2025 ஆம் ஆண்டுக்கான இலக்கிய மாமணி விருதுகள் அறிவிப்பு!

2025-ஆம் ஆண்டுக்கான இலக்கிய மாமணி விருதுகள் அறிவிப்பு...
Tamil developement Dept illakiya Mamani Award announcement
முதல்வர் ஸ்டாலின்.கோப்புப்படம்
Updated on
2 min read

2025-ஆம் ஆண்டுக்கான இலக்கிய மாமணி விருதுகள் தமிழக அரசால் அறிவிக்கப்பட்டுள்ளன.

அதன்படி, மரபுத் தமிழ், ஆய்வுத் தமிழ் மற்றும் படைப்புத் தமிழ்
ஆகிய வகைப்பாட்டில் மூன்று விருதுகள் அறிவித்து முதல்வர் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

பன்னூறு ஆண்டுகளாக வற்றாத படைப்புகளைக் கொண்டு சீரிளமையோடு இலங்கி வரும் தமிழுக்கும், தமிழ்மொழி வளர்ச்சிக்கும் தொண்டாற்றிடும் தமிழ்த்தாயின் அறிஞர் பெருமக்களுக்குத் தமிழ்நாடு அரசு தமிழ் வளர்ச்சித் துறையின் வாயிலாக பல்வேறு விருதுகளையும் சிறப்புகளையும் வழங்கி அவர்தம் புலமைக்கும் தொண்டுக்கும் பெருமை சேர்த்து வருகின்றது.

அவ்வகையில் மரபுத்தமிழ், ஆய்வுத்தமிழ், படைப்புத் தமிழ் ஆகிய மூன்று வகைப்பாட்டில் அறிஞர்களுக்கு ஆண்டுதோறும் உயரிய விருதான இலக்கிய மாமணி விருது வழங்கப்பட்டு வருகிறது.

முத்தமிழறிஞர் கலைஞர் பிறந்தநாளையொட்டி 3.6.2021 அன்று தமிழ்நாடு முதலமைச்சர்மு.க. ஸ்டாலின், தமிழ் எழுத்தாளர்களை ஊக்குவித்து சிறப்பிக்கும் வகையில் இலக்கிய மாமணி என்ற விருது உருவாக்கப்பட்டு தமிழ் இலக்கியத்திற்கு வளம் சேர்க்கும் மூன்று அறிஞர்களுக்கு ஆண்டுதோறும் விருது வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டு, மரபுத்தமிழ், ஆய்வுத் தமிழ், படைப்புத்தமிழ் ஆகிய வகைப்பாட்டில் 2021-ஆம் ஆண்டு முதல் ஆண்டுதோறும் விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது. 

அவ்வரிசையில், 2025-ஆம் ஆண்டிற்கான இலக்கிய மாமணி விருதுகளில் மரபுத் தமிழ் வகைப்பாட்டில் ”உலகின் பல்வேறு நாடுகளில் செம்மாந்த இலக்கிய உரைகளை நிகழ்த்தி வருபவரும் தினமணி நாளிதழில் ஞாயிறு தோறும் கம்பன் தமிழமுதம் என்னும் தலைப்பில் ஆழ்ந்த கட்டுரைகள் எழுதியதோடு தொடர்ந்து பல்வேறு இதழ்களில் எழுதி வருபவரும்  தமிழ்நாட்டில் பல இளைஞர்களுக்கு மேடைப் பேச்சாற்றலுக்கான
நல்வழிகாட்டியாகவும் உந்து சக்தியாகவும் திகழ்ந்து வருபவரும் சென்னை, கம்பன் கழகத்தில் செயற்குழு உறுப்பினராகப் பணியாற்றியவரும் மாபெரும் தமிழறிஞர்களின் வழிகாட்டுதல்களோடு இலக்கியப் பணியாற்றி வரும் இலக்கியச் சுடர் த. இராமலிங்கம் (வயது 68)

ஆய்வுத் தமிழ் வகைப்பாட்டில் இலக்கியப் பேராசான் ஜீவானந்தம், 1959-இல் தொடங்கப்பட்ட தாமரை இலக்கிய இதழின் ஆசிரியராக கடந்த இருபது ஆண்டுகளுக்கும் மேல் பணியாற்றியவரும், இந்திய கம்யூனிஸ்ட் தலைவர்களில் ஒருவரும், சமூக விழிப்பு கொண்ட எழுத்துப் பணிகளை மேற்கொண்டு வருபவரும், சீர்திருத்த மேடைப் பேச்சாளராக அணி செய்பவரும், “வீழ்வேன் என்று நினைத்தாயோ?, “தீக்குள் விரலை வைத்தேன்”, தமிழ்நாடு பிறந்தது (தொகுப்பு)” உள்ளிட்ட 15க்கும் மேற்பட்ட நூல்களை எழுதியவருமான எழுத்தாளர் சி. மகேந்திரன் (வயது 73);

படைப்புத்தமிழ் வகைப்பாட்டில் முத்தமிழறிஞர் கலைஞர் ஆசிரியராக இருந்த ‘நம்நாடு’ வார ஏட்டில்  தொடர்ந்து கட்டுரைகளை எழுதியதோடு, வைகறை முரசு இதழில் தொடர்ந்து எழுதியவரும் தென்காசி திருவள்ளுவர் கழகத்தில் வள்ளுவம் தொடர்பான தொடர் சொற்பொழிவுகளை ஆற்றி வருபவரும்,  திராவிடச் சிந்தனையில் ஆழ்ந்து பல படைப்பு நூல்களை வெளியிட்டதோடு, தமிழ்நாட்டில் இருந்து பல்வேறு அறிஞர்களை அழைத்து இராசபாளையத்தில் அருமையான இலக்கிய நிகழ்ச்சிகளை  நடத்துவதை தொடர் பணியாக செய்யும் அறிவுத்திலகமான விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த இரா. நரேந்திரகுமார் (வயது 74) தெரிவு செய்யப்பெற்றுள்ளனர்.

இலக்கிய மாமணி விருது பெறும் விருதாளர்கள் ஒவ்வொருவருக்கும் விருதுத் தொகையாக ரூபாய் ஐந்து இலட்சம், ஒரு சவரன் தங்கப்பதக்கம், தகுதியுரை ஆகியவை வழங்கப் பெற்று, பொன்னாடை அணிவித்து சிறப்பிக்கப் பெறுவார்கள்.

இவ்விருதுகள் தமிழ்நாடு முதலமைச்சர்
மு.க. ஸ்டாலின் திருவள்ளுவர் திருநாளான 16.01.2026 அன்று வழங்கப்படவுள்ளார்.

Summary

Tamil developement Dept illakiya Mamani Award announcement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com