

ஆவின் பச்சை நிற பால் பாக்கெட் விலை உயர்த்தப்பட்டதாகப் பரப்பப்படும் செய்தி வதந்தி என்று தமிழ்நாடு தகவல் சரிபார்ப்பகம் விளக்கம் அளித்துள்ளது
"ஆவின் பால் விலை லிட்டருக்கு ரூ. 3 குறைக்கப்படும் என்ற வாக்குறுதியை திமுக அரசு நிறைவேற்றாமல் அதற்குப் பதிலாக ஆவின் பால் விலை இருமடங்கு, அதாவது லிட்டருக்கு ரூ. 6 உயர்த்தப்பட்டுள்ளதாக" சமூக வலைத்தளங்களில் செய்திகள் பரவி வருகின்றன.
இதுகுறித்து தமிழ்நாடு தகவல் சரிபார்ப்பகம் விளக்கம் அளித்துள்ளது.
"ஆவின் பச்சை நிற பால் பாக்கெட் விலை உயர்த்தப்பட்டதாகப் பரப்பப்படும் தகவல் வதந்தி!
கடந்த 2021-ஆம் ஆண்டு தமிழ்நாடு முதலமைச்சராக மு.க. ஸ்டாலின் பொறுப்பேற்றவுடன் ஆவின் பால் விலை லிட்டருக்கு 3 ரூபாய் குறைக்கப்பட்டது.
தற்போது ஆவின் நிறுவனம் அறிமுகப்படுத்தியிருப்பது கிரீன் மேஜிக் பிளஸ் என்ற புதிய வகை பால் பாக்கெட்டாகும். இதில் கூடுதலாக வைட்டமின் ஏ மற்றும் டி செறிவூட்டப்பட்டு உள்ளதுடன் கொழுப்புச் சத்து: 4.5% இதரச் சத்துக்கள்: 9% S.N.F. உயர்த்தப்பட்டு உள்ளது.
கொழுப்புச் சத்து: 4.5% மற்றும் இதரச் சத்துக்கள்: 8.5% S.N.F கொண்ட பழைய ஆவின் கிரீன் மேஜிக் நிலைப்படுத்தப்பட்ட பால் பாக்கெட் தற்போதும் அதே விலையில் கடைகளில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதன் உற்பத்தியும் நிறுத்தப்படவில்லை. தவறான தகவலைப் பரப்பாதீர்!" என்று கூறப்பட்டுள்ளது.
மேலும் தமிழக அரசு இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில்,
"தமிழ்நாட்டில் நாளென்றுக்கு ஆவின் மூலம் 31 லட்சம் லிட்டர் பால் விநியோகம் செய்யப்படுகிறது. குறிப்பாக, சென்னையில் நாளொன்றுக்கு சுமார் 15 லட்சம் லிட்டர் பால் மற்றும் மாதம் ஒன்றுக்கு சுமார் ரூ. 30 கோடி மதிப்பிலான பால் உப பொருட்கள், 35 ஆவின் ஜங்சன் பாலகங்கள், 200 ஆவின் பாலகங்கள் மற்றும் சுமார் 860 சில்லரை விற்பனையாளர்கள் மூலமாக மக்களுக்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
ஆவின் மூலம் பொது மக்களுக்கு சமன்படுத்தப்பட்ட பால், இருமுறை சமன்படுத்தப்பட்ட பால், நிலைப்படுத்தப்பட்ட பால், நிறைகொழுப்பு பால் மற்றும் டிலைட் பால் என ஐந்து வகை பால் பாக்கெட்டுகள் விற்பனை செய்யப்படுகிறது. தமிழ்நாடு முழுவதும் ஆவின் பால் விலை மற்றும் வகைகளில் எவ்வித மாற்றமும் இல்லை. மேலும், தங்கு தடையின்றி ஆவின் பால் அனைத்து பகுதிகளிலும் விநியோகிக்கப்பட்டு வருகிறது.
எனவே, ஆவின் பால் விலையேற்றம் என வெளியிடப்படும் செய்தி முற்றிலும் தவறு மற்றும் ஆதாரமற்றது என தெரிவிக்கப்படுகிறது" என்று கூறப்பட்டுள்ளது.
தற்போது ஆவினில் பச்சை நிற பால் பாக்கெட் (கிரீன் மேஜிக்) 500 மிலி ரூ. 22-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
கடந்த 2024 ஆம் ஆண்டு இறுதியில் பச்சை நிற பால் பாக்கெட்டிற்குப் பதிலாக ஆவின் கிரீன் மேஜிக் பிளஸ் என்ற புதிய வகை பால் அறிமுகம் செய்யப்பட்டது. ஆனால் இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பிய நிலையில் நிறுத்தப்பட்டது. இந்த பால் 450 மிலி விலை ரூ. 25 ஆகும். இந்த கிரீன் மேஜிக் பிளஸ் பால் இன்று டெல்டா மாவட்டங்களின் ஒரு சில பகுதிகளில் விற்பனை செய்யப்படுவதாகத் தகவல்கள் வெளியாகி வருகின்றன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.