திமுக மீது மக்கள் மிகுந்த ஆத்திரத்தில் இருக்கிறார்கள் என்று கூட்டணி குறித்த அறிவிப்பின்போது பாமக தலைவர் அன்புமணி கூறியுள்ளார்.
அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, பாமக தலைவர் அன்புமணி இருவரும் இன்று சென்னை பசுமைவழிச் சாலையில் உள்ள இபிஎஸ் வீட்டில் சந்தித்துப் பேசியதையடுத்து கூட்டணி உறுதியாகியுள்ளது.
தமிழகத்தில் வரும் சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் பாமக இணைந்துள்ளதாக எடப்பாடி பழனிசாமி, அன்புமணி இருவரும் கூட்டாக அறிவித்துள்ளனர்.
மக்கள் விரோத திமுக ஆட்சியை அகற்ற வேண்டும் என்ற லட்சியத்தின் அடிப்படையில் ஒரு வலிமையான தமிழகத்தை உருவாக்க இந்த கூட்டணி உருவாகியுள்ளதாகவும் இந்த கூட்டணி 234 தொகுதிகளில் பெரும்பாலான இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியமைக்கும் என்றும் இபிஎஸ் கூறினார்.
இதன்பின்னர் அன்புமணி பேசுகையில்,
"வரும் பேரவைத் தேர்தலையொட்டி அதிமுக தலைமையிலான கூட்டணியில் பாட்டாளி மக்கள் கட்சி இன்று இணைந்துள்ளது. எங்களுக்கு இது மகிழ்ச்சியான ஒரு தருணம். எங்கள் தொண்டர்கள் எதிர்பார்த்த கூட்டணியில் நாங்கள் சேர்ந்திருக்கிறோம். இது வலுவான கூட்டணி. எங்கள் நோக்கம் மக்கள் விரோத திமுக ஆட்சி, ஊழல் செய்கின்ற திமுக ஆட்சி, பெண்களுக்கு எதிரான திமுக ஆட்சி, சமூக நீதிக்கு எதிரான திமுக ஆட்சி, அரசு ஊழியர்கள், மாணவர்கள், மீனவர்கள், தொழிலாளர்கள் என அத்துணை உழைக்கும் வர்க்கத்திற்கு எதிரான ஊழல் ஆட்சியை அகற்ற வேண்டும் என்ற நோக்கத்திலே அதிமுக தலைமையிலான கூட்டணியில் நாங்கள் இணைந்திருக்கிறோம்.
மிகப்பெரிய வெற்றியை நாங்கள் பார்க்கவிருக்கிறோம். காரணம் சமீபத்தில்கூட நான் 100 நாள்கள் நடைப்பயணம் மேற்கொண்டபோது மக்களைச் சந்தித்தபோது தெரிந்தது, திமுக மீது மக்கள் மிகுந்த கோபத்தில் இருக்கிறார்கள். கோபம் என்றுகூட சொல்ல முடியாது. மிகுந்த ஆத்திரத்தில் இருக்கிறார்கள். தேர்தல் எப்போது வரும் என்று அவர்கள் காத்துக்கொண்டிருக்கிறார்கள். உறுதியாக எங்கள் கூட்டணி மிகப்பெரிய வெற்றி பெற்று அதிமுக ஆட்சியமைக்கும்" என்று தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.