

தமிழக வெற்றிக் கழகத்தின் தேர்தல் பிரசாரக் குழு அமைக்கப்பட்டுள்ளதாக தலைவர் விஜய் அறிவித்துள்ளார்.
தமிழகத்தில் சட்டப் பேரவைத் தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே இருக்கும் நிலையில், தேர்தலுக்கான பணிகள் சூடிபிடிக்கத் தொடங்கியுள்ளன.
தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அதிமுக, பாஜகவும், திமுக தலைமையில் இந்தியா கூட்டணியும், நாம் தமிழர் கட்சியின் சீமான், தமிழக வெற்றிக் கழகம் உள்ளிட்ட கட்சிகள் தனித்தும் களம்காண இருக்கின்றன.
இந்தியா கூட்டணியில் இருக்கும் காங்கிரஸ், தேமுதிக, ராமதாஸின் பாமக உள்ளிட்ட சில கட்சிகள் இன்னும் தங்கள் கூட்டணியை உறுதிசெய்யாத நிலையில், அந்தக் கட்சிகள் தவெகவுடன் கைகோர்க்குமா? என்ற ஆவலும் அதிகரித்திருக்கிறது.
அதேவேளையில் திமுக, அதிமுக உள்ளிட்ட பிரதான ஆளும், எதிர்க்கட்சிகள் தேர்தல் அறிக்கை தயாரிக்கும் பணியில் தீவிரம் காட்டி வருகின்றன. அதற்கு குழுக்களும் அமைக்கப்பட்டுள்ளன.
தமிழக வெற்றிக் கழகத்தின் தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழு சமீபத்தில் அமைக்கப்பட்டது. அதில், 12 பேர் இடம்பெற்றிருந்த நிலையில், மாநில நிர்வாகக் குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையனுக்கு இடம் வழங்கப்படவில்லை.
இந்த நிலையில், பேரவைத் தேர்தலை எதிர்கொள்ளும் தமிழக வெற்றிக் கழகத்தின் பிரசாரக் குழு அமைக்கப்பட்டுள்ளதாக தவெக தலைவர் விஜய் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்தக் குழுவில் 10 பேர் இடம்பெற்றுள்ளனர். இதில், செங்கோட்டையனும் இடம்பெற்றுள்ளார்.
தவெக தலைவர் விஜய் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ கழகத் தோழர்களுக்கு வணக்கம். தமிழகத்தில் நடைபெற உள்ள சட்டப்பேரவை பொதுத் தேர்தலை முன்னிட்டு, மாநில, மாவட்ட தொகுதி அளவிலான தேர்தல் பிரசாரப் பணிகளை மேற்கொள்ள, பின்வரும் முறையில், தேர்தல் பிரசாரக் குழு அமைக்கப்படுகிறது.
தேர்தல் பிரசாரக் குழு விவரம்
1. என். ஆனந்த்
2. ஆதவ் அர்ஜுனா
3. செங்கோட்டையன்
4. பார்த்திபன்
5. ராஜ்குமார்
6. விஜய் தாமு
7. செல்வம்
8. பிச்சை ரத்தினம் கரிகாலன்
9. செரவு மைதின் (எ) நியாஸ்
10. கேத்ரின் பாண்டியன்
மேற்கண்ட குழுவினர் 234 தொகுதிகளிலும் ஆலோசனைக் கூட்டங்கள், பிரசாரக் கூட்டங்கள் உள்ளிட்டவற்றை நடத்துவது தொடர்பான பணிகளை மேற்கொள்ளும். இந்தக் குழுவிற்கு கழகத் தோழர்கள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்க வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.