

அன்புமணி நடத்தும் கூட்டணி பேச்சு சட்டவிரோதமானது என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, பாமக தலைவர் அன்புமணி இருவரும் இன்று(ஜன. 7) சந்தித்துப் பேசியதையடுத்து இரு கட்சிகளின் கூட்டணி உறுதியானது.
அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் பாமக(அன்புமணி தரப்பு) இணைந்துள்ளதாக எடப்பாடி பழனிசாமி, அன்புமணி இருவரும் கூட்டாக இன்று அறிவித்தனர்.
பாமகவில் ராமதாஸ், அன்புமணி இடையே மோதல் போக்கு நிலவி வருகிறது. இதனிடையே பாமக(அன்புமணி தரப்பு), அதிமுக இடையே கூட்டணி முடிவானது.
இந்த நிலையில், பாமக நிறுவனர் ராமதாஸ், அன்புமணி நடத்தும் கூட்டணி பேச்சு சட்டவிரோதமானது என்று அறிக்கை வெளியிட்டு தெரிவித்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தில்லி உயர் நீதிமன்ற தீர்ப்புக்குப் பிறகு பாட்டாளி மக்கள் கட்சிக்கு ராமதாஸ் மட்டுமே நிறுவனத் தலைவராக இருந்து கட்சியை வழிநடத்தி வருகிறார்.
டிச. 17 முதல் ராமதாஸ் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு செயற்குழு மற்றும் பொதுக்குழுவால் அங்கீகரிக்கப்பட்டு தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியபடி அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
பாட்டாளி மக்கள் கட்சியுடன் தேர்தல் கூட்டணி என்று அன்புமணியுடனோ அல்லது வேறு எவரிடமோ எந்த அரசியல் கட்சியும் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்த இயலாது.
ராமதாஸ் மட்டுமே செயற்குழு மற்றும் பொதுக்குழுவால் தேர்தல் கூட்டணி பேசும் அதிகாரம் பெற்றவர். இந்நிலையில் அன்புமணி பாட்டாளி மக்கள் கட்சி சார்பாக தேர்தல் கூட்டணி பேசியதாக செய்தி வெளியாகி உள்ளது. அந்தத் தகவல் நீதிமன்றத்தை அவமதிக்கும் செயல். அப்படி ஒரு கூட்டணி பேச்சு நடந்திருந்தால் அது சட்ட விரோதம். கட்சி விதிப்படி ராமதாஸ் மட்டுமே, யாருடனும் கூட்டணி பேச உரிமை உள்ளவர்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.