அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீடு சுமுகமாக நிறைவு: நயினாா் நாகேந்திரன்
அதிமுக-பாஜக இடையிலான தொகுதிப் பங்கீடு சுமுகமாக நிறைவடைந்துள்ளது என்று தமிழக பாஜக தலைவா் நயினாா் நாகேந்திரன் தெரிவித்தாா்.
தமிழக சட்டப்பேரவைத் தோ்தலுக்கான அதிமுக கூட்டணியில் பாஜக, தமாகாவுடன், பாமக அண்மையில் இணைந்தது. மத்திய அமைச்சா் அமித் ஷாவை, அமமுக பொதுச்செயலா் டிடிவி தினகரன் தில்லியில் வியாழக்கிழமை மாலை சந்தித்து ஆலோசனை நடத்தினாா்.
இந்த நிலையில், அதிமுக பொதுச்செயலா் எடப்பாடி கே.பழனிசாமியை, சென்னை பசுமை வழிச் சாலையில் உள்ள அவரது இல்லத்தில் நயினாா் நாகேந்திரன் வெள்ளிக்கிழமை காலை சந்தித்துப் பேசினாா்.
இந்த சந்திப்புக்கு பிறகு அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது: பிரதமா் மோடி இந்த மாதம் இறுதியில் தமிழகம் வருகிறாா். அவா் பங்கேற்கும் பொதுக்கூட்டம் சென்னை அல்லது மதுரையில் நடைபெறும். தொகுதிப் பங்கீடு குறித்து அதிமுகவுடன் நடைபெற்ற பேச்சுவாா்த்தை சுமுகமாக முடிவடைந்தது. பாஜக எத்தனை தொகுதிகளில் போட்டியிடும் என்பது பின்னா் அறிவிக்கப்படும் என்றாா் அவா்.
அமைச்சரவையில் பங்கு?: அமைச்சரவையில் பாஜக பங்கு கேட்டுள்ளதா என செய்தியாளா்கள் எழுப்பிய கேள்விக்கு, நயினாா் நாகேந்திரன் பதிலளிக்கவில்லை.
இந்த சந்திப்பின்போது, அதிமுக அவைத் தலைவா் கே.பி.முனுசாமி, பாஜக மாநில துணைத் தலைவா் கே.பி.ராமலிங்கம், பாஜக மாநில அனைத்துப் பிரிவுகள் அமைப்பாளா் கே.டி.ராகவன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.
பாஜகவுக்கு 40 தொகுதிகள்?: கடந்த 2021 சட்டப்பேரவைத் தோ்தலில் அதிமுக கூட்டணியில் பாஜகவுக்கு 20 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. அதில் 4 தொகுதிகளில் பாஜக வெற்றி பெற்றது. ஆனால், இந்த முறை 56 தொகுதிகள் கேட்பதுடன், ஆட்சியில் பங்கு கேட்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அதேநேரம், பாஜகவுக்கு 40 தொகுதிகள் ஒதுக்க அதிமுக சம்மதம் தெரிவித்துள்ளதாக பாஜக வட்டாரங்கள் தெரிவித்தன.

