

அரசியல் கூட்டணிக்காக விஜய்யிடம் சிபிஐ விசாரணை நடைபெற்று வருவதாக காங்கிரஸ் மாநிலத் தலைவர் செல்வப்பெருந்தகை கூறியுள்ளார்.
கரூா் கூட்ட நெரிசல் சம்பவம் தொடா்பான வழக்கின் விசாரணைக்காக தில்லி சிபிஐ அலுவலகத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் திங்கள்கிழமை காலை ஆஜராகியுள்ளார்.
அவரிடம் சுமார் 20 மணி நேரம் விசர்நாய் நடைபெறவுள்ளதாகத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் சென்னையில் இதுகுறித்த செய்தியாளர்களின் கேள்விக்குப் பதிலளித்த காங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலைவர் செல்வப்பெருந்தகை,
"சிங்கம் வாயில் தானாக மாட்டிக்கொண்ட ஒரு கதை சொல்வார்கள். அதுபோல தவெக தலைவர் விஜய் சிபிஐ வலையில் சிக்கி இருக்கிறார். தமிழக அரசு இந்த வழக்கை சிறப்பாக விசாரணை செய்து வந்தது. இந்த விசாரணையில் மிரட்டல்கள் எதுவும் வரபோவதில்லை, நியாயமான விசாரணை நடந்திருக்கும்.
ஆனால், சிபிஐ விசாரணை என்ற பெயரில் பாஜக தன்னுடைய கட்டுப்பாட்டில் எடுத்துக்கொண்டு அனைவரையும் துன்புறுத்தி, தற்போது தவெக தலைவர் விஜய்யை சென்னையில் இருந்து தில்லிக்கு அழைத்திருக்கிறார்கள். அரசியல் ஒப்பந்தத்திற்காக இதுபோன்ற முயற்சியை செய்கிறார்கள். ஆனால் ஒருபோதும் பாஜகவின் முயற்சி வெற்றி பெறாது. இதுதான் உண்மை.
தன்னுடைய அரசியல் ஒப்பந்தத்திற்கு வந்தால் அவர்கள் மீதான வழக்குகள் எல்லாமே காணாமல் போய்விடும். ஒத்துவரவில்லை என்றால் என்னென்ன தொந்தரவு கொடுக்க முடியுமோ பிரச்னை ஏற்படுத்த முடியுமோ ஏற்படுத்துவார்கள். அவர்களுக்கு சாதகமாக இல்லை என்றால் அனைத்தையும் சிதைப்பார்கள், இதுதான் கடந்த கால வரலாறு.
ஆந்திரத்தில் தெலுங்கு தேசம் கட்சி எம்.பி.க்கள் வீட்டில் ரெய்டு நடத்தி குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யும் அளவுக்கு வந்துவிட்டது. பின்னர் அவர்கள் பாஜகவில் சேருவோம் என்று சொன்னவுடன் அனைத்து வழக்குகளும் திரும்பப் பெறப்பட்டுவிட்டது.
பல மாநிலத்தில் பாஜகவுக்கு ஆதரவு தெரிவித்துவிட்டால் அவர்களின் ஊழல் வழக்குகள் அனைத்தும் மறைந்து புண்ணியம் செய்ததுபோல் மாற்றிவிடுவார்கள்" என்று தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.