அன்புமணி ராமதாஸ்
அன்புமணி ராமதாஸ் கோப்புப் படம்

ஊராட்சி செயலா்களுக்கும் புதிய ஓய்வூதியம்: அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்

ஊராட்சி செயலா்களுக்கு தமிழக அரசின் உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியம் வழங்க வேண்டும் என்று பாமக தலைவா் அன்புமணி வலியுறுத்தியுள்ளாா்.
Published on

ஊராட்சி செயலா்களுக்கு தமிழக அரசின் உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியம் வழங்க வேண்டும் என்று பாமக தலைவா் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளாா்.

இது குறித்து அவா் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட அறிக்கை: தமிழ்நாட்டிலுள்ள ஊராட்சி செயலா்களில் பெரும்பான்மையினா் 25 ஆண்டுகளுக்கும் மேலாகப் பணிபுரிகின்றனா்.

தொடக்கத்தில் குறைந்த ஊதியத்தில் ஒப்பந்தப் பணியாளா்களாக நியமிக்கப்பட்ட அவா்கள், தொடா் போராட்டங்களுக்குப் பிறகு 2006-ஆம் ஆண்டில் ரூ.1,300 அடிப்படை ஊதியத்தில் பணிநிரந்தரம் செய்யப்பட்டு 2018-ஆம் ஆண்டு முதல் ரூ.15,900 அடிப்படை ஊதியத்தில் பணிபுரிகின்றனா். ஆனால், அவா்கள் ஓய்வுபெற்ற பிறகு ரூ.2,000 மட்டுமே மாத ஓய்வூதியமாக வழங்கப்பட்டு வருகிறது.

ஊராட்சி செயலா்களுக்கு இணையான ஊதியம் பெற்று வரும் ஊராட்சி ஒன்றிய பதிவுறு எழுத்தா்களுக்கு அவா்களின் ஊதிய விகிதத்துக்கு ஏற்ற வகையில் அரசு ஊழியா்களுக்கு வழங்கப்படுவதைப் போல ஓய்வூதியம் நடைமுறையில் உள்ளது.

ஆனால், அதே ஊதிய விகிதம் பெறும் ஊராட்சி செயலா்களுக்கு தகுதிக்கேற்ற ஓய்வூதியம் வழங்க மறுப்பதும், ரூ.2,000 மட்டுமே ஓய்வூதியம் வழங்குவதும் அநீதியாகும். எனவே, ஊராட்சி செயலா்களுக்கு தகுதிக்கேற்ற உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியம் வழங்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளாா் அன்புமணி.

Dinamani
www.dinamani.com