

திமுக கூட்டணி நிலையற்றதாக இருப்பதாக பாஜக தலைவர் அண்ணாமலை விமர்சித்துள்ளார்.
திருப்பூரில் பாஜக பொதுக்கூட்டத்தில் அண்ணாமலை பேசுகையில், "அரசியல் என்பது ஒரு படத்தின் மூலமாகத் தீர்மானிக்கப்படுவது அல்ல. முக்கியமான தேர்தல் இது. இவருக்கு போடலாமா? அல்லது புதிதாய் ஒருவருக்குப் போடுவோம் என்று செய்வதற்கு இது சோதனைத் தேர்தல் இல்லை.
திமுகவை அகற்ற வேண்டுமென்றால், அந்த ஆட்சியில் அமர்பவர்களுக்கு ஆட்சி கொடுக்கத் தெரிய வேண்டும்.
ஆட்சி என்பது ஒரு முதலமைச்சர் மட்டுமல்ல; அவருடன் 35 அமைச்சர்களும், 234 தொகுதிகளில் எம்எல்ஏ-க்கள் வர வேண்டும்.
இதனை நாம் தவறவிட்டால், ஆந்திரமும் கர்நாடகமும் முந்தி விடுவர்.
திமுகவின் 4 ஆண்டுகால ஆட்சியில் செய்திருக்கும் தவறுகளைச் சரிசெய்யவே 2 ஆண்டுகள் தேவைப்படும்.
ஒரு பொருள் அதிகமாக இருக்கிறது என்பதற்காக அப்பொருளுக்கு மரியாதை இருப்பதாக பொருளில்லை என்று அறிஞர் அண்ணா கூறியுள்ளார். இந்தியாவில் அதிகமிருக்கும் காகத்தைவிட மயிலைத்தான் தேசிய பறவையாக வைத்திருக்கிறோம்.
தங்கள் கூட்டங்களில் இத்தனை பேர் இருக்கிறார்கள் என்று திமுகவினர் எண்ணிக்கையைச் சொல்லிக் கொண்டிருக்கின்றனர். அவர்களை வைத்துக்கொண்டு யாருக்கும் எந்தப் பயனும் இல்லை.
காங்கிரஸை பொருத்தவரை, ஒரு கால் விஜய்யிடம் செல்லலாமா? அல்லது ஒரு கால் இங்கு வைக்கலாமா? என்ற குழப்பத்தில்தான் உள்ளனர்.
திருமாவளவன் கையை இங்கு கொடுக்கிறார்; ஆனால், அவரின் கண் அங்கு பார்க்கிறது. அவர் எப்போது வெளியில் செல்வார் என்பது அவருக்கே தெரியாது.
திமுகவின் கூட்டணி, கொஞ்சம் கொஞ்சமாக பிய்ந்து ஒட்டிக் கொண்டிருக்கிறது.
அடுத்த 80 நாள்கள் மிக முக்கியமான நாள்கள். திமுகவை வீட்டுக்கு அனுப்ப வேண்டும் என்ற ஒருமித்த கருத்து இருக்க வேண்டும். ஒரு பெரிய மாற்றத்தை தமிழகத்துக்குக் கொடுக்க வேண்டும் என்ற எண்ணம் இருக்க வேண்டும்" என்று தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.