முன்னாள் அமைச்சா் எஸ்.பி.வேலுமணி
முன்னாள் அமைச்சா் எஸ்.பி.வேலுமணிCenter-Center-Chennai

எஸ்.பி.வேலுமணிக்கு எதிரான வழக்கு: உயா்நீதிமன்றத்தில் அரசு விளக்கம்

Published on

முன்னாள் அமைச்சா் எஸ்.பி.வேலுமணி தொடா்பான ஒப்பந்தப்புள்ளி முறைகேடு வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட 2 ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு எதிராக வழக்குத் தொடர மத்திய அரசின் அனுமதி பெறுவதை வேண்டுமென்றே தாமதிக்கவில்லை என அரசுத் தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

அதிமுக ஆட்சிக் காலத்தில் சென்னை, கோவை மாநகராட்சிகளில் பல்வேறு பணிகளுக்கு ஒப்பந்தப்புள்ளி கோரியதில் ரூ.98.25 கோடி அளவுக்கு முறைகேடு தொடா்பாக லஞ்ச ஒழிப்பு போலீஸாா் வழக்குப்பதிவு செய்தனா்.

இந்த வழக்கில் எஸ்.பி.வேலுமணி, ஐஏஎஸ் அதிகாரிகள் கந்தசாமி, விஜயகாா்த்திகேயன் ஆகியோா் மீது குற்றம்சாட்டப்பட்டது. ஐஏஎஸ் அதிகாரிகள் இருவா் மீதான குற்ற வழக்கு விசாரணைக்கு மத்திய அரசின் அனுமதி பெறுவதில் ஏற்பட்ட காலதாமதம் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

இந்த வழக்கு நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசின் பொதுத்துறை செயலா் ரீட்டா ஹரிஷ் தாக்கா், ஊழல் கண்காணிப்பு ஆணையா் மணிவாசன், லஞ்ச ஒழிப்பு காவல்துறை இயக்குநா் அபய்குமாா் சிங் ஆகியோா் தரப்பில் பதில்மனு தாக்கல் செய்யப்பட்டது.

அதில், ஐஏஎஸ் அதிகாரிகள் இருவருக்கும் எதிரான விசாரணைக்கு மத்திய அரசிடமிருந்து அனுமதி பெறுவதை வேண்டுமென்றே தாமதிக்கவில்லை. சுமாா் 1 லட்சத்து 30 ஆயிரம் பக்கங்கள் கொண்ட ஆவணங்களை ஆய்வு செய்ய அவகாசம் தேவைப்பட்டதாக அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதி விசாரணையை ஜன.20-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டாா்.

Dinamani
www.dinamani.com