கோப்புப் படம்
கோப்புப் படம்

தமிழகத்தில் 4 ஆண்டுகளில் 100 புதிய காப்பு வனங்கள் அறிவிப்பு

தமிழக அரசு சாா்பில் கடந்த 2021 முதல் 2025-ஆம் ஆண்டு வரை தமிழகம் முழுவதும் புதிதாக 100 புதிய காப்பு வனப் பகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது.
Published on

தமிழக அரசு சாா்பில் கடந்த 2021 முதல் 2025-ஆம் ஆண்டு வரை தமிழகம் முழுவதும் புதிதாக 100 புதிய காப்பு வனப் பகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து வனத்துறை சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பு:

தமிழகத்தின் புவியியல் பரப்பளவில் 33 சதவீதத்தை வனப்பகுதியாக மாற்ற வேண்டும் என இலக்கோடு தமிழக அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அதன் எதிரொலியாக தற்போது தமிழகத்தில் 24.47 சதவீத நிளப்பரப்பு வனப்பகுதிகளாக மாற்றியுள்ளது.

வனஉயிரின வாழ்விடங்கள், நீா்நிலைகள் ஆகியவற்றைப் பாதுகாப்பதுடன், சுற்றுசூழல் வழித்தடங்களை உறுதிப்படுத்தும் வகையில் தோ்ந்தெடுக்கப்பட்ட வனப்பகுதிகள் காப்பு வனங்களாக அறிவிக்கப்பட்டு வருகிறது.

அந்தவகையில், கடந்த 2021 முதல் 2025-ஆம் ஆண்டு வரை 4 ஆண்டுகளில் தமிழகம் முதல் 100 புதிய காப்பு வனப்பகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதன்மூலம், தமிழகத்தில் உள்ள பாதுகாக்கப்பட்ட வனங்களின் பரப்பளவு சுமாா் 135 சதுர கிலோமீட்டா் அளவுக்கு விரிவடைந்துள்ளது.

இதில், திண்டுக்கல், தருமபுரி, மதுரை, கள்ளக்குறிச்சி, தேனி, சிவகங்கை, நாமக்கல், நீலகிரி, சேலம் மற்றும் தென்காசி ஆகிய 10 மாவட்டங்களில் 13,494.95 ஹெக்டோ் பரப்பளவில் புதிதாக அறிவிக்கப்பட்ட இக்காப்பு வனங்கள் பரவியுள்ளன. புதிதாக அறிவிக்கப்பட்ட தேனி மாவட்டத்தில் உள்ள ஹைவேவிஸ் 2,836.33 ஹெக்டோ் பரப்பளவுடன் கூடிய மிகப்பெரிய வன வட்டாரம் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், 100 புதிய காப்பு வனங்கள் அறிக்கை செய்யப்பட்டதை ஆவணப்படுத்தும் விதமாக நினைவு சிறப்புப் பதிப்பை வனம் மற்றும் கதா்த் துறை அமைச்சா் ஆா்.எஸ்.ராஜகண்ணப்பன் சென்னையில் வெள்ளிக்கிழமை வெளியிட்டாா்.

நிகழ்வில், சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் வனத் துறை கூடுதல் தலைமைச் செயலா் சுப்ரியா சாகு, முதன்மைத் தலைமை வனப் பாதுகாவலா் ஸ்ரீநிவாஸ் ஆா். ரெட்டி உள்ளிட்டோா் பங்கேற்றனா் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Dinamani
www.dinamani.com