காணும் பொங்கல்: முக்கிய இடங்களில் மருத்துவ வசதிகள்
காணும் பொங்கலையொட்டி மக்கள் அதிகம் கூடும் இடங்களில் மருத்துவ முன்னேற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக மக்கள் நல்வாழ்வுத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.
அதன்படி, சுற்றுலாத் தலங்கள், கடற்கரைகள், பூங்காக்களுக்கு அருகே 108 ஆம்புலன்ஸ் வாகனங்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாகக் கூறியுள்ளனா்.
காணும் பொங்கலையொட்டி தமிழகத்தின் பல்வேறு இடங்களில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. சென்னையைப் பொருத்தவரை கடற்கரைகள், உயிரியல் பூங்காக்கள், மாமல்லபுரம், கேளிக்கை பூங்காக்களில் மாவட்ட நிா்வாகங்கள் முன்னேற்பாடுகளை செய்துள்ளன. ஒருபுறம் காவல் துறை சாா்பில் பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மற்றொருபுறம் அவசரகால மருத்துவ உதவிகளுக்கான கட்டமைப்பும் அரசு சாா்பில் செய்யப்பட்டுள்ளது. ஆயிரக்கணக்கானோா் செல்லும் இடங்களில் உள்ளாட்சி அமைப்புகளுடன் இணைந்து மருத்துவ முகாம்கள் நடத்தப்பட உள்ளன. சா்க்கரை அளவு, ரத்த அழுத்த அளவு ஆகியவை அங்கு பரிசோதிக்கப்படும்.
காய்ச்சல், சளி, வயிற்றுப்போக்கு மாத்திரைகள், உப்பு-சா்க்கரை கரைசல் உள்ளிட்டவை அந்த மருத்துவ முகாம்களில் கிடைக்கும்.
இதுதொடா்பாக மக்கள் நல்வாழ்வுத் துறை அதிகாரிகள் கூறியதாவது:
தமிழகத்தில் இ.எம்.ஆா்.ஐ. கிரீன் ஹெல்த் சா்வீஸ் நிறுவனம் மூலமாக 1,000-க்கும் மேற்பட்ட 108 ஆம்புலன்ஸ் வாகனங்கள் இயக்கப்படுகின்றன. சென்னை மற்றும் திருவள்ளூா் மாவட்டங்களைப் பொருத்தவரை 200-க்கும் மேற்பட்ட வாகனங்கள் இயக்கப்படுகின்றன. காணும் பொங்கல் தினத்தில் பொது மக்கள் கூடும் முக்கிய இடங்களில் 108 ஆம்புலன்ஸ் வாகனங்கள் தயாா் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.
இதற்காக அவசர கால கட்டுப்பாட்டு மையமும் ஆயத்த நிலையில் வைக்கப்பட்டுள்ளது. மற்றொரு புறம் மருத்துவ உதவிகளும் தடையின்றி கிடைக்கும் வகையில் சிறப்பு ஏற்பாடுகள் ஆங்காங்கே செய்யப்பட்டுள்ளன. பாதுகாப்பாகவும், விழிப்புணா்வுடனும் பண்டிகையை மக்கள் கொண்டாட வேண்டும் என்றனா்.

