நான்காண்டு இடைவெளிக்குப் பிறகு கோதுமை ஏற்றுமதிக்கு அரசு அனுமதி வழங்கி இருப்பது விவசாயிகள் மத்தியில் வரவேற்பைப் பெற்றாலும்கூட, வேளாண் பொருளாதார ஆய்வாளர்கள் மத்திய அரசு அவசரப்பட்டிருக்கிறது என்கிற கருத்தை முன்வைக்கிறார்கள்.
25 லட்சம் டன் கோதுமை மட்டுமல்லாமல், 5 லட்சம் டன் கோதுமை சார்ந்த பொருள்களுக்கும் ஏற்றுமதி அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது. உள்நாட்டு விற்பனை விலை குறைந்துவிடாமல் பாதுகாப்பதும், இந்த முடிவு காரணமாக விவசாயிகள் ஏற்றுமதி மூலம் கூடுதல் ஆதாயம் பெறுவதும் அரசின் முடிவுக்குக் காரணமாகக் கூறப்படுகின்றன.
கோதுமை மாவு, ரவை, மைதா உள்ளிட்ட கோதுமை சார்ந்த பொருள்களை உற்பத்தி செய்பவர்களின் நீண்டநாள் கோரிக்கையை ஏற்று, சில வாரங்களுக்கு முன்பு கோதுமை அரைவை ஆலைகள், வர்த்தகர்கள், சில்லறை விற்பனை மையங்கள், மதிப்புக்கூட்டுப் பொருள்கள் உற்பத்தி செய்பவர்கள் ஆகியோரின் கையிருப்புக்கான வரம்பு அகற்றப்பட்டது. குறிப்பிட்ட அளவுக்குமேல் கோதுமையை வாங்கிக் கிடங்குகளில் கையிருப்பாக வைத்துக் கொள்வதால், செயற்கையாக விலை அதிகரிக்கிறது என்கிற கருத்து நிலவுவதால் அப்படியொரு வரம்பு முன்பு விதிக்கப்பட்டிருந்தது.
கோதுமை சாகுபடிப் பரப்பு இந்தப் பயிராண்டில் 3.34 கோடி ஹெக்டேர் என்று அரசின் புள்ளிவிவரம் தெரிவிக்கிறது. கடந்த ஆண்டின் 3.28 கோடி ஹெக்டேரைவிட சற்று அதிகம். 2025-26-க்கு கோதுமை உற்பத்திக்கான இலக்கு 11.9 கோடி டன் என்று அரசு நிர்ணயித்திருக்கிறது. 2025-26-க்கான கோதுமை கொள்முதல் விலை குவிண்டாலுக்கு (100 கி.கி.) ரூ. 2,585 என்று நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது.
ஜனவரி 1-ஆம் தேதி நிலவரப்படி, அரசின் இந்திய உணவு தானியக் கழகத்தின் (ஃபுட் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா) கிடங்குகளில் 2.75 கோடி டன் கோதுமை கையிருப்பாக இருக்கிறது. அரசின் பல்வேறு மக்கள் நலத் திட்டங்களுக்கு வழங்கப்பட்டாலும்கூட, ஏப்ரல் 1-ஆம் தேதி சுமார் 2 கோடி டன் கிடங்குகளில் இருக்கும் என்று அரசு எதிர்பார்க்கிறது. அந்தப் பின்னணியில்தான் ஏற்றுமதிக்கு அனுமதி அளிக்கும் முடிவை வேளாண் அமைச்சகம் எடுத்திருப்பதாகக் கூறப்படுகிறது.
பருவநிலை தவறுவதால் பிரச்னைகள் ஏற்படுமானால், மகசூலை மட்டுமல்ல, மொத்த உற்பத்தியின் அளவையும் அது பாதிக்கும். அப்படி நேர்ந்தால், சந்தை விலை கடுமையாக அதிகரிக்கும் என்பதுடன், அரசின் கொள்முதலும் கடுமையாகப் பாதிக்கும். விவசாயிகள் அரசின் கொள்முதல் விலைக்கு தாங்கள் உற்பத்தி செய்த கோதுமையை வழங்க முன்வர மாட்டார்கள்.
கோதுமை ஏற்றுமதிக்கு அரசு அனுமதித்திருப்பது என்பது வரவேற்கத்தக்க கொள்கை முடிவுதான் என்பதில் ஐயப்பாடில்லை. அதே நேரத்தில், அறிவிப்பு வெளியாகி இருக்கும் நேரம்தான் சரியில்லையோ என்கிற சந்தேகத்தை எழுப்புகிறது. பருவநிலையில் காணப்படும் நிலையற்ற தன்மையைக் கருத்தில் கொள்ளாமல் கையிருப்பையும், உற்பத்தி எதிர்பார்ப்பையும் மட்டுமே அடிப்படையாகக் கொண்டு முடிவு எடுக்கப்பட்டிருக்கிறதோ என்பதுதான் அந்த ஐயப்பாட்டுக்குக் காரணம்.
தற்போது பயிரிடப்பட்டிருக்கும் 3.34 கோடி ஹெக்டேர் நிலப்பரப்பில் கோதுமை வளர்ந்து வருகிறது. அடுத்த சில வாரங்களில் அவை அறுவடைக்குத் தயாராகிவிடும். வளர்ச்சியின்போது பகல்நேர வெப்ப நிலை 21 முதல் 22 டிகிரி செல்சியஸில் தொடர்ந்தால்தான், கோதுமைப் பயிர்கள் ஆரோக்கியமாக வளர்ந்து, கதிர் செழிப்பாக மகசூலைத் தரும். இப்போது நாம் அந்தக் கடைசிக் கட்டத்தில் இருக்கிறோம்.
வட இந்தியாவில் பல மாநிலங்களில் வழக்கத்தைவிட வெப்பம் அதிகமாகி வருவது கவலையளிக்கிறது. கிழக்கு உத்தர பிரதேசம், பிகார், மத்திய பிரதேசம் உள்ளிட்ட மத்திய இந்தியப் பகுதிகள் பரவலாகக் கோதுமை சாகுபடியில் ஈடுபடும் பகுதிகள். அந்தப் பகுதிகளில் போதுமான அளவு குளிர்கால மழைப்பொழிவு இல்லாததால் காற்றில் ஈரப்பதம் குறைவாகக் காணப்படுகிறது.
இந்த ஆண்டின் பிற்பகுதியில் 'எல் நினோ' ஏற்படுவதற்கான அறிகுறிகள் தெரிகின்றன. அது கடுமையாக இருக்குமா அல்லது பாதிப்பில்லாமல் கடந்து போகுமா என்று இப்போதே கூறிவிட முடியாது. 'எல் நினோ' வறண்ட பருவநிலையை உருவாக்கினால் அது நிச்சயமாக 2026-27 காரிஃப் பருவப் பயிர்களை பாதிக்கக்கூடும்.
இன்னொரு பிரச்னையையும்கூட நாம் பார்க்க வேண்டியதிருக்கிறது. ஆர்ஜென்டீனா உள்ளிட்ட நாடுகளின் கோதுமை டன் ஒன்றுக்கு சுமார் 250 முதல் 260 டாலர் சந்தைப்படுத்தப்படும்போது, இந்திய கோதுமையின் விலை டன் ஒன்றுக்கு 300 டாலர். டாலருக்கு எதிராக ரூபாய் மதிப்பு குறைந்திருந்தும்கூட சர்வதேச சந்தையில் போட்டி போட முடியுமா என்பது கேள்விக்குறி.
நமது கோதுமைப் பயிர்கள் வெப்பம் காரணமாக உற்பத்திக் குறைவை எதிர்கொள்ளும் என்று அச்சம் எழுப்புவதல்ல நோக்கம். ஆனால், அறுவடை முடிவதற்கு முன்பு ஏற்றுமதிகளுக்கு அனுமதித்திருப்பதால், பின்விளைவுகளுக்கும் அரசு தயாராக இருக்க வேண்டும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்
நாட்டின் கோதுமை உற்பத்தி 2% அதிகரிப்பு! 120 மில்லியன் டன் - மத்திய அரசு

தமிழக அரசின் பட்ஜெட் விவசாயிகளுக்கு ஏமாற்றம்
25 லட்சம் டன் கோதுமை ஏற்றுமதிக்கு மத்திய அரசு அனுமதி

25 லட்சம் டன் கோதுமை ஏற்றுமதிக்கு மத்திய அரசு ஒப்புதல்!
வீடியோக்கள்

Podcast | புதிய கட்சி.. புதிய ஆதரவு.. புதிய உடன்பாடு.. சட்டம் ஒழுங்கு! | News and Views | Epi - 13 |
தினமணி வீடியோ செய்தி...

Prof. K.M. Kader Mohideen Interview | இ.யூ.முஸ்லிம் லீக்கிற்கு 2 இடங்கள் போதுமா ? | IUML | DMK Alliance
தினமணி வீடியோ செய்தி...

Dinamani வார ராசிபலன்! | March 15 முதல் 21 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
தினமணி வீடியோ செய்தி...

Valaipechu Anthanan Interview | விஜய்யிடம் இப்போது மனமாற்றம்.. | TVK Vijay | Vijay Trisha issue
தினமணி வீடியோ செய்தி...

