முதல்வர் ஸ்டாலின்
முதல்வர் ஸ்டாலின்படம்: கோப்பிலிருந்து...

83 மீனவர்கள் கைது: மத்திய அமைச்சருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்!

இலங்கைக் கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்ட மீனவர்களை விடுவிக்க முதல்வர் கடிதம்.
Published on

இலங்கைக் கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்ட மீனவர்களையும், அவர்களது மீன்பிடிப் படகுகளையும் உடனடியாக விடுவிப்பதற்காக உரிய தூதரக நடவடிக்கைகளை மேற்கொள்ள வலியுறுத்தி மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கருக்கு முதல்வர் மு. க. ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த 10 மீனவர்கள் இன்று (ஜன. 13) இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், தமிழ்நாடு மீனவர்கள் மீண்டும் கைது செய்யப்படுவதைத் தடுத்து நிறுத்தவும், இலங்கைக் காவலில் உள்ள தமிழ்நாட்டைச் சேர்ந்த அனைத்து மீனவர்களையும், அவர்களது மீன்பிடிப் படகுகளையும் விடுவிப்பதற்கும் உரிய தூதரக நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ள வலியுறுத்தி, முதல்வர் மு.க.ஸ்டாலின், மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கருக்கு இன்று (ஜன. 13) கடிதம் எழுதியுள்ளார்.

அக்கடிதத்தில், அறுவடைத் திருநாளான பொங்கல் பண்டிகையையொட்டி, தமிழ்நாட்டு மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ள ஒரு துயரச் சம்பவம் தொடர்பாகவும், தொடர்ந்து அவர்கள் எதிர்கொண்டுவரும் இன்னல்கள் தொடர்பாகவும் மத்திய வெளியுறவுத் துறை அமைச்சரின் கவனத்திற்குக் கொண்டு வருவதாக முதல்வர் தெரிவித்துள்ளார்.  

இன்று அதிகாலையில், இயந்திரமயமாக்கப்பட்ட மீன்பிடிப் படகில் மீன் பிடிப்பதற்காக கடலுக்குச் சென்ற ராமநாதபுரத்தைச் சேர்ந்த 10 மீனவர்கள் இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், தமிழ்நாட்டு மீனவர்கள் இதுபோன்று தொடர்ந்து கைது செய்யப்படுவதும், அவர்களின் மீன்பிடிப் படகுகள் சிறைபிடிக்கப்படுவதும் மிகுந்த கவலையளிப்பதாக அவர் தனது கடிதத்தில் வருத்தத்துடன் குறிப்பிட்டுள்ளார்.   

மேலும், தற்போதைய நிலவரப்படி, சமீபத்தில் கைது செய்யப்பட்டவர்கள் உள்பட, இதுவரை மொத்தம் 83 மீனவர்களும், 252 மீன்பிடிப் படகுகளும் இலங்கைவசம் உள்ளதாகவும் முதல்வர் தனது கடிதத்தில் கோடிட்டுக் காட்டியுள்ளார்.  

சிறைபிடிக்கப்பட்டுள்ள மீனவர்களின் குடும்பத்தினர் எதிர்கொள்ளும் துயரமான மற்றும் நிச்சயமற்ற தன்மையைக் கருத்தில் கொண்டும், பொங்கல் பண்டிகையினை தங்கள் குடும்பத்தினருடன் கொண்டாடிட ஏதுவாகவும், கைது செய்யப்பட்டுள்ள அனைத்து மீனவர்களையும், அவர்களது மீன்பிடிப் படகுகளையும் இலங்கை அரசு உடனடியாக விடுவித்திடவும், தொடர்ந்து இதுபோன்ற கைது நடவடிக்கைகளைத் தடுத்திடவும், மத்திய அரசு உரிய தூதரக நடவடிக்கைகளை விரைந்து மேற்கொள்ள வேண்டுமென்று மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கரை முதல்வர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்திக் கேட்டுக் கொண்டுள்ளார்.

Summary

The Chief Minister writes a letter to secure the release of the fishermen captured by the Sri Lankan Navy.

முதல்வர் ஸ்டாலின்
சென்னை சங்கமம் - 2026 : முதல்வர் ஸ்டாலின் நாளை தொடக்கி வைக்கிறார்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Dinamani
www.dinamani.com