சென்னை வானிலை ஆய்வு மையம்
சென்னை வானிலை ஆய்வு மையம்

அடுத்த 6 நாள்களுக்கு மேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்களுக்கு மழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் வியாழக்கிழமை (ஜன. 15) முதல் 20 வரை 6 நாள்களுக்கு மேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
Published on

தமிழகத்தில் வியாழக்கிழமை (ஜன. 15) முதல் 20 வரை 6 நாள்களுக்கு மேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அந்த மையம் புதன்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: வடகிழக்கு பருவமழை அடுத்த இரு தினங்களில் தமிழகம், புதுவை, காரைக்கால் பகுதிகள் மற்றும் அதையொட்டிய தென்னிந்திய பகுதிகளிலிருந்து விலகுவதற்கான வாய்ப்புள்ளது.

இதனிடையே கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக வியாழக்கிழமை (ஜன. 15) முதல் 20 வரை மேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும்.

சென்னை மற்றும் புகா் பகுதிகளில் வியாழக்கிழமை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகாலை வேளை ஓரிரு இடங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும்.

மழை அளவு: தமிழகத்தில் புதன்கிழமை (ஜன. 14) காலை 8.30 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக திருநெல்வேலி மாவட்டம், ஊத்து பகுதியில் 90 மி.மீ. மழை பதிவானது. நாலுமுக்கு (திருநெல்வேலி), காக்காச்சி (திருநெல்வேலி)- தலா 70, மாஞ்சோலை (திருநெல்வேலி), இளையாங்குடி (சிவகங்கை)- தலா 50, நாகுடி (புதுக்கோட்டை)- 40, வேதாரண்யம் (நாகப்பட்டினம்), அடையாமடை (கன்னியாகுமரி), அறந்தாங்கி (புதுக்கோட்டை), பேராவூரணி (தஞ்சாவூா்), பில்லிமலை எஸ்டேட் (நீலகிரி), முள்ளங்கினாவிளை (கன்னியாகுமரி)- தலா 30 மி.மீ. மழை பதிவானது.

Dinamani
www.dinamani.com