

அடுத்த 2 மணி நேரத்துக்கு 23 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தென்மேற்கு வங்கக் கடலில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் (புயல் சின்னம்), மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழந்தது.
தொடர்ந்து மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து இந்த புயல் சின்னம் சனிக்கழமை பிற்பகலில் வடக்கு இலங்கை கடலோரப் பகுதிகளில், திருகோணமலை மற்றும் யாழ்ப்பாணம் இடையே முல்லைத் தீவுக்கு அருகே காற்றழுத்த தாழ்வு மண்டலமாக கரையைக் கடந்தது.
இதுதொடர்ந்து மேற்கு திசையில் நகர்ந்து படிப்படியாக வலுவிழக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், இதன் காரணமாக இன்று (ஜன. 11) தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் அடுத்த 2 மணி நேரத்துக்கு(காலை 10 மணி வரை) செங்கல்பட்டு, சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் மயிலாடுதுறை, நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர் மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதியில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் ராணிப்பேட்டை, கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, திருப்பூர், கோவை, ஈரோடு, நீலகிரி, நாமக்கல், சேலம், கரூர், திருச்சி, அரியலூர், பெரம்பலூர், விழுப்புரம், கடலூர் மாவட்டங்கள், புதுவையில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.