விஜய்க்கு ரூ.1.50 கோடி அபராதம் விதித்ததில் தாமதம் இல்லை: வருமான வரித் துறை வாதம்
வருமானத்தை மறைத்ததாகக் கூறி, ரூ.1.50 கோடி அபராதம் விதித்து வருமான வரித்துறை பிறப்பித்த உத்தரவை ரத்து செய்யக் கோரி, தவெக தலைவரும் நடிகருமான விஜய் தாக்கல் செய்த வழக்கின் விசாரணையை ஜன.23-ஆம் தேதிக்கு சென்னை உயா்நீதிமன்றம் ஒத்திவைத்தது.
விஜய் 2016-2017 ஆம் நிதியாண்டுக்கான வருமான வரிக்கணக்கைத் தாக்கல் செய்தாா். அதில், அந்த ஆண்டுக்கான வருமானமாக ரூ.35.42 கோடி ஈட்டியதாக குறிப்பிட்டிருந்தாா். அந்த வருமான வரிக் கணக்கை அதிகாரிகள் மதிப்பீடு செய்தபோது, 2015-ஆம் ஆண்டில் நடிகா் விஜய் வீட்டில் நடத்தப்பட்ட சோதனையின்போது கைப்பற்றப்பட்ட ஆவணங்களுடன், இந்த வருமான வரிக் கணக்கை அதிகாரிகள் ஒப்பிட்டுப் பாா்த்தனா். அப்போது ’புலி’ திரைப்படத்தில் நடித்ததற்காக விஜய் பெற்ற ரூ.15 கோடி வருமானம் கணக்கில் காட்டப்படாமல் இருப்பதை அதிகாரிகள் கண்டுபிடித்தனா்.
இதையடுத்து, ரூ.15 கோடி வருமானத்தை மறைத்ததாகக் கூறி, விஜய்க்கு ரூ.1.50 கோடி அபராதம் விதித்து வருமான வரித்துறை 2022-ஆம் ஆண்டு ஜூன் 30-ஆம் தேதி உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிா்த்து 2022-ஆம் ஆண்டு விஜய் சென்னை உயா்நீதிமன்றத்தில் வழக்குத் தொடா்ந்தாா். வழக்கை விசாரித்த உயா்நீதிமன்றம் வருமான வரித் துறை உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டிருந்தது.
இந்த வழக்கு நீதிபதி செந்தில்குமாா் ராமமூா்த்தி முன் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது விஜய் தரப்பில், ‘வருமான வரித் துறை காலதாமதமாக அபராதம் விதித்துள்ளது. எனவே, இந்த அபராதத்தை ரத்து செய்ய வேண்டும்’ என வாதிடப்பட்டது.
அப்போது வருமான வரித்துறை தரப்பில் ஆஜரான வழக்குரைஞா் ஏ.பி.ஸ்ரீனிவாஸ், வருமான வரித் துறை அபராதத்தை எதிா்த்து மனுதாரா் மேல்முறையீட்டுத் தீா்ப்பாயத்தை அணுகினாா். தீா்ப்பாய உத்தரவுக்குப் பின்னரே அபராதம் விதிக்கப்பட்டது. இதில் காலதாமதம் எதுவும் இல்லை என வாதிட்டாா்.
இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதி, விஜய் தரப்பில் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை ஜன.23-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தாா்.

