

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் மிகப்பெரிய அரசியல் சக்தியாக மாறிவிட்டார் என்று காங்கிரஸ் கட்சியின் தரவு பகுப்பாய்வுத் துறையின் தலைவர் பிரவீன் சக்கரவர்த்தி தெரிவித்துள்ளார்.
தமிழக காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ஒரு தரப்பினர் திமுகவுக்கு ஆதரவாகவும், மற்றொரு தரப்பினர் எதிராகவும் தொடர்ந்து கருத்து தெரிவித்து வரும் நிலையில், திமுக - காங்கிரஸ் கூட்டணியில் பிளவு ஏற்பட்டுள்ளது.
சமீபத்தில் விஜய்யை நேரில் சந்தித்து பரபரப்பை ஏற்படுத்திய பிரவீன் சக்கரவர்த்தி, தமிழக அரசுக்கு எதிராக எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருந்தது தமிழக அரசியலில் விவாதத்தை ஏற்படுத்தியது.
இந்த நிலையில், இன்று காலை சென்னையில் இருந்து கோவைக்கு செல்வதற்காக விமான நிலையத்துக்கு வருகைதந்த பிரவீன் சக்கரவர்த்தி, ”விஜய்யை சந்தித்தது உண்மைதான், தமிழக அரசை உ.பி.யுடன் ஒப்பிடவில்லை, ஆர்பிஐ தரவுகளைதான் கூறினேன்” என்றார்.
இதனைத் தொடர்ந்து கோவை விமான நிலையத்தில் மீண்டும் செய்தியாளர்களை சந்தித்த பிரவீன் சக்கரவர்த்தி,
“தவெக தலைவர் மிகப்பெரிய அரசியல் சக்தியாக மாறிவிட்டார். மக்கள் நடிகர் விஜய்யைப் பார்க்க வரவில்லை, தலைவர் விஜய்யைப் பார்க்கதான் வருகின்றனர்.
கூடுதல் தொகுதிகள், ஆட்சியில் பங்கு என்பது காங்கிரஸ் தொண்டர்களின் கோரிக்கை. அதிகாரத்தில் பங்கு என்பது காங்கிரஸ் கட்சியின் எதிர்காலத்துக்காக வைக்கப்படும் கோரிக்கை. பலவீனமான நிலையில் சென்றுகொண்டிருக்கும் காங்கிரஸ் கட்சியை பலப்படுத்தும் நேரம் வந்துவிட்டது” எனத் தெரிவித்துள்ளார்.
இதற்கு முன்னதாக ஆட்சியில் பங்கு வேண்டும் என்று தமிழக காங்கிரஸ் எம்பியும், மக்களவை காங்கிரஸ் கொறடாவுமான மாணிக்கம் தாகூர் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.