

தமிழகத்தில் பகுதிநேர ஆசிரியர்களின் ஊதியம் 12,500- லிருந்து 15,000 ஆக உயர்த்தப்படுவதாக அமைச்சர் அன்பில் மகேஸ் அறிவித்துள்ளார்.
பணி நிரந்தரம், சம வேலைக்கு சம ஊதியம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இடைநிலை ஆசிரியர்கள், பகுதிநேர ஆசிரியர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் இன்று பகுதிநேர ஆசிரியர்கள் சங்கங்களுடன் அமைச்சர் அன்பில் மகேஸ் இன்று ஆலோசனை மேற்கொண்டார்.
இதன்பின்னர் அமைச்சர் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார், அதன்படி பகுதிநேர ஆசிரியர்களின் ஊதியம் 12,500- லிருந்து 15,000 ஆக உயர்த்தப்படுவதாகக் கூறியுள்ளார்.
இதுகுறித்து சென்னையில் செய்தியாளர்களுடன் பேசிய அமைச்சர்,
"எஸ்எஸ்ஏ திட்டத்தில் 3,548 கோடி ரூபாய் மத்திய அரசிடம் இருந்து வரவேண்டியுள்ளது. ஆனால் மத்திய அரசு தொடர்ந்து தர மறுக்கிறது. எனினும் ஆசிரியர்களுக்கும் மாணவ, மாணவியர்களுக்கும் உறுதுணையாக அரசு இந்த செலவினங்களை ஏற்றுக்கொண்டு செயல்படுத்தி வருகிறது.
தற்போது ஆசிரியர்களின் போராட்டம் எனக்கு கனத்த இதயத்தைத் தருகிறது என்று முதல்வரிடம் பேசினேன். பொங்கல் பண்டிகை நாளில் மகிழ்ச்சி என்பது வார்த்தையில் மட்டும் இல்லாமல் அவர்களுக்கு உண்மையாகவே மகிழ்ச்சி இருக்க வேண்டும் என்று விரும்பி அவர்களுக்கான ஊதியம் மேலும் ரூ. 2,500 உயர்த்தப்படுகிறது. அதன்படி பகுதிநேர ஆசிரியர்களின் ஊதியம் 12,500- லிருந்து 15,000 ஆக உயர்த்தப்படுகிறது. மேலும் மே மாதத்தில் அவர்களுக்கு ஊதியம் வழங்கப்படாத நிலையில் இனி மே மாதத்தில் 10,000 ஊதியம் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.
பணி நிரந்தரம் குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்துவோம். அவர்களும் சில கருத்துகளைத் தெரிவித்திருக்கிறார்கள்.
பணியின்போது இறந்த 200 இடைநிலை ஆசிரியர்களின் இறப்புக்கும் ஏதாவது நிதியுதவி செய்ய வேண்டும் என்று முதல்வரிடம் கோரிக்கை வைத்துள்ளேன்" என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.