முடிவு செய்துவிட்டோம். மற்றவை பின்னர் அறிவிப்போம்" என்றார்.
பின்னர் அன்புமணி பேசுகையில், "வரும் பேரவைத் தேர்தலையொட்டி அதிமுக தலைமையிலான கூட்டணியில் பாட்டாளி மக்கள் கட்சி இன்று இணைந்துள்ளது. மகிழ்ச்சியான ஒரு தருணம். எங்கள் தொண்டர்கள் எதிர்பார்த்த கூட்டணியில் நாங்கள் சேர்ந்திருக்கிறோம். வலுவான கூட்டணி. எங்கள் நோக்கம் மக்கள் விரோத திமுக ஆட்சி, ஊழல் செய்கின்ற திமுக ஆட்சி, பெண்களுக்கு எதிரான, சமூக நீதிக்கு எதிரான திமுக ஆட்சி, அரசு ஊழியர்கள், மாணவர்கள், மீனவர்கள், தொழிலாளர்கள் என அத்துணை உழைக்கும் வர்க்கத்திற்கு எதிரான ஊழல் ஆட்சியை அகற்ற வேண்டும் என்ற நோக்கத்திலே அதிமுக தலைமையிலான கூட்டணியில் நாங்கள் இணைந்திருக்கிறோம்.
மிகப்பெரிய வெற்றியை நாங்கள் பார்க்கவிருக்கிறோம். காரணம் சமீபத்தில்கூட 100 நாள்கள் நடைப்பயணம் மேற்கொண்டபோது திமுக மீது மக்கள் மிகுந்த கோபத்தில் இருக்கிறார்கள். கோபம் என்றுகூட சொல்ல முடியாது. மிகுந்த ஆத்திரத்தில் இருக்கிறார்கள். தேர்தல் எப்போது வரும் என்று காத்துக்கொண்டிருக்கிறார்கள். உறுதியாக எங்கள் கூட்டணி மிகப்பெரிய வெற்றி பெற்று அதிமுக ஆட்சியமைக்கும்" என்று தெரிவித்தார்.
பாமக விவகாரம்
பாமகவில் நிறுவனர் ராமதாஸுக்கும் அன்புமணிக்கும் இடையே மோதல் இருந்து வருகிறது. அன்புமணிக்கு கட்சியில் எந்த அதிகாரமும் இல்லை என்று ராமதாஸ் கூறி வருகிறார். மறுபுறம் தேர்தல் ஆணையம், கட்சியின் சின்னத்தை அன்புமணிக்கே ஒதுக்கியுள்ளது.
பாமகவில் ராமதாஸ், அன்புமணி இருவரிடையே சமாதானம் பேசி கூட்டணியில் சேர்க்க முயற்சிக்க வேண்டும் என்று இபிஎஸ்ஸுக்கு அமித் ஷா அறிவுறுத்தியதாக கூறப்படுகிறது.
இதன் தொடர்ச்சியாகவே பாமக தலைவர் அன்புமணி இன்று(புதன்கிழமை) அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியைச் சந்தித்து கூட்டணியையும் உறுதி செய்துள்ளார்.
கடந்த மக்களவைத் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் பாமக இருந்த நிலையில் வரும் பேரவைத் தேர்தலிலும் அது தொடர்கிறது.
ராமதாஸும் விரைவில் கூட்டணி குறித்து அறிவிக்கவுள்ளதாக கூறி வருகிறார். ராமதாஸுடன் அதிமுக பேச்சுவார்த்தையில் ஈடுபடும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
கடந்த பேரவைத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் பாமக 23 தொகுதிகளில் போட்டியிட்டு 5 தொகுதிகளில் வென்றது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.