நாளிதழ் வாசிப்பு கட்டாயம்: தமிழக பள்ளிகளிலும் அமல்படுத்த வேண்டுகோள்

உத்தர பிரதேசம், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களைப் போல தமிழகத்திலும் பள்ளி மாணவர்கள் நாளிதழ் வாசிப்பது கட்டாயமாக்கப்பட வேண்டும் என்ற எதிர்பார்ப்பு மேலோங்கியுள்ளது.
நாளிதழ் வாசிப்பு கட்டாயம்: தமிழக பள்ளிகளிலும் அமல்படுத்த வேண்டுகோள்
Updated on
2 min read

உத்தர பிரதேசம், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களைப் போல தமிழகத்திலும் பள்ளி மாணவர்கள் நாளிதழ் வாசிப்பது கட்டாயமாக்கப்பட வேண்டும் என்ற எதிர்பார்ப்பு மேலோங்கியுள்ளது.

தமிழகத்தில் அரசு, அரசு உதவி பெறும், பகுதி உதவி பெறும், தனியார் பள்ளிகள் என சுமார் 59,000 பள்ளிகள் உள்ளன. இந்தப் பள்ளிகளில் சுமார் 1.20 கோடி மாணவர்கள் பயின்று வருகின்றனர். இந்த மாணவர்களிடையே பாடப் புத்தகங்களைக் கடந்து பொது வாசிப்புப் பழக்கம் என்பது குறைந்து வருவதாக பல்வேறு ஆய்வுகள் மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன.

மாணவர்களிடம் மட்டுமன்றி பொதுமக்களிடமும் வாசிப்புப் பழக்கத்தை ஊக்கப்படுத்துவற்காக மாவட்ட வாரியாக புத்தகத் திருவிழாக்கள் நடத்தப்பட்டு வருகின்றன. பதிப்பக உரிமையாளர்கள், தனியார் அமைப்புகள் சார்பில் சென்னை, மதுரை, ஈரோடு, கோவை, நெல்லை, திண்டுக்கல், நெய்வேலி, காரைக்குடி உள்ளிட்ட இடங்களில் நடத்தப்பட்டு வந்த புத்தகத் திருவிழாக்கள், கடந்த 4 ஆண்டுகளாக மாவட்டந்தோறும் அரசு விழாக்களாக நடத்தப்படுகின்றன. இதற்காக அரசு சார்பில் நிதியும் ஒதுக்கப்படுகிறது.

ஆனாலும், புத்தகம் வாங்கும் அளவுக்கு இளைய தலைமுறையினரிடம் குறிப்பாக பள்ளி மாணவர்களிடம் வாசிப்புத் திறன் எதிர்பார்த்த அளவுக்கு மேம்படவில்லை எனக் கூறப்படுகிறது.

முன்மாதிரி மாநிலங்கள்: தற்போது கைப்பேசி பயன்பாட்டுக்கு தரும் முக்கியத்துவத்தை புத்தக வாசிப்புக்கு மாணவர்கள் தருவதில்லை என்ற குற்றச்சாட்டு உள்ளது. இதுபோன்ற சூழலில், உத்தரபிரதேசம், ராஜஸ்தான் மாநில அரசுகள் அங்குள்ள பள்ளிகளில் நாளிதழ் வாசிப்பைக் கட்டாயமாக்கி உத்தரவிட்டுள்ளன. இந்த உத்தரவு மாணவர்களின் வாசிப்புத் திறனை மேம்படுத்துவதோடு, பாடப் புத்தகங்களைக் கடந்து பல தகவல்களை அறிந்து கொள்வதற்கும் உதவும்.

தமிழகத்திலுள்ள பொது நூலகங்கள், போட்டித் தேர்வுக்காகத் தயாராகும் இளைய தலைமுறையினரின் புகலிடமாக மட்டுமே உள்ளன. இதன் காரணமாக பெரும்பாலான நூலகங்களில் நாளிதழ் வாசிப்பு, பருவ இதழ்கள் வாசிப்புக்கு இடமே இல்லாத சூழல் உள்ளது. நூலகங்களுக்கு வரும் வாசகர்களின் எண்ணிக்கையும் கடந்த சில ஆண்டுகளாகக் குறைந்து வருவதாகக் கூறப்படுகிறது.

இதுபோன்ற சூழலில் நாளிதழ் வாசிப்பை பள்ளி மாணவர்களிடையே ஊக்குவிக்க வேண்டிய அவசியம் தமிழகத்திலும் எழுந்துள்ளது. தமிழகத்தில் தொடங்கப்பட்ட பல திட்டங்களைப் பிற மாநிலங்கள் பின்பற்றி வருகின்றன. அந்த வகையில் உத்தரபிரதேசம், ராஜஸ்தான் மாநில அரசுகள் மேற்கொண்டுள்ள இந்த நாளிதழ் வாசிப்பு முயற்சியை தமிழகத்தின் எதிர்கால சந்ததியினரின் நலனைக் கருத்தில் கொண்டு நடைமுறைப்படுத்தலாம்.

யோசனை: இதுதொடர்பாக திண்டுக்கல் இலக்கியக் களம் அமைப்பின் தலைவர் ரெ.மனோகரன் கூறியதாவது: தமிழகத்தைப் பொருத்தவரை மாணவர்கள் மட்டுமன்றி ஆசிரியர்கள் மத்தியிலும் நாளிதழ் வாசிப்புப் பழக்கம் ஏற்பட வேண்டும். சில பள்ளிகளில் மாணவர்களுக்கு நாளிதழ்கள் விநியோகிக்கப்படுகின்றன. ஆனால், அவற்றை மாணவர்கள் வாசிப்பது குறித்து கண்காணிக்கப்படுவதில்லை. இந்த நடைமுறைச் சிக்கலுக்கு தீர்வு காண வேண்டும்.

6-ஆம் வகுப்புமுதல் அனைத்து மாணவர்களும் நாளிதழ் வாசிக்கும் பழக்கத்தைக் கடைப்பிடிக்க வேண்டும். பிளஸ் 2 வகுப்பு வரை நாளிதழ் வாசிப்பை உறுதி செய்தால், வாழ்நாள் முழுவதும் அந்தப் பழக்கம் தொடரும் என்றார்.

நோக்கம் நிறைவேறவில்லை

எந்த நோக்கத்துக்காக புத்தகத் திருவிழாக்கள் நடத்தப்படுகின்றனவோ அது நிறைவேறவில்லை என்கிறார் பொது நூலகத் துறை அதிகாரி ஒருவர்.

அவர் மேலும் கூறியதாவது: கடந்த சில நாள்களுக்கு முன்பு ஒரு மாவட்டத்தில் புத்தகத் திருவிழா நடைபெற்றது. 80}க்கும் மேற்பட்ட அரங்குகளில் லட்சக்கணக்கான புத்தகங்கள் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன. இதையொட்டி, சிறப்புப் பேச்சாளர்களின் கருத்தரங்குகள் நடத்தப்பட்டன. இந்தக் கருத்தரங்குகளுக்கு வந்த மக்கள், புத்தக அரங்குகளுக்குள் நுழையாமலேயே வெளியேறிவிட்டனர். இதனால், ஆயிரக்கணக்கான ரூபாய் வாடகை செலுத்தி, புத்தகங்களைக் காட்சிப்படுத்தியிருந்த பதிப்பகத்தார்கள் ஏமாற்றத்தோடு திரும்ப வேண்டிய நிலை ஏற்பட்டது. இதுபோன்ற நிலை மாறுவதற்கு, மாணவப் பருவத்திலிருந்தே நாளிதழ், பருவ இதழ்கள் போன்றவற்றை வாசிக்கும் பழக்கத்தை ஏற்படுத்திக்கொள்ள வேண்டும் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com